புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (15:11 IST)

வட - தென் கொரியா பிரச்சனை: எல்லை அலுவலகம் தகர்ப்பு, தயார் நிலையில் ராணுவம்!

வடகொரிய - தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
 
இரு நாடுகளும் 2018-ல் பேச்சு வார்த்தையைத் தொடங்கிய பின்னர் வடகொரிய எல்லைக்குள் இருக்கும் இந்த மையம் மறுசீரமைக்கப்பட்டது. தென் கொரிய மற்றும் வட கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய தங்களது ராணுவம் தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரித்திருந்த சமயத்தில் இது நிகழ்ந்துள்ளது.
 
வட கொரியாவிலிருந்து தப்பித்துச் சென்றவர்கள் தென் கொரிய எல்லையிலிருந்து வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசுவதையும், பிரசார வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களை அனுப்புவதையும் கண்டிக்கும் விதமாக இந்த எச்சரிக்கை அமைந்துள்ளது.
 
ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ராணுவத்துக்கு உடுத்தவிட்டுள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
 
கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், எல்லை முன்வரிசையில் ராணுவ கோட்டையை உருவாக்கவும், ராணுவ கண்காணிப்பை அதிகரிக்கவும் தயாராக இருப்பதாக வட கொரிய ராணுவம் தற்போது கூறியுள்ளது.
 
வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விடுவதால் கடந்த காலங்களிலும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
 
வட கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் இணைந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தென் கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.