பாகிஸ்தான்: இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில், இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதாக அறிவித்தன.
இந்த நடவடிக்கையின் முன்னணியில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (PDM) என்ற கூட்டணி உள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு லாகூரில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, PDM இன் தலைவர் மௌலானா ஃபஸ்ல்-உர்-ரஹ்மான், "இந்த முறைகேடான ஆட்சியாளருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர PDM-ல் உள்ள எல்லா கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன" என்று அறிவித்தார்.
பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தனிப்பெரும்பான்மை மட்டுமே தேவை. நாடாளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர், அதாவது 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், இம்ரான் கான் பதவி விலக வேண்டும்.
ஆளும் பிடிஐக்கு, 155 இடங்கள் உள்ளன. மேலும், அது தன் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் அரசை நடத்துகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு நெருக்கமானவர்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷரீஃப் தாக்கல் செய்ததாக, பாகிஸ்தான் ஊடகத்தை மேற்கோளிட்டு ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது