திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2025 (15:00 IST)

குவாட்ரான்டிட்ஸ்: இந்தாண்டின் சிறந்த எரிகல் பொழிவை எப்போது பார்க்கலாம்? வெறும் கண்ணால் பார்க்கலாமா?

meteor shower

எரிகல் விழும்போது பார்க்க நேர்ந்தால், அந்த சமயத்தில் நாம் எதை நினைக்கிறோமோ அது நிறைவேறும் என்பது பழங்கால நம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையை நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, வானியல் நிகழ்வுகளைப் பார்ப்பது ஒரு அதிர்ஷ்டம்தான்.

 

குவாட்ரான்டிட்ஸ் (Quadrantids) என்னும் 2025 ஆம் ஆண்டின் முதல் 'எரிகல் பொழிவு' (meteor shower), ஜனவரி 3-4 தேதிகளில் உச்சத்தை எட்டும். இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும். டிசம்பர் 28 அன்று தொடங்கிய இந்த எரிகல் பொழிவு, ஜனவரி 12 வரை தொடரும்.

 

சர்வதேச எரிகற்கள் அமைப்பின் (IMO) கூற்றுப்படி, இந்த எரிகல் பொழிவு "இந்தாண்டின் சிறந்த நிகழ்வாக" இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

"இந்த வானியல் நிகழ்வின் உச்சத்தின்போது சரியான சூழல் அமைந்தால், ஒரு மணிநேரத்திற்கு 120 பிரகாசமான தீப்பந்து போன்ற எரிகற்கள் வரை நாம் காண முடியும், இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் விநாடிக்கு 40 கி.மீ. வேகத்தில் நுழைகின்றன" என்று அமெரிக்க விண்வெளி முகமையான நாசா தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், "இந்த நிகழ்வு குறைந்த காலநேரத்திற்கு (6 மணிநேரம்) மட்டுமே நீடிக்கும். ஜனவரி தொடக்கத்தில் நிலவும் மோசமான வானிலை இதற்கு காரணமாக இருக்கலாம்," என்கிறது சர்வதேச எரிகற்கள் அமைப்பு.

 

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான விண்மீன் கூட்டமான குவாட்ரான்ஸ் முராளிஸின் (Quadrans Muralis) நினைவாக இந்த எரிகல் பொழிவுக்கு `குவாட்ரான்டிட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

 

1825 ஆம் ஆண்டில் இத்தாலிய வானியலாளர் அன்டோனியோ புருகலாசியால் அவை முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, அவர் வானத்தின் குறிப்பிட்டப் பகுதியில் இருந்து எரிகற்கள் வெளிப்பட்டதை கவனித்தார்.

 

"அப்போது வானின் வளிமண்டலம், எரிகற்கள் எனப்படும் பல ஒளிரும் பொருட்களால் நிரம்பியுள்ளது," என்று அவர் இந்நிகழ்வை குறிப்பிட்டார்.

 

`குவாட்ரான்டிட்ஸ் எரிகல் பொழிவு' என்பது ஒரு சிறுகோளில் (பாறையால் ஆனது) இருந்து வரும் துகள்களால் ஏற்படுகிறது. மற்ற வகை எரிகற்கள் வால் நட்சத்திரங்களில் இருந்து வருகின்றன. (இது பனி மற்றும் தூசியால் ஆனது)

 

குவாட்ரான்டிட்ஸ் எரிகல் பொழிவை எப்படி பார்ப்பது?
 

குவாட்ரான்டிட் எரிகல்பொழிவை வடக்கு அரைக்கோளத்திலிருந்து சிறப்பாகப் காணமுடியும். அங்கு கதிரியக்கப் புள்ளி அடிவானத்திற்கு மேலே அமைந்துள்ளது. கதிரியக்கப் புள்ளி என்பது எரிகற்கள் தோன்றும் வானத்தின் ஒரு பகுதி.

 

"துரதிர்ஷ்டவசமாக, இந்தச் செயல்பாடு பூமத்திய ரேகையின் தெற்கிலிருந்து அவ்வளவாக தெரியாது, ஏனெனில் வெளிச்சம் குறைவாக இருக்கும், அல்லது கவனிக்கப்படாமல் இருக்கலாம். ஏனெனில் இங்கு கோடையில் இரவு நேரம் மிகவும் குறைவு" என்கிறது சர்வதேச எரிகற்கள் அமைப்பு.

 

இந்த எரிகற்கள் வானில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால், வளிமண்டலம் மெல்லியதாக இருக்கும் அடிவானத்தின் வடக்கே மூன்றில் இரண்டு பங்கு பகுதியே காணக்கூடிய புள்ளியாக இருக்கும்.

 

சில நேரங்களில் எரிகல் பொழிவு நகர்ப்புறங்களிலும் தெரியும். ஆனால், நீங்கள் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்பினால் நகர்ப்புறங்களில் இருந்து சற்று பயணம் செய்து பார்க்க வேண்டும். ஏனெனில், நகர்ப்புறங்களில் அதிக ஒளி மாசு இருக்கும்.

 

"வானம் இருண்டதாக இருந்தால், உண்மையில் மங்கலான எரிகற்களைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்கிறார் லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கிரக விஞ்ஞானியும் எரிகல் நிபுணருமான முனைவர் ஆஷ்லி கிங் கூறுகிறார்.

 

முழு நிலவு தோன்றும் தினத்திலும் எரிகற்களைப் பார்ப்பது கடினம் தான், எனவே `முதற் பிறை நிலா' தோன்றும் நேரத்தில் இருக்கும் எரிகல் பொழிவை பார்ப்பதே சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

 

எரிகல் பொழிவு நிகழ்வு உச்சத்தில் இருக்கும் தினத்தில், வளர்பிறை நிலவு, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வானத்தில் தோன்றும் மற்றும் ஒப்பீட்டளவில் விரைவாக அடிவானத்திற்கு கீழே மறையும், இது ஒளி மாசுபாட்டை குறைத்து எரிகல் பொழிவை தெளிவாகப் பார்க்க உதவும்.

 

இந்த எரிகற்களைப் பார்க்க சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை, ஆனால் பொறுமை அவசியம்.

 

எனவே, நகர விளக்குகளிலிருந்து வெகு தொலைவில் இருண்ட பகுதியைக் கண்டறிந்து, தரையில் படுத்தபடி, இருட்டுக்கு ஏற்றவாறு உங்கள் பார்வையை சரிசெய்ய வேண்டும். இதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகலாம்.

 

"முதல் 10 நிமிடங்களுக்கு உங்களால் எதையும் பார்க்க முடியாமல் போகலாம்" என்கிறார் முனைவர் கிங்.

 

"ஆனால், நீங்கள் குறைந்த வெளிச்சத்திற்குப் பார்க்கப் பழகிவிட்டால், நீங்கள் மேலும் மேலும் எரிகற்களை பார்க்கத் தொடங்குவீர்கள்." என்று விளக்கினார்.

 

எரிகல் பொழிவுக்கு என்ன காரணம்?

 

"எரி நட்சத்திரம்" (shooting stars) என்று அழைக்கப்பட்டாலும், எரிகல் என்பது நட்சத்திரங்கள் அல்ல.

 

அவை நமது சூரிய குடும்பத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சிறிய துகள்கள் ஆகும். அவை, பூமியின் வளிமண்டலத்தைக் கடக்கும்போது எரிந்துவிடும்.

 

பெரும்பாலான எரிகற்கள் சிறிய தூசி துகள்கள் மற்றும் மணல் துகள்களை விட பெரியதாக இருக்காது. மேலும், அவை நம்பமுடியாத வேகத்தில் பயணிக்கின்றன.

 

"இந்த துகள்கள் விண்வெளியின் வெற்றிடத்திலிருந்து தப்பி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது, ​​​​அவை பூமியின் வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் மற்றும் அயனிகளுடன் தொடர்பு கொள்கின்றன, உராய்வு மற்றும் வெப்பத்தை ஏற்படுத்தி, நாம் காணக்கூடிய ஒரு பிரகாசத்தை உருவாக்குகிறது," என்று முனைவர் கிங் விளக்குகிறார்.

 

வால் நட்சத்திரங்கள் மற்றும் சிறுகோள்களில் இருந்து உருவாகும் எரிகற்கள் குழுவின் வழியாக நமது கிரகம் செல்லும் போதும் எரிகற்கள் பொழிவு தோன்றுகிறது.

 

எரிகல் பொழிவின் அடர்த்தியான பகுதி வழியாக நமது கிரகம் நகரும்போது, உச்ச நிகழ்வை, அதாவது அடிக்கடி எரிகற்கள் பொழிவைப் பார்க்க முடிகிறது.

 

இருப்பினும், இந்த முறை குவாட்ரான்டிட்ஸ் எரிகல் பொழிவை நீங்கள் தவறவிட்டால், கவலைப்பட வேண்டாம், இந்த ஆண்டு மற்றொரு எரிகல் பொழிவு ஏற்படும். இருப்பினும் அது தீவிரமாக இருக்காது, மேலும் சில எரிகல் பொழிவு நிகழ்வுகள் தெற்கு அரைக்கோளத்தில் தெளிவாகத் தெரியும்.

 

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு