செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2024 (16:30 IST)

'அம்மா, நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்' - யுக்ரேனிய போர்க் கைதிகளை தொடர்ந்து கொல்லும் ரஷ்யா

Russia War

யுக்ரேனை சேர்ந்த ஒலெக்சாண்டர் மாட்ஸீவ்ஸ்கி துப்பாக்கிச்சூட்டில் தேர்ந்த நபர். முழுமையான ரஷ்ய போர் தொடங்கிய முதல் ஆண்டில் ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்டார்.

 

 

பின்னர், ஒரு காட்டில் அவர் தனது கடைசி சிகரெட்டை புகைப்பதைக் காட்டும் காணொளி வெளிப்பட்டது. தனது சொந்த கல்லறையை தோண்டக் கட்டாயப்படுத்தப்பட்டு, அதன் பக்கத்தில் அவர் இருப்பது போன்ற காட்சி தெரிந்தது.

 

"யுக்ரேனுக்கு மகிமை உண்டாகட்டும்!" என்று அவர் தன்னை சிறை பிடித்தவர்களிடம் கூறுகிறார். சில நொடிகளில், அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

 

கொல்லப்பட்ட பலர் நபர்களில் அவரும் ஒருவர்.

 

இந்த ஆண்டு அக்டோபரில், பிடிபட்ட ஒன்பது யுக்ரேனிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் ரஷ்யப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

அரை நிர்வாண உடல்கள் தரையில் கிடப்பதைக் காட்டும் புகைப்படம் உள்ளிட்ட வழக்கை யுக்ரேன் வழக்கறிஞர்கள் விசாரித்து வருகின்றனர்.

 

கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ட்ரோன் இயக்குநர் ருஸ்லான் ஹோலுபென்கோவை அவரது பெற்றோர் அடையாளம் காண இந்த புகைப்படம் போதுமானதாக இருந்தது.

 

"அவரது உள்ளாடைகளால் நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்," என்று துயருற்ற அவரது தாய் உள்ளூர் ஒளிபரப்பாளரான சஸ்பில்னே செர்னிஹிவிடம் கூறினார்.

 

"கடல் பயணத்துக்குச் செல்வதற்கு முன்பு நான் அதை அவனுக்காக வாங்கினேன். அவனுடைய தோள்பட்டை சுடப்பட்டதையும் நான் அறிவேன். அதை நீங்கள் படத்தில் காணலாம்." என்று அவரது தாய் தெரிவித்தார்.

 

கொல்லப்படுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுக்ரேனிய வீரர் ஒருவரை முதுகுக்குப் பின்னால் கட்டி, அதே நிலையில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாகவும், அவரைக் கொல்வதற்கு வாள் பயன்படுத்தப்பட்டதாகவும் வந்த புகாரை யுக்ரேனிய வழக்கறிஞர்கள் விசாரித்து வருகின்றனர்.

 

மற்றொரு சம்பவத்தில், 16 யுக்ரேனிய வீரர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதையும், சரணடைவதற்காக காட்டில் இருந்து அவர்கள் வெளியே வந்த பிறகு, தானியங்கி துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டதையும் ஒரு காணொளி காட்டுகிறது.

 

சில கொலைகள் ரஷ்யப் படைகளால் படமாக்கப்பட்டன. மற்றவை யுக்ரேனிய ட்ரோன்களால் படமாக்கப்பட்டன.

 

அந்த காணொளிகளில் பதிவான கொலைகள் பொதுவாக அடையாளம் காண முடியாத காடுகள் அல்லது வயல்களில் நடக்கின்றன.

 

அதனால் அவற்றின் சரியான இடத்தை உறுதிப்படுத்துவது கடினமாகவுள்ளது.

 

இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் பிபிசி வெரிஃபையால் இடத்தை உறுதிப்படுத்த முடிந்தது.

 

உயரும் எண்ணிக்கை
 

முழுமையான போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யப் படைகள் குறைந்தது 147 யுக்ரேனிய சிறைக் கைதிகளை கொன்று விட்டனர். இதில் 127 பேர் இந்த ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுக்ரேன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

 

"வளர்ந்து வரும் இந்தப் போக்கு மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் உள்ளது," என்று யுக்ரேனிய வழக்கறிஞர் அலுவலகத்தின் போர் துறை தலைவர் யூரி பெலோசோவ் கூறுகிறார்.

 

"கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து இந்த கொலைகள் அமைப்பு ரீதியானதாக மாறியது. மேலும் இந்த வருடம் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை, அவை தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல என்பதை நமக்குச் சொல்கின்றன. பரந்த பகுதிகளில் அச்சம்பவங்கள் நடக்கின்றன . மேலும் அவை கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன . இதற்கான கட்டளைகள் வழங்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் உள்ளன" என்றும் யூரி பெலோசோவ் குறிப்பிடுகின்றார்.

 

சர்வதேச மனிதாபிமானச் சட்டம், குறிப்பாக மூன்றாவது ஜெனிவா ஒப்பந்தம் - போர்க் கைதிகளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது, மேலும் அவர்களை கொல்லுவது போர்க் குற்றமாகும்.

 

தண்டனையின்மை
 

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் துணை இயக்குநர் ரேச்சல் டென்பர், யுக்ரேனிய போர்க் கைதிகள் ரஷ்ய துருப்புக்களால் கொல்லப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன என்று கூறுகிறார்.

 

தண்டனையின்மை இதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. மேலும் ரஷ்ய ராணுவம் பதிலளிக்க சில முக்கியமான கேள்விகள் உள்ளன என்று ரேச்சல் டென்பர் கூறுகின்றார்.

 

"இந்தப் பிரிவுகள் தங்கள் தளபதிகளிடம் இருந்து நேரடியாக அல்லது தனிப்பட்ட முறையில் பெற்ற கட்டளைகள் என்ன? ஜெனீவா ஒப்பந்தங்கள் போர்க் கைதிகளை நடத்துவது பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்து அவர்களின் தளபதிகள் தெளிவாக இருக்கிறார்களா? ரஷ்ய ராணுவத் தளபதிகள் அதுகுறித்து தங்கள் பிரிவுகளுக்கு என்ன சொல்கிறார்கள்? இந்தச் சம்பவங்களை விசாரிக்க, உயர்நிலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களும் குற்றத்திற்கான பொறுப்பு ஏற்பார்களா? அவர்கள் பொறுப்பேற்கக்கூடிய நிலைமை அல்லது நிபந்தனை இருக்கின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்களா?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

 

இதுவரை, யுக்ரேனிய போர்க் கைதிகளை, ரஷ்யாவின் படைகள் கொல்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கான முறையான விசாரணையை ரஷ்யா தொடங்கவில்லை.

 

அதுமட்டுமின்றி, இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடுவதற்கு கூட நீண்டகால சிறைத்தண்டனைகளை ரஷ்யா வழங்குகிறது.

 

மேலும், ரஷ்யப் படைகள் யுக்ரேனிய போர்க் கைதிகளை "எப்போதும்" "சர்வதேச சட்ட ஆவணங்கள் மற்றும் சர்வதேச மரபுகளுக்கு ஏற்ப" நடத்துகின்றன என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறுகின்றார்.

 

யுக்ரேனியப் படைகள் ரஷ்ய போர்க் கைதிகளை கொல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஆனால் அத்தகைய கூற்றுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

 

யுக்ரேனிய வழக்கறிஞர் அலுவலகம் இத்தகைய குற்றச்சாட்டுகளை "மிகவும் தீவிரமாக" கருதி விசாரிக்கின்றது - ஆனால் இதுவரை யாரும் குற்றம் சாட்டப்படவில்லை என யூரி பெலோசோவ் குறிப்பிடுகின்றார்.

 

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, பிப்ரவரி 2022 இல் முழு அளவிலான போரை தொடங்கியதிலிருந்து, ரஷ்யப் படைகள் "போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என விசாரிக்கப்பட வேண்டிய பல்வேறு மீறல்களை" மேற்கொண்டுள்ளன.

 

ரஷ்ய ராணுவத்தின் மீறல்கள் இவ்வளவு மோசமாக உள்ளன, சில யுக்ரேனிய வீரர்கள் பிடிபடுவதற்குப் பதிலாக மரணத்தை விரும்புகின்றனர்.

 

"அம்மா, நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன், ஒருபோதும். என்னை மன்னியுங்கள், நீங்கள் அழுவீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் சித்திரவதை செய்யப்பட விரும்பவில்லை" என்று ருஸ்லான் ஹோலுபென்கோ கூறியதாக அவரது தாய் கூறுகிறார்.

 

அவரது மகன் போரில் மாயமாகவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் சாத்தியமற்றது எனத் தோன்றும் ஒன்றை அவரது தாய் தொடந்து நம்புகிறார்.

 

மேலும் பேசிய ருஸ்லான் ஹோலுபென்கோவின் தாய், "என்னுடைய குழந்தையை மீட்பதற்கு என்னால் செய்ய முடிந்த மற்றும் செய்ய முடியாத அனைத்தையும் செய்வேன். இந்தப் புகைப்படத்தை நான் தொடர்ந்து பார்க்கின்றேன். அவர் ஒருவேளை மயக்கத்தில் இருக்கின்றாரோ? என நான் நம்ப விரும்புகிறேன். அவர் மறைந்துவிட்டார் என எண்ண விரும்பவில்லை." என்று கூறுகின்றார்.