புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2020 (12:27 IST)

காற்று மாசால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழக்கின்றனர்` - ஆய்வில் தகவல்

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - காற்று மாசால் ஏற்படும் ஆபத்து

காற்று மாசு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழக்கின்றார்கள் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்கிறது தினத்தந்தியின் செய்தி.

ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா உயிரிழப்புகளின் விகிதம் சுமார் 19% ஆகவும், வட அமெரிக்காவில் இது 18% ஆகவும், கிழக்கு ஆசியாவில் 27% ஆகவும் இருப்பதைக் கண்டறிந்தனர்.

கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், கொரோனா வைரஸிலிருந்து இறப்புகளின் விகிதத்தை முதன்முதலில் மதிப்பிட்டுள்ளது. இந்த விகிதாச்சாரங்கள் கொரோனா இறப்புகளின் ஒரு பகுதியின் மதிப்பீடாகும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளில் சுமார் 17 சதவீதம் காற்று மாசுபட்டிருந்ததன் காரணமாக உயிரிழந்திருப்பர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

காற்று மாசால் அதிகபட்சமாக செக் குடியரசில் 29 சதவீத கொரோனா வைரஸ் உயிரிழப்புகளுக்கும், சீனாவில் 27 சதவீதத்திற்கும், ஜெர்மனியில் 26 சதவீதத்திற்கும், சுவிட்சர்லாந்தில் 22 சதவீதத்திற்கும், பெல்ஜியத்தில் 21 சதவீத இறப்புகளுக்கு காற்று மாசுபாடு பங்களித்ததாக தனிப்பட்ட நாடுகளுக்கான மதிப்பீடுகள் காட்டுகின்றன. உலகளாவிய பிராந்தியங்களைப் பொறுத்தவரையில், கிழக்கு ஆசியாவில் இதுபோன்ற இறப்புகளின் விகிதம் 27% ஆக உள்ளது.

தி இந்து - கொரோனா காரணமாக 20 சதவீத மாணவர்களிடம் பாடநூல் இல்லை

கொரோனா வைரஸ் சிக்கல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் கடந்த 7 மாதங்களாகப் மூடப்பட்டுள்ள நிலையில் ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவர்களில் 20 சதவீதம் பேரிடம் பாடநூல்கூட இல்லை என்று ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மாநில வாரியாக கல்வித் தரம், நிலைமை எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு தொண்டு நிறுவனத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'அசர்' கணக்கெடுப்பு அறிக்கை கல்வியாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படும் ஒரு அறிக்கை ஆகும். மாதிரி கணக்கெடுப்பு முறையில் இது நடத்தப்படுகிறது.

கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை (Annual State of Education Report) என்ற ஆங்கிலத் தொடரின் சுருக்கமே அசர்.

கொரோனா வைரஸ் சிக்கலால் கல்வி நிலையங்கள் முடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான அசர் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில் 20 சதவீத ஊரக மாணவர்களிடம் பாடநூல்கூட இல்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாநில வாரியாகப் பார்க்கும்போது ராஜஸ்தானில் 40 சதவீத மாணவர்களிடமும்
ஆந்திரப் பிரதேசத்தில் 35 சதவீத மாணவர்களிடமும் பாடநூல் இல்லை என்றும் அந்த அறிக்கையை மேற்கோள் காட்டுகிறது தி இந்து செய்தி.

செப்டம்பரில் இந்த கணக்கெடுப்பு நடந்த வாரத்தில் இந்தியாவில் ஊரக மாணவர்களில் 3ல் ஒருவர் எந்த கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், 10 பேரில் ஒருவர்தான் லைவாக நடக்கும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொழில்நுட்பம் சார்ந்த பற்றாக்குறையால் மட்டுமே அல்ல. 2018ல் இருந்து இந்தியாவில் திறன் பேசிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. திறன் பேசி வைத்துள்ள மாணவர்களில்கூட மூன்றில் ஒருவருக்கு எவ்விதமான கற்றல் உபகரணங்களும் வந்து சேரவில்லை என்கிறது அந்த செய்தி.

இந்து தமிழ் திசை - 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள்

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்துள்ளன என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தினமும் 50 முதல் 55 குழந்தைகள் பிறக்கின்றன. இந்நிலையில், கடந்த 26-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில், 60 சதவீதம் சுகப்பிரசவம், 40 சதவீதம் சிசேரியன். 4 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று இருந்தது என மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.