1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (01:17 IST)

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்துக்கு வெற்றி கோரும் இரு தரப்பு - நிரந்தரமா, தற்காலிகமா?

இஸ்ரேல் காசா 

போரின் போது கொல்லப்படாமல் இருக்க வீட்டுக்குள்ளேயே இருந்த காசா நகரத்து பாலத்தீனர்கள், இஸ்ரேலியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள தற்போது போர் நிறுத்தத்துக்குப் பிறகு வெளியே வருகிறார்கள்.
 
இஸ்ரேல் தாக்கி வீழ்த்திய கட்டட சிதைவுக் குவியல்களை மக்கள் நின்று நிதானமாக ஆய்வு செய்கிறார்கள்.
 
சில இடங்களில் சாலைகள் கட்டட இடிபாடு குவியல்களால் அடைபட்டிருந்தன. அதை சரி செய்ய புல்டோசர் இயக்குபவர்கள் அதிக நேரம் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்ட எதுவும் அவர்களை ஆச்சரியப்படுத்தவில்லை. என்ன நடந்தது என்பதை தொலைக்காட்சி சேனல்கள் விரிவாக ஒளிபரப்பி வருகின்றன. ஆனால் மனிதர்கள் தங்கள் கண் கொண்டு அதைக் காண விரும்புகிறார்கள்.
 
காசாவின் நகரங்களில் ஒன்றான கான் யூனிஸில், 9 போராளிகள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களின் இறுதிச் சடங்குக்கு நான் சென்றேன்.
 
ஹமாஸ் மற்றும் காசாவில் இருக்கும் சிறு சிறு குழுக்களால் நடத்தப்படும், தீவிரவாத கட்டமைப்பு என இஸ்ரேல் கூறும் அமைப்புகளுக்கு, கூடுதலாக சேதங்களை ஏற்படுத்தியதாக இஸ்ரேலிய அரசியல்வாதிகள் மற்றும் தளபதிகள் கூறுகின்றனர்.
 
கட்டடங்களுக்கு உண்டாக்கி இருக்கும் சேதாரம் வெளிப்படையானது தான். என்னால் நிலத்தடியில் எந்த வித ராணுவ கட்டுமானங்களையும் காண முடியவிலை. ஹமாஸின் போராளிகள் நிலத்தடியில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என கருதிய போது, இஸ்ரேல் அவர்களை கொல்ல முடிந்ததைக் குறித்து ஹமாஸ் ஆச்சர்யத்தில் இருப்பதாக இங்கு பேச்சுக்கள் எழுந்துள்ளன.
 
காசாவில் இருக்கும் ஆயுதமேந்திய போராளி குழுக்களை ஆதரிக்கும் ஆதரவாளர்களின் மன நிலை, 11 நாள் போருக்குப் பிறகும் அப்படியே இருக்கிறது.
 
கான் யூனிஸ் நகரம் இறுதிச் சடங்குக்காக ஸ்தம்பித்திருந்தது. பெரிய விளையாட்டு மைதானத்தில், ஆயிரக் கணக்கானோர் இறந்த போராளிகளுக்காக பிரார்த்தனை செய்தனர். பாலத்தீன கொடியால் போர்த்தப்பட்ட போராளிகளின் உடலை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்தனர். கல்லறைக்குச் செல்லும் வழியில் தங்களது ஆதரவு முழக்கங்களை உரக்க ஒலித்துக்கொண்டே சென்றனர்.
 
வெற்றிக்கு உரிமை கோரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பு
 
ஹமாஸ் போராளிகளுக்கு இறுதிச் சடங்கு
 
இஸ்ரேலிய தலைவர்களோ, தாங்கள் தகர்த்த கட்டடங்கள், கொன்ற ஹமாஸ் தளபதிகள் மற்றும் போராளிகள் விவரங்களை பட்டியலிடுகிறார்கள். அத்துடன் தங்களது அயர்ன் டோம் ராக்கெட் ஏவுகனை பாதுகாப்பு அமைப்பின் வெற்றியையும் குறிப்பிடுகின்றனர்.
 
தாங்கள் உயிர் பிழைத்திருந்ததையே ஹமாஸ் தன் வெற்றியாக வரையறுக்கிறது. ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், போர் நிறுத்தத்துக்குப் பிறகு வெற்றிகரமாக தான் பதுங்கி இருந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்.
 
பிரார்தனைக்குப் பிறகு, ஜெருசலேமில் இருக்கும் அல் அக்சா மசூதியில் ஹமாஸின் முழக்கங்கள் உரக்கச் சொல்லப்பட்டன. ஜெருசலேமில் தங்களுக்கு இருக்கும் உரிமையைப் பெற, தாங்கள் போரிட தயார் எனவும், தியாகங்களை ஏற்கத் தயார் என்கிற செய்தியை ஹமாஸ் பாலத்தீனர்களுக்கு உணர்த்தி இருக்கிறது.
 
இஸ்ரேல், ஒட்டுமொத்த ஜெருசலேமும் தங்களது தலைநகரம் என கூறி வருகிறது. பாலத்தீனத்துக்கோ வேறு யோசனைகள் இருக்கின்றன.
 
பாலத்தீனத்தின் அதிபர் மஹ்மூத் அப்பாஸே பாலத்தீனர்களின் குரலாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறார்.
 
ஆனால் பாலத்தீனர்கள் அவர் செயல்பாட்டின் மீது பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். மே மாதம் நடக்க வேண்டிய தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படலாம் எனக் கருதி அவர் தேர்தலையே ரத்து செய்து விட்டார். 2006ஆம் ஆண்டு முதல் பாலத்தீனர்களால் தங்கள் அதிபரைத் தேர்ந்தெடுக்கவோ தங்கள் சட்ட ரீதியிலான பிரதிநிதியை தேர்வு செய்யவோ வாக்களிக்க முடியவில்லை.
 
இதற்கு நேர்மாறாக, ஜெருசலேமுக்காக உயிருள்ள வரை போராடுவோம் என்கிற ஹமாஸின் செய்தி, இத்தனை நாட்களாக அதிபர் அப்பாஸால் கட்டுப்படுத்தப்படாத அல்லது தடுத்து நிறுத்தப்படாத யூத குடியேற்றத்தால் விரக்தி அடைந்திருக்கும் பாலத்தீனர்களுக்கு மத்தியில் நல்லபடியாக சென்றடைந்து இருக்கிறது.
 
ஹமாஸை ஆதரிக்கும் பாலஸ்தீனர்கள்
 
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு 11 நாள் போருக்கு முன், எப்படி தன் அரசியல் வாழ்கைக்காக போராடினாரோ, அந்த போராட்டத்துக்கு மீண்டும் திரும்புவார்.
 
பிரதமர் நெட்டன்யாஹு மீது சில தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணையில் நெட்டன்யாஹு சிறைக்கு கூட அனுப்பப்படலாம். கடந்த மே 10ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் ஜெருசலேம் மீது ராக்கெட் ஏவுகனையை வீசிய போது, நெட்டன்யாஹு கிட்டத்தட்ட தன் பதவி இழப்புக்கு மிக அருகில் இருந்தார்.
 
பெஞ்சமின் நெட்டன்யாஹு தற்போது ஒரு இடைக்கால அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 61 வாக்குகளைப் பெற தவறிவிட்டார் நெட்டன்யாஹு.
 
எதிர்கட்சியைச் சேர்ந்த யயிர் லபிட், அரசாங்கத்தை அமைக்க தனக்குப் போதுமான வாக்குகள் இருக்கின்றன என எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். ஆனால் மீண்டும் ஐந்தாவது முறையாக தேர்தல் நடக்கவே வாய்ப்பிருக்கிறது.
 
பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமர்
 
இஸ்ரேல் நாட்டில் 20 சதவீத பாலத்தீன அரேபியர்கள் மைனாரிட்டி சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள். யூதர்கள் மற்றும் அரேபியர்கள் ஒன்றாக வாழும் சூழல் சீர்குலைந்து வருகிறது. அதை இஸ்ரேல் சரி செய்ய வேண்டும். நெட்டன்யாஹு வலுவான யூத தேசியவாதத்தை முன்னெடுத்து வருவது, இந்த சூழலை இன்னும் மோசமாக்கி இருக்கிறது.
 
இதற்கு முன் நடந்த இஸ்ரேல் ஹமாஸ் மோதலைப் போலவே, தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் போர் நிறுத்தமும் தற்காலிகமானது தான். மீண்டும் ஒரு நெருக்கடி வரும் வரை இந்த போர் நிறுத்தம் தாக்கு பிடிக்கும்.
 
அந்த நெருக்கடி, காசாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட் ஏவுகனையாக இருக்கலாம் அல்லது பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலிய காவலர்களின் வன்முறை தாக்குதலாக இருக்கலாம் அல்லது கிழக்கு ஜெருசலேமில் இருக்கும் ஷேக் ஜாராவிலிருந்து பாலஸ்தீன அரேபியர்களை வெளியேற்றுமாறு யூத குடியேறிகள் தொடுத்திருக்கும் வழக்காக இருக்கலாம்.
 
ஜெருசலேம் நகரத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் வன்முறையாக வெடிக்க, ஷேக் ஜாராவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலத்தீனர்களுக்கு பதிலாக யூத குடியேறிகள் அமர்த்தப்படுவது ஒரு முக்கிய காரணம்.
 
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வழக்கு கைவிடப்படவில்லை. இந்த வழக்குக்கான தீர்ப்பு வெளியிடப்படும். இஸ்ரேலின் சட்ட கால அட்டவணை இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு முதல் பெரிய நெருக்கடியாக அமையலாம்.