செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (21:31 IST)

உடல்பருமன் ஏழை நாடுகளையும் விட்டுவைக்கவில்லை - காரணம் என்ன?

உலகிலுள்ள மூன்றில் ஒரு பகுதி நாடுகள் அதிக உடல் பருமனையும், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளையும் கையாண்டு வருவதாக லான்செட் சஞ்சிகையில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உலக அளவில் எளிதில் கிடைப்பதாலும், உடற்பயிற்சி குறைந்துள்ளதாலும் இப்பிரச்சனை நிலவுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 
இதற்கு காரணமாக இருக்கின்ற நவீனகால உணவு அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
 
இதனால் சகாரா பாலைவனத்தின் தெற்கிலுள்ள ஆப்ரிக்க நாடுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.
 
இந்த பூமியிலுள்ள சுமார் 2.3 பில்லியன் குழந்தைகளும், வயது வந்தோரும் அதிக எடையுடையவராக இருப்பதாக மதிப்பிட்டுள்ள இந்த அறிக்கை, 150 மில்லியனுக்கு மேலான குழந்தைகள் குன்றிய வளர்ச்சியோடு இருப்பதாக குறிப்பிடுகிறது.
 
குறைவான மற்றும் நடுத்தர வருமானமுடைய பல நாடுகள் "ஊட்டச்சத்து குறைபாட்டின் இரட்டை சுமை" என்று அறியப்படும் உடல்பருமன், ஊட்டச்சத்து குறைவு என இரண்டு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றன.
 
20% குழந்தைகள் அதிக எடையுடையதாகவும், நான்கு வயதுக்கு கீழுள்ள 30% குழந்தைகள் சரியான வளர்ச்சி இல்லாமலும், 20% பெண்கள் ஒல்லியாக இருப்பதாகவும் வகைப்படுத்தப்படுவதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
 
ஊட்டச்சத்து குறைபாட்டை பெற்றிருக்கும் இரண்டு வடிவங்களாலும் தனிநபர்கள் தங்கள் வாழ்வின் வேறுப்பட்ட நிலையில் பாதிக்கப்படுவதோடு, சமூகங்களும், குடும்பங்களும் பாதிக்கப்படும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 
1990களில் 123 நாடுகளில் 45 நாடுகளும், 2010களில் 126 நாடுகளில் 48 நாடுகளும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 
1990களில் இருந்து 2010ம் ஆண்டுக்குள் உலகில் குறைவான வருமானமுடைய 14 நாடுகளில் இந்த இரட்டை பிரச்சனை உருவாகியுள்ளது.
 
மேசமான உணவு அமைப்பு முறை
 
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசுகளும், ஐக்கிய நாடுகள் அவையும், கல்வியாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் இந்த அறிக்கையை தயாரித்தவர்கள், உணவு முறைகளில் மாற்றம் வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
 
மக்கள் சாப்பிடும், குடிக்கும் மற்றும் இயங்குகின்ற வழிமுறைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. எண்ணிக்கையில் அதிகரித்து வரும் பெருவணிக சந்தைகள், ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் எளிதாக கிடைப்பது, உடல் ரீதியான செயல்பாடுகள் குறைவது ஆகியவை மக்களை அதிக எடையுடையவர்களாக மாற செய்கின்றன.
 
இந்த மாற்றங்கள் எல்லாம் குறைவான மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளையும், அதிக வருமானம் பெறுகின்ற நாடுகளையும் பாதிக்கின்றன.
 
குழந்தைகள் குன்றிய வளர்ச்சியுடையதாக வளர்வது பல நாடுகளிலும் அரிதாகிவிட்டாலும், அதிக பதப்பட்டுத்தப்பட்ட உணவுகளை குழந்தை பருவத்திலேயே சாப்பிடுவது மோசமான வளர்ச்சி ஏற்பட காரணமாகிறது.
 
இந்த அறிக்கையை தயாரித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து பிரிவின் இயக்குநரும், அறிக்கை தயாரித்த குழுவின் தலைவருமான டாக்டர் பிரான்செஸ்கோ பிரான்கா, "நாம் புதியதொரு ஊட்டச்சத்து நடைமுறையை எதிர்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
 
"குறைந்த வருமானமுடைய, ஊட்டச்சத்து பற்றாக்குறையுடைய, உயர் வருமானமுடைய நாடுகள் என்று இனிமேலும் நம்மால் வகைப்படுத்த முடியாது. உடல் பருமனை பற்றிதான் கவலைபட வேண்டியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
 
குறைவான ஊட்டச்சத்துடைய வடிவங்கள் எல்லாமே, ஆரோக்கியமான, பாதுகாப்பான, மலிவான மற்றும் தொடர்ந்து வழங்கப்படும் உணவுகளை மக்கள் அனைவருக்கும் கொடுக்க முடியாத உணவு அமைப்பையே கொண்டுள்ளன.
 
உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் இருந்து தொடங்கி, வணிகம் மற்றும் விநியோகம் மூலம் விலை நிர்ணயம், சந்தைப்படுத்துதல், வகைப்படுத்துதல் என நுகர்வு மற்றும் கழிவு வரை உணவு அமைப்பில் மாற்றங்கள் அவசியமாகிறது என்கிறார் பிரான்கா.
 
"இது தொடர்புடைய கொள்கைகள் மற்றும் முதலீடுகள் எல்லாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்" என்று அவர் தெரிவிக்கிறார்.
 
உயர் தர உணவு என்பது என்ன?
 
இந்த அறிக்கையின்படி, உயர் தர உணவில் கீழ்கண்டவைகள் காணப்படும்.
 
அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நார்சத்து. பருப்புகள் மற்றும் விதைகள்
விலங்குகளிடம் இருந்து பெறப்படும் உணவுகளில் சுமாரான அளவு
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் குறைவான அளவு
அதிக சக்தியை தரக்கூடிய, சக்கரை சேர்க்கப்பட்ட, அதிக மற்றும் குறைந்த கொழுப்புடைய இறைச்சி, உப்பு மிக குறைவான அளவு
உயர் தர உணவுகள் ஊட்டச்சத்து குறைவு ஏற்படும் ஆபத்தை அகற்றிவிடும். ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முழுவதும் உடலை நோய்கள் அணுகாமல் பாதுகாக்க இது உதவும்.