செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:58 IST)

குழந்தை பெற்றுக்கொள்ள அர்ஜென்டினாவை நோக்கி படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்

Born Child
சமீப மாதங்களில் ரஷ்யாவை சேர்ந்த 5000 கர்ப்பிணிகள் அர்ஜெண்டினாவிற்குள் நுழைந்துள்ளனர் அதில் 33 பேர் ஒரே விமானத்தில் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேசிய குடிப்பெயர்வு முகமை, சமீபமாக வந்தவர்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் இருப்பதாகத் தெரிவிக்கிறது.

இந்தப் பெண்கள் அர்ஜென்டினாவில் குழந்தை பெற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் அர்ஜென்டினா குடியுரிமையைப் பெற வேண்டும் என வந்துள்ளதாக நம்பப்படுகிறது.

யுக்ரேன் போர் காரணமாக இவர்களின் வருகை அதிகமாக உள்ளதாக அர்ஜென்டினாவின் செய்தித்தாள் லாஅ நாசியன் தெரிவிக்கிறது.

இந்த கர்ப்பிணிப் பெண்களில் சிலர் சுற்றுலாப் பயணிகளாக வந்திருப்பதாகத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் குறித்து கண்டறியப்பட்டபின் அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டனர் என தேசிய குடிப்பெயர்வு முகமையின் தலைவர் ஃப்ளோரென்சியா காரிக்னானோ லா நாசியன் என்ற ஊடகத்திடம் தெரிவித்தார்.

மேலும் அந்தப் பெண்கள் தங்களின் குழந்தைகள் அர்ஜென்டினா குடியுரிமையைப் பெற வேண்டும் என நினைக்கின்றனர். ரஷ்ய பாஸ்போர்ட்டை காட்டிலும் அதற்கு சுதந்திரம் அதிகம் என ஃப்ளோரென்சியா தெரிவித்துள்ளார்.

எங்களின் பாஸ்போர்ட் மிகவும் பாதுகாப்பானது. இதன்மூலம் 171 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தையைக் கொண்டிருந்தால் பெற்றோர்களுக்கும் அந்நாட்டின் குடியுரிமை எளிதாகக் கிடைத்துவிடும். ரஷ்யாவின் பாஸ்போர்ட்டை கொண்டு 87 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும். அதுவும் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வது கடினமாகிவிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே இருந்த விசா ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விசா பெறுவதற்கான விதிமுறைகள் கடினமாக்கப்பட்டதுடன் கூடுதல் ஆவணங்களும் தேவைப்படுகின்றன.

அதேபோல பல்வேறு நாடுகள் ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசாக்களையும் ரத்து செய்துள்ளன. ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

போரிலிருந்து தப்புவது மற்றும் நாட்டின் சுகாதார சேவையிலிருந்து தப்பித்தல் ஒரு காரணமாக இருந்தாலும் அர்ஜென்டினாவின் உயர் தர மருத்துவ வசதி மற்றும் மருத்துவமனைகளாலும் ரஷ்ய பெண்கள் கவரப்படுவதாக லா நேசியன் தெரிவிக்கிறது.

இந்த பிரசவ சுற்றுலா என்பது ஒரு லாபகரமான மற்றும் நன்கு பழக்கப்பட்ட ஒரு நடைமுறையைப் போலத் தெரிகிறது.

ரஷ்ய மொழியில் உள்ள வலைத்தளம் ஒன்றை பிபிசி ஆய்வு செய்தபோது அர்ஜென்டினாவில் பிரசவிக்க விரும்பும் பெண்களுக்குப் பல வகையான பேக்கேஜ்கள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரும்பிய பிரசவத் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வசதி, விமான நிலையத்திலிருந்து வாகன சேவை, ஸ்பானிஷ் மொழி வகுப்பு, அர்ஜென்டினாவில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் சலுகைகள் எனப் பல்வேறு வசதிகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் 5,000 அமெரிக்க டாலரில் எக்கனாமி க்ளாஸ் முதல் 15,000 டாலரில் பிசினஸ் க்ளாஸ் வரை வழங்கப்படுகிறது.

இந்த வலைத்தளத்தின் நிறுவனர் 'பிரசவ சுற்றுலா' மற்றும் குடிபெயர்வுக்கான சேவையை 2015ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருவதாக அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது 100 சதவீதம் அர்ஜென்டினாவை சேர்ந்தது என்றும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்களுக்குப் போலி ஆவணங்களை வழங்கி அவர்கள் அர்ஜென்டினாவில் குடிபெயர வழி செய்யும் சட்டவிரோத கும்பலைக் கண்டுபிடிக்க போலீசார் சோதனைகளில் ஈடுபட்டதாக லா நேசியனில் செய்தி வெளியானது.

இந்தக் கும்பல் இந்த சேவையை வழங்க 35,000 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணமாக வசூலிக்கிறது என போலிசார் கூறுகின்றனர்.

இதுவரை இதுதொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. ஆனால் சில லேப்டாப்கள், குடியமர்வு குறித்த ஆவணங்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.