செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:39 IST)

புதுச்சேரியில் மின் துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு - பின்வாங்க மறுக்கும் அரசு நடராஜன் சுந்தர்

புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தனியார் டெண்டரில் இருந்து பின்வாங்க முடியாது என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
 
 
"லாபத்தில் இயங்கக்கூடிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின்துறையைத் தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ததில் அவர் பெற்ற நல்ல பெயரை முதல்வர் ரங்கசாமி இழக்க நேரிடும்," சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தெரிவித்துள்ளார்.
 
 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயங்கி வரும் அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் ஆரம்பகட்ட வேலையை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியது. இதை கண்டித்து புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கினர். அதன் மூலமாக புதுச்சேரி அரசின் இந்த நடவடிக்கையைக் கைவிடக் கோரி போராட்டம் நடத்தினர்.

 
இதற்கிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மின்துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினர். 'தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம்,' என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதியை ஏற்று சில நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தத்தைக் கைவிட்டனர்.
 
 
மின்துறை தனியார்மயத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

 
இந்நிலையில் மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் கோரப்பட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரி அரசு மின்துறைக்கான ஏலத்துக்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கவும், விநியோகத்தில் நூறு சதவீத பங்குகளை வாங்க ஏலத்தாரர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலதாரர்கள் ரூ. 5.90 லட்சம் செலுத்த வேண்டும். வங்கி செக்யூரிட்டியாக ரூ. 27 கோடி இருக்க வேண்டும். இந்த முன்மொழிவுக்கான கோரிக்கை வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ஆம் தேதி இறுதிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இந்த அறிவிப்புக்கு எதிராக புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள், மின்சார பராமரிப்பு ஊழியர்கள் என புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
 
 
100 சதவிகித பங்குகளை தனியாருக்கு வழங்க முடிவு
 
 
இது குறித்து புதுச்சேரி மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு பொதுச் செயலாளர் வேல்முருகனிடம் பிபிசி தமிழ் பேசியது.
 
"கடந்த இரண்டரை ஆண்டுகளாக மின்துறை தனியார்மயமாக்கம் கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். தற்போது திடீரென மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் விட்டுள்ளனர். அதில் 100 சதவீத பங்குகளையும் தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த மின்துறையும், அதில் பணி‌புரியும் ஊழியர்களும் தனியாரிடம் வேலை செய்யும் சூழல் ஏற்படும். மின்துறை ஊழியர்கள் அரசு‌ ஊழியர்களாக நீடிக்க மாட்டார்கள். எங்களுடைய சலுகைகள் அனைத்தும் பறிக்கப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்ற நிலைதான் எங்களுக்கு ஏற்படும்," என்கிறார்‌ அவர்.
 
 
மின்துறை தனியார்மயத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
 
இதுமட்டுமின்றி பொது மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்தைக் குறைந்த விலைக்குப் புதுச்சேரி மாநில அரசு கொடுத்து வருவதாக வேல்முருகன் கூறினார்.
 
குறைந்த விலையில் மின்சாரம் வழங்கும் அரசு
 
"ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.50க்கு வாங்கி, ரூ.1.90க்கு கொடுக்கிறோம். இதே மத்திய அரசு தனியாருக்கு மின்சாரம் விற்பனை செய்யும்போது அரசுக்குக் கொடுத்த விலையை‌ காட்டிலும் கூடுதல் விலைக்குதான் கொடுப்பார்கள்.‌ அதனை வாங்கும் தனியார் நிறுவனம் குறிப்பிட்ட லாபம் வைத்துத்தான் மக்களுக்கு விற்பனை செய்யும். பெரும்‌ முதலீட்டில் மின்துறையை‌ வாங்கும் நிறுவனம், மக்கள் நலன் குறித்து யோசிக்காது. லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும்.
 
ஆகவே, பொது மக்களுக்கு இப்போது ரூ.1.90க்கு கிடைக்கின்ற மின்சாரத்துக்கு ரூ.7க்கு மேல் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் இலவச மின்சாரம் பாதிக்கப்படும். தனியார் நிறுவனம் எப்படி இலவசமாக மின்சாரத்தை விநியோகம் செய்யும்? அதே போன்று 'ஒரு குடிசை ஒரு விளக்கு' திட்டமும் பாதிக்கும். மேலும் சிறு குறு தொழில் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு மின்சாரம் விற்கப்பட்டால் அவற்றால் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்ப்படும்," என தெரிவித்தார்.
 
 
"டெல்லியில் உள்ள மின்துறை நிறுவனம், 50 சதவீதம் நஷ்டத்தில் சென்றதால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் இயங்கும் மின்துறை லாபகரமாகத்‌தான் இயங்கிக் கொண்டு வருகிறது. இதை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை.‌

 
இத்தனை ஆண்டுகளாக மின் துறைக்கு உழைத்து அதை வளப்படுத்தி உள்ளோம், பாதுகாப்பாக வைத்துள்ளோம்.
 
 
முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டனர். இதனால் தற்போது காலவரையற்ற போராட்டம் நடத்த நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இந்த மின்துறை அரசு மின் துறையாகவே நீடிக்க வேண்டும், இந்த டெண்டரை திரும்பப் பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும்," என்கிறார் போராட்டக்குழு பொதுச் செயலாளர்.
 
 
மின்துறை பணிகள் நிறுத்தப்படும்
 
"இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக எங்களது அனைத்து பணிகளும் நடக்காது. மின்சார கட்டணம் வசூலிப்பது, மின் இணைப்பு பாதிக்கப்பட்டால் சரி செய்வது, மின்சார கணக்குகளைப் பதிவு எடுப்பது, பராமரிப்பு வேலைகள் எதிலும் ஈடுபட மாட்டோம். இதனால் ஒட்டுமொத்த மின்துறை பணிகளும் பாதிக்கப்படும்.
 
மத்திய அரசின் அழுத்தம்
 
குறிப்பாக, கடந்த காங்கிரஸ் திமுக ஆட்சியின்போது அப்போது முதல்வராக இருந்த நாராயணசாமி, மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். மேலும், துணைநிலை ஆளுநர் தீர்மானத்திற்கு எதிராக முடிவு எடுத்து, மின்துறையைத் தனியார்மயமாக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்தனர்.

 
தற்போது புதுச்சேரியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றனர்," என்று வேல்முருகன் தெரிவித்தார்.
 
 
மின்துறை தனியார்மயமாக்கப்படுவது குறித்தும் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாகவும் புதுச்சேரி உள்துறை மற்றும் மின்துறை அமைச்சரான நமச்சிவாயத்திடம் பிபிசி தமிழ் பேசியது.
 
 
"இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர், மின்துறை செயலர் மற்றும் இயக்குநர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தோம். மின்துறை பணி உயர்வு சம்பந்தமாகக் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பேசுவதற்காக டெல்லி செல்கிறேன். தற்போது தனியார்மயமாக்கலுக்காக டெண்டர் விடப்பட்டதால், இந்த முறை அதில் இருந்து தளர்வு அளிக்க வலியுறுத்திக் கேட்க இருக்கிறோம். இது குறித்து இந்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசுவோம்," என்கிறார் நமச்சிவாயம்.
 
 
ஆனால், மின்துறை ஊழியர்கள் இந்த டெண்டரை திரும்பபெற வலியுறுத்துகின்றனரே என்று கேட்டதற்கு, "இந்த டெண்டரை திரும்பப் பெற சாத்தியமில்லை," என்று பதிலளித்தார் அமைச்சர்.

 
மேலும் அவர், "ஆரம்பத்திலிருந்து மின்துறை ஊழியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஒரு சில விஷயங்களில் அவர்கள் தீர்க்கமாக இருக்கின்றனர். எல்லா விஷயங்களிலும் அரசாங்கத்தை நிர்பந்திக்க முடியாது. அவர்களது கோரிக்கையை அரசு கேட்கலாமே தவிர, இப்படித்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று அவர்கள் சொல்ல முடியாது. எது நல்லது கெட்டது என்பதை அரசாங்கமே முடிவெடுக்கும்," என்கிறார் அமைச்சர்.
 
 
 
மின்துறை தனியார்வசம் மாறும்போது, அதன் தற்போதைய ஊழியர்களின் சலுகைகள் பாதிக்கப்படுமா? இதுவரை இங்கே பணியாற்றி வரும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் புதுச்சேரி அரசாங்கம் வழங்கி வந்த ஊதியம் மற்றும் சலுகைகள் தொடருமா என்று கேட்டோம்.
 
 
"தனியாரிடம் வழங்கப்பட்ட பின்பு புதுச்சேரி அரசுக்கு இதில் தொடர்பு இருக்காது. மின்துறை தனியார் மையமாக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய பதவிகளும், சம்பளமும், ஓய்வூதிய தொகையும் அப்படியேதான் இருக்கும். அதில் மாற்றம் ஏற்படாது. இவை அனைத்தும் அவர்கள் தனியாரிடம் இருந்து நேரடியாக பெற்றுக் கொள்வார்கள். அங்கே பணிபுரியும் பொறியாளர்கள், மின்துறை ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது," என்று கூறினார் மின்துறை அமைச்சர்.
 
 
 
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் பட்சத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "மின் துறை ஊழியர்களை அழைத்துப் பேச துறை செயலர் மற்றும் இயக்குநரிடம் கூறியுள்ளோம். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சி பதில்
 
இந்த விவகாரம் தொடர்பாக திமுகவை சேர்ந்த புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவாவிடம் பிபிசி பேசியது.

 
"புதுச்சேரியில் மின்துறை நல்ல லாபத்தில் இயங்குகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குறைந்த அளவில் மின் விநியோகம் செய்து, அதிக லாபம் ஈட்டியுள்ளோம். இதுவரைக்கும் மின்வெட்டு, மின் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை. ஏதாவது ஓரிடத்தில் பிரச்னை ஏற்பட்டு விட்டால் அதுவும் உடனே நிவர்த்தி செய்யப்படும். இதைத் தனியார் மயமாக்குவது பற்றி எந்த கட்டத்திலும் கருத்து எழவில்லை. ஆனால், மத்தியில் இருப்பவர்கள் புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு கொடுக்கும்படி கேட்கும்போது, அதற்கு இணக்கமாக இங்கே இருப்பவர்கள் செயல்பட்டனர். இதற்கு எதிராக தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம்.

 
மின்துறை தனியார்மயத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

 
சட்டமன்றத்தில் அனைத்து கட்சி தீர்மானம் போட்டு புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படாது என்று முந்தைய முதலமைச்சர் அறிந்திருந்தார். அப்போது இதே அமைச்சர் நமச்சிவாயம் உறுதியாக தனியார் மயம் ஆகாது என்று கூறினார். அதன் பிறகு வந்த முதல்வர் ரங்கசாமியும் அதையே கூறினார். அதனால் மின்துறை தனியார் மயமாகாது என்று அமைதி காத்தோம். ஆனால் தற்போது மின்துறையைத் தனியாருக்கு கொடுக்க டெண்டர் விட்டுள்ளனர்," என்கிறார் இரா.சிவா.
 
 
ஒருபுறம் இது மின்துறை ஊழியர்களின் பிரச்னையாக இருந்தாலும், இது புதுச்சேரி மாநிலத்தின் உரிமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சியில் மக்களுடைய பிரதிநிதிகளான எங்களுக்குத் தெரியாமல், மறைத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன?" இரா.சிவா கேள்வி எழுப்பினார்.
 
 
"இன்று இந்த துறையை தனியார்மயம் ஆக்க இருக்கிறோம், இதை மாற்ற முடியாது என்று கூறும் அமைச்சர் நமச்சிவாயம் யாருடைய கட்டாயத்தின் பேரில் இதனைச் செய்கின்றார். டெண்டரை திரும்ப பெற முடியாது என்று கூறும் இவர்கள், தனியார்மயமாக்குவதற்கு அபிப்பிராயம் இல்லை என்று கூறலாமே. ஏன் கூற மறுக்கின்றனர்.
 
 
புதுச்சேரி முதலமைச்சர் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ததில் அவர் பெற்ற நல்ல பெயரை இழப்பார் என்றால் இதனால்தான் ஏற்படும். மின்துறையைத் தனியார்மயமாக்கினால் அவருக்குக் கரும்புள்ளி விழும்," என்கிறார் சிவா.
 
 
"மின்துறை தனியார்மயமாக்கலுக்கான காரணம் ஊழியர்களே என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு ஊழியர்கள் மீது தவறு இருந்தால் நிர்வாக ரீதியாக என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின்துறை கட்டுமானத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் அவசியம் என்ன? இந்த பொருளும் மதிப்பீடும் யார் செய்தது? இந்த பொருளுக்கு மதிப்பீடு என்பதை அரசால் ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் குழுவால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் அதை செய்யாமல் அவர்களுக்கு ஏற்ப இந்த டெண்டரை உருவாக்கி அதற்கேற்ப செயல்படுகின்றனர்," என்கிறார் சிவா.