ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

நஃப்டாலி பென்னெட்: இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? முழு விவரம்

இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னெட், பல ஆண்டுகளாக முடங்கிய தேசத்தை ஒற்றுமைப்படுத்துவேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருக்கிரார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெஞ்சமின் நெட்டயன்யாஹு ஆட்சிக்கு முடிவு காணும் விதமாக, நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெறும் ஒற்றை இடம்  அதிகம் பெற்று இஸ்ரேலின் பிரதமராக கூட்டணி கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் நஃப்டாலி.
 
நஃப்டாலி பென்னெட் (49), இஸ்ரேலின் பிரதமர் நாற்காலி மீது நீண்ட காலமாகவே கண் வைத்திருந்தவர். அவரது எண்ணம் இப்போதுதான் கைகூடியிருக்கிறது. சென்ற பொதுத்தேர்தலில் இவரது யாமினா கூட்டணி வெகுசில இடங்களிலேயே வென்றிருந்தது.
 
இஸ்ரேலில் சமீபத்திய அரசியல் மாற்றத்தின் மூலம் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் ஆட்சிக்கு மூடுவிழா காணப்பட்டுள்ளது. இந்த நாட்டை 12 ஆண்டுகளாக அவர்  ஆட்சி செய்தார். அங்குள்ள நாடாளுமன்றத்தில் தமது கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்ததால் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுக்கு ஏற்பட்டது.
 
ஆட்சியில் தொடருவேன் என கடைசி நிமிடம் வரை நம்பிக்கையுடன் நெட்டன்யாஹு கூறி வந்தபோதும், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் எதிரணி கூட்டணிக்கு 60 வாக்குகளும் நெட்டன்யாஹு அணிக்கு 59 வாக்குகளும் கிடைத்தன.
 
இனி இஸ்ரேலில் நெட்டன்யாஹு தலைமையில் 'ஆட்சி' இல்லாமல் போகலாம். ஆனால், அங்குள்ள வலதுசாரி லிக்குட் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் அவரே  தலைமை வகிப்பார்.
 
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நஃப்டாலி பென்னெட் கட்சி ஏழு எம்.பி.க்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஆனாலும், தற்போதுள்ள சூழலில் அவரே புதிய  ஆட்சியை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதால் அந்த நாட்டின் பிரதமர் பதவியையும் அவரே ஏற்றிருக்கிறார். புதிய கூட்டணி அரசில் யாமின்  கட்சியுடன் தலா ஏழு உறுப்பினர்கள் பலத்துடன் மேலும் மூன்று கட்சிகள் உள்ளன.
 
அங்கு எந்த கட்சி அணிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால், நஃப்டாலி கட்சியின் ஆதரவு, ஆட்சி அமைப்பதற்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்ட நேரத்தில், பெஞ்சமின் நெட்டன்யாஹு அணியுடன் சேர்ந்து பிரதமர் பதவியை வகிக்கலாம் அல்லது எதிரணி தலைவர்  யாயீர் லப்பீடுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கலாம் என்று இரண்டு வாய்ப்புகள் நஃப்டாலிக்கு இருந்தன.
 
அவர் யாயீர் லப்பீடுடன் கைகோர்க்கும் வாய்ப்பை தேர்வு செய்தார். யாயீர் லப்பீடும் நஃப்டாலியும் சித்தாந்த ரீதியாக முரண்பாடுடைய கருத்துகளைக் கொண்டவர்கள். ஆனாலும் பெஞ்சமின் நெட்டன்யாஹுக்கு எதிராக அரசியல் களமாட நஃப்டாலியும் யாயீர் லப்பீடும் கைகோர்ப்பது அந்நாட்டு அரசியலில் முக்கிய  திருப்பமாக கருதப்படுகிறது.
 
அவர் யாயீர் லப்பீடுடன் கைகோர்க்கும் வாய்ப்பை தேர்வு செய்தார். யாயீர் லப்பீடும் நஃப்டாலியும் சித்தாந்த ரீதியாக முரண்பாடுடைய கருத்துகளைக் கொண்டவர்கள். ஆனாலும் பெஞ்சமின் நெட்டன்யாஹுக்கு எதிராக அரசியல் களமாட நஃப்டாலியும் யாயீர் லப்பீடும் கைகோர்ப்பது அந்நாட்டு அரசியலில் முக்கிய  திருப்பமாக கருதப்படுகிறது.
 
49 வயதாகும் நஃப்டாலி, ஒரு காலத்தில் நெட்டன்யாஹுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார். 2006இல் அரசியலில் நுழைந்ததும் 2008ஆம் ஆண்டுவரை அவர் பெஞ்சமினின் நிர்வாகத்தில் ஊழியர்கள் குழு தலைமை நிர்வாகியாக பணியாற்றினார். அதன் பிறகு நெட்டன்யாஹுவின் கட்சியில் இருந்த நஃப்டாலி விலகி  வலதுசாரி ஜியூயிஷ் ஹோம் பார்ட்டி என்ற யூத தாயக கட்சியில் சேர்ந்தார். 2013இல் அவர் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
 
2019ஆம் ஆண்டுவரை அமைந்த கூட்டணி அரசு ஒவ்வொன்றிலும் நஃப்டாலி அமைச்சரானார். 2019 தேர்தலில் இவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி  பெறவில்லை. இதைத்தொடர்ந்து 11 மாதங்கள் கழித்து கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நஃப்டாலி வென்றார்.
 
அரசியல் களத்தில் நெட்டன்யாஹுவை விட மிகவும் தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவராக நஃப்டாலி அறியப்படுகிறார். இஸ்ரேலை யூத தேசமாக கருதி அதற்காக குரல் கொடுப்பவர். இது மட்டுமின்றி மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம், சிரியன் கோலன் ஹைட்ஸ் ஆகியவை யூத வரலாற்றின் அங்கம் என்ற  கருத்தாக்கத்தை கொண்டிருப்பவர்.
 
இந்த பகுதிகள் 1967இல் நடந்த மத்திய கிழக்கு போரின்போது இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்பட்டவை. மேற்கு கரையில் யூதர்கள் குடியேற்றத்துக்கு ஆதரவான  நிலையைக் கொண்டதுடன் அதை தீவிரமாகவும் அவர் ஆதரிப்பவர்.
 
எனினும், காசா மீதான எவ்வித கோரலையும் அவர் வலியுறுத்தவில்லை. அங்கிருந்து 2005இல் தமது துருப்புகளை இஸ்ரேல் திரும்பப்பெற்றது. இதேவேளை, மேற்கு  கரை மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் 140 குடியேற்ற பகுதிகளில் ஆறு லட்சம் யூதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த குடியேற்றம் சட்டவிரோதமானது என்று கிட்டத்தட்ட அனைத்து சர்வதேச சமூகமும் அழைத்தாலும், அதை இஸ்ரேல் மறுக்கிறது.
 
பாலத்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான குடியேற்றங்களை தீர்மானிப்பது மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்னையாக கருதப்படுகிறது. தங்களுடைய பகுதிகளில்  இருந்து யூதர்களை அகற்ற வேண்டும் என்று பாலத்தீனர்கள் கோருகிறார்கள். மேலும், மேற்கு கரையுடன் கூடிய தனி நாட்டையும் கிழக்கு ஜெருசலேத்தை அதன் தலைநகராகவும் அறிவிக்க வேண்டும் என்பது பாலத்தீனர்களின் கோரிக்கை.
 
நஃப்டாலியின் கொள்கைகள்
 
இந்த கோரிக்கையை முற்றாக நிராகரிக்கிறார் நஃப்டாலி பென்னெட். மேலும், யூத குடியேற்ற பகுதிகளில் மேலும் பலரை தீவிரமாக குடியேற்றும் திட்டத்துக்கு அவர்  ஆதரவாக இருக்கிறார். அதே சமயம், இது தொடர்பான நெட்டன்யாஹுவின் கொள்கை நம்பகமானது கிடையாது என நஃப்டாலி கருதுகிறார்.
 
இதை வலியுறுத்தி தமக்கே உரிய ஆங்கில மொழி உச்சரிப்பு பாணியில் சர்வதேச ஊடகங்களில் தோன்று விமர்சனங்களை தெளிவாகவும் ஆக்ரோஷத்துடனும்  முன்வைப்பது நஃப்டாலியின் வழக்கம்.
 
இஸ்ரேலை ஒட்டிய பகுதியில் பாலத்தீனர்கள் தனி நாடு கோருவதை நஃப்டாலி கடுமையாக எதிர்க்கிறார். ஆனால், இங்கு நீடித்து வரும் பிரச்னைக்கு இரு தேச கோட்பாடே சரியாக இருக்கும் என்று சர்வதேச சமூகம் கருதுகிறது.
 
இந்த கோட்பாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆதரிக்கிறார்.
 
ஒரு அங்குல நிலத்தையும் கொடுக்க மறுப்பவர்
 
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு நேர்காணலின்போது "நான் அதிகாரத்தில் எந்த வடிவில் இருந்தாலும், பாலத்தீனர்களுக்கு ஒரு அங்குல நிலத்தைக் கூட கொடுக்க  மாட்டேன்," என்று கூறினார். மேலும், மேற்கு கரையில் இஸ்ரேலின் பிடியை வலுப்படுத்த எதுவேண்டுமானாலும் செய்வோம் என்று அவர் கூறுகிறார்.
 
யூத இனப்படுகொலை வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நாஜி படையின் அடொல்ஃப் எய்ச்மெனுக்கு 1961இல் மரண தண்டனை விதிக்கப்பட்டு அடுத்த ஆண்டே நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு அந்த நாட்டில் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், பாலத்தீன ஆயுத  போராளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துபவர் நஃப்டாலி.
 
2018இல் காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ் நிர்வாகத்துடன் இஸ்ரேல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டபோது அதை கடுமையாக எதிர்த்தார் நஃப்டாலி.  கடந்த மே மாதம் ஹமாஸ் போராளிகளுடன் நடந்த 11 நாட்கள் மோதலில் இஸ்ரேலிய தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புக்கும் அவர் ஆளும் அரசின் போக்கை  கடுமையாக விமர்சித்தார்.
 
நஃப்டாலியின் அரசியலில், யூத பெருமையும் தேசியவாதமும் அவரது இரு கண்களாக இருக்கின்றன.
 
அரசியலுக்குள் நுழையும் முன்பாக ராணுவத்திலும் தொழிற்துறையிலும் அனுபவத்தைப் பெற்றிருந்தார் நஃப்டாலி. ராணுவ பணியில் இஸ்ரேலிய சிறப்புப் படைகளில் பல நிலைகளில் அவர் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் பெரும் பணக்காரராக  உருப்பெற்றார்.
 
தனது சொத்துகள் குறித்து 2017இல் நடந்த ஒரு நேர்காணலின்போது அவரிடம் கேட்டதற்கு, "17 வகை உணவையும் தனி விமானத்தையும் கொண்டிருப்பவன் நான்  அல்ல. எனது சக்தி உட்பட்டு எதை செய்து வைத்திருக்க முடியுமோ அதை வைத்திருக்கிறேன்," என்று கூறினார்.
 
இஸ்ரேல் பிரதமராக நஃப்டாலி பென்னெட் ஜூன் 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டவுடன் டெல் அவிவ் நகரில் அது, அவரது ஆதரவாளர்களாலும் பெஞ்சமின் நெட்டன்யாஹு எதிர்ப்பாளர்களாலும் திருவிழா போல கொண்டாட்டப்பட்டது.
 
இதுவரை ஆட்சியில் இருந்தது போலின்றி, மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் நஃப்டாலியின் அரசு இருக்கிறது. இங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சி அணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு இடம் மட்டுமே.
 
ஆட்சிப்பகிர்வு ஒப்பந்தப்படி, நஃப்டாலி 2023ஆம் ஆண்டு செப்டம்பர்வரை பிரதமராக இருப்பார். அதன் பிறகு யாயீர் லப்பீட் பிரதமராக மீதமுள்ள பதவிக்காலத்துக்கு  தொடருவார்.