1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (22:50 IST)

ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவு: ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வளர்ச்சி முடிந்துவிட்டதா?

Rajabakshe
இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத குடும்பமாக வரலாற்றில் இடம்பிடித்த ராஜபக்ச குடும்பத்தினர், ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒர் ஆண்டு நிறைவுப்பெற்றுள்ளது.
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஆட்சியில் அமர்ந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது.
 
பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பல நாட்களாக மக்கள் வரிசைகளில் காத்திருந்தனர். நாளொன்றில் சுமார் 15 மணிநேரத்திற்கு அதிக மின்வெட்டு அமலாக்கப்பட்டது. எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு என மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்திருந்தனர்.
 
இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என தெரிவித்து மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வீதியில் இறங்கி போராட தொடங்கினர்.
 
இந்த போராட்டம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டமாக மாற்றம் பெற்று, கடந்த ஆண்டு ஜுலை மாதம் வரை தொடர்ந்தது.
 
இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்து தட்டுப்பாடு: பள்ளி மாணவியை பலி வாங்கிய பொருளாதார நெருக்கடி
 
இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத குடும்பமாக வரலாற்றில் இடம்பிடித்த ராஜபக்ச குடும்பத்தினர், ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்றது
 
இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக, நாட்டில் பல்வேறு அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
 
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஒன்று திரண்ட லட்சக்கணக்கான மக்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் ஆகியவற்றை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக செய்தனர்.
 
இலங்கையில் 3 தசாப்த காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ச குடும்பம், நாட்டில் அசைக்க முடியாத ஒரு அரச குடும்பமாக சிங்கள மக்களினால் அவதானிக்கப்பட்டது.
 
யுத்தம், பௌத்த தேசியவாதம் ஆகியவற்றை மையப்படுத்தி தமது அரசியல் பயணத்தை மேற்கொண்ட ராஜபக்ச குடும்பத்தை, நாட்டிலுள்ள சிங்கள மக்கள் மட்டுமல்ல அனைத்தின மக்களும் ஒன்றிணைந்து ஆட்சியிலிருந்து நீக்கினர்.
 
இந்த நிலையில், தற்போதைய அரசியல் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்காலம் என்ன, அது எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
 
முல்லைத்தீவில் தோண்டப்படும் மனித புதைகுழி - கிடைத்தது விடுதலை புலிகளின் எச்சங்களா? ராணுவம் என்ன சொல்கிறது?
 
 
இந்த விடயம் தொடர்பில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்ஸனிடம், பிபிசி தமிழ் வினவியது.
 
ராஜபக்ச குடும்பத்தின் தற்போதைய நிலைமை என்ன என்பது தொடர்பில் அவர் தெளிவூட்டினார்.
 
''ரணிலை களமிறக்கினாலோ அல்லது அவரது (ராஜபக்ச) கட்சியைச் சேர்ந்த ஒருவரை களமிறக்கினாலோ இனி ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை. ஆனால், ராஜபக்ச குடும்பத்திற்கு இன்றும் ஆதரவான தளமாக இனவாத தளமொன்று காணப்படுகின்றது. அந்த இனவாத தளம் ராஜபக்ச குடும்பத்தை பலமான எதிர்கட்சியாக கொண்டுவரும். பௌத்த தேசிய இனவாத வாக்கு இன்னும் மாறவில்லை. " என அவர் தெளிவூட்டினார்.
 
பாம்புகள்: பெண் அனகோண்டா இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் பாம்பை விழுங்கிவிடுவது ஏன்?
 
 
கோட்டாபய மீண்டும் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ முடியாது
நாட்டு மக்களினால் கடந்த ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்விக்கு நிக்ஸன் பதிலளிக்கையில்,
 
''கோட்டாபய ராஜபக்ச தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வர முடியும். ஏனென்றால், இனவாத வாக்கு இருக்கின்றது. பௌத்த தேசிய இனவாத வாக்கு பெரியளவில் மாறவில்லை. பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வருவதற்கு இனி அவரால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. அவருக்கு அந்த எண்ணம் இருக்கின்றதா என்பது எனக்கு தெரியாது.
 
ஆனால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என நினைக்கின்றேன். அப்படியில்லை என்றால், வர போகின்ற புதிய அரசாங்கத்தின் செல்வாக்கை பயன்படுத்தி பெரிய பதவிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. கௌரவமான பதவியொன்றை கொடுக்கலாம்." என அவர் கூறினார்.
 
பஷில் ராஜபக்சவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
 
ராஜபக்ச குடும்பத்தின் எதிர்கால அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என வினவியபோது, அவர் எதிர்கட்சியில் பலமாக இருப்பார் என்று நிக்சன் பதிலளித்தார்.
 
''வர போகின்ற பலவீனமான அரசாங்கத்தை பலமான எதிர்கட்சியாக இருந்தவாறு விமர்சித்து அரசியலை முன்னோக்கி கொண்டு செல்வார். உலக நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும், அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய சந்தர்ப்பம் நாமல் ராஜபக்சவிற்கு தற்போது இல்லை. ஆனால், 10 வருடங்களின் பின்னர் அது நடக்கலாம். வேறு யாரும் இல்லை என்பதனால், அது நடக்கலாம். பௌத்த தேசியவாதமே அதற்கான காரணமாக இருக்கும். யுத்தம் வெற்றி பெற்றதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சில விடயங்களினால் வெறுப்பு வந்தது. ஆனால், அது எதிர்காலத்தில் மாற்றமடையலாம்." என அவர் குறிப்பிட்டார்.
 
இலங்கை பொருளாதார நெருக்கடியால் முடங்கிய வாழ்க்கை - தவிக்கும் முன்னாள் செய்தியாளர்
 
ராஜபக்ஸ குடும்பத்துக்கு வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது என்று மூத்த செய்தியாளர் நிக்ஸன் கூறுகிறார்
 
ராஜபக்ச குடும்பம் நீக்கப்பட்டு, ஒரு வருடம் பூர்த்தியாகும் இந்த காலக்கட்டத்தை எவ்வாறு அவதானிக்கின்றீர்கள் என அ.நிக்ஸனிடம் மேலும் வினவியபோது,
 
''ராஜபக்ச குடும்பத்திற்கு இந்த ஒரு வருடத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வீழ்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. வேறு கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். அதனால், ராஜபக்சவின் ஆதரவுடன் ஆட்சி தொடர்ந்து பொருளாதாரத்தை சற்று முச்சு விடும் இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். அந்த நிம்மதி மக்களுக்கு தெரிகின்றது.
 
இந்த ஒரு வருட காலத்தை ராஜபக்சவின் நிலை என்ன என்பதை தேர்தலில்தான் பார்க்க முடியும். ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி ராஜபக்ச குடும்பம் வீழ்ச்சியை நோக்கியே சென்றுள்ளது. ராஜபக்சவிற்கு எந்தவொரு முன்னேற்றமும் இல்லை ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக தமது ஊழலை மறைத்திருக்கின்றார்கள். நாடாளுமன்றத்தில் இன்று 128 உறுப்பினர்கள் ராஜபக்ச வசம் காணப்படுகின்றனர். ராஜபக்சவின் ஆதரவில் ரணில் இருக்கின்றார். அதற்காக அதனை ராஜபக்சவின் வளர்ச்சி என பார்க்க முடியாது" என பதிலளித்தார்.