வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:40 IST)

பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்: சேரனுக்காக உருகும் வசந்த பாலன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்வின்போது, போட்டியாளர்கள் சரவணன் மற்றும் சேரன் இடையே மோதல் வெடித்தது.
 
இச்சூழலில், இயக்குநர் வசந்த பாலன், பிக்பாஸ் வீட்டைவிட்டு சேரன் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 
 
இதுகுறித்து வசந்த பாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன்.
 
உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன், நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.
திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது. இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.
 
பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்றுதான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய... உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்.
 
இயக்குநர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே, கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பிக்பாஸ் வீட்டில் நடிகர் சரவணன் இயக்குநர் சேரனை அவமதித்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.