உலகை திரும்பி பார்க்க வைக்கும் குட்டி தீவின் பெரிய முயற்சி!!
பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பலாவு.
புற ஊதா கதிர்கள், சூரிய வெப்பம் ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தோலை பாதுகாத்துக்கொள்ள, கடற்கரைகளுக்கு செல்பவர்கள் சன் க்ரீம் பூசிக்கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது.
ஆக்சிபென்சீன் (oxybenzone), ஆக்டிநாக்சேட் (octinoxate) உள்ளிட்ட 10 வேதிப்பொருட்களை உள்ளடக்கிய சன் க்ரீம்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது புத்தாண்டு தினம் முதல் இந்தச் சின்னஞ்சிறு தீவு தேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தீவு தேசம் நூற்றுக்கணக்கான தீவுகளை உள்ளடக்கியது. இதன் மொத்த மக்கள்தொகையே சுமார் 20 ஆயிரம்தான். கடலில் முக்குளிப்பவர்களுக்கு 'சிதைக்கப்படாத சொர்க்கம்' என்று இந்த தேசத்தை அதன் அரசு விளம்பரப்படுத்துகிறது.
பலாவுவின் ராக் தீவுகளில் இருக்கும் ஒரு கடற்காயல் (lagoon) யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் இதேபோன்றதொரு தடை 2021 முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள வர்ஜின் தீவுகள், நெதர்லாந்தின் கீழ் உள்ள போனேர் எனும் கரிபீயக் கடலில் உள்ள தீவு ஆகியவற்றிலும் இத்தகைய தடைகள், வரும் காலங்களில் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.