1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:21 IST)

2 பாலுறுப்புகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை - காரணம் என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நான்கு கால்கள் மற்றும் இரண்டு பாலுறுப்புகள் கொண்ட குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டாவது நாளில் குழந்தை இறந்துவிட்டது.



செப்டம்பர் 15ஆம் நாளன்று கோரக்பூரின் சகஜ்னவா கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த குழந்தை பிறந்தது.

சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அருகில் வசிக்கும் ஒரு பெண், "குழந்தைக்கு நான்கு கால்களும், இரண்டு பாலுறுப்புகளும் இருந்தன. ஆனால், மலத்துவாரம் இல்லை. குழந்தையால் மலம் கழிக்க முடியவில்லை. இந்நிலையில், பிறந்த இரண்டு நாட்களுக்குள் குழந்தை இறந்துவிட்டது" என்று கூறினார்.

ஆனால் கருவுற்றிருந்த தாய்க்கு சோனோகிராஃபிக் பரிசோதனைகள் செய்யப்பட்டபோது, அதில் எல்லாமே சரியாக இருப்பதாகவே கூறப்பட்டதாக அந்த பெண் தெரிவிக்கிறார்.

நோயா அல்லது விசித்திரமா?



இந்தியாவில், இத்தகைய குழந்தைகளை பார்க்கும் கண்ணோட்டங்கள் மாறுபடுகிறது. இதுபோன்ற குழந்தைகள் பிறப்பது சுபமானது என்று சிலர் சொன்னால், வேறு சிலரோ சாபத்தாலே இப்படி குழந்தைகள் பிறப்பதாக பயப்படுகிறார்கள். விசித்திரமான குழந்தைகள் இவை என்று ஆச்சரியப்படுகின்றனர் மற்றும் சிலர். ஆனால் இது போன்ற குழந்தைகள் பிறப்பது விசித்திரமானதா அல்லது எதாவது நோய் ஏற்பட்ட காரணத்தால் குழந்தைகள் இப்படி பிறக்கின்றன என்று சொல்லலாமா?

ஆனால், இதுபோன்ற குழந்தைகள் பிறப்பது ஆச்சரியமானது அல்ல என்கிறார் டெல்லி மேக்ஸ் மருத்துவமனையின் சிறுநீரகத் துறை நிபுணர் டாக்டர் கபில் வித்யார்த்தி.

உண்மையில், தற்போதைய சம்பவம், இரட்டை குழந்தையுடன் தொடர்புடையது. தாயின் கருப்பையில் இரட்டை குழந்தைகளுக்கான கரு உருவான பிறகு பல சிக்கல்கள் உருவாகலாம், இதனால் கர்ப்பத்தில் உள்ள இரட்டை குழந்தைகள் முழுமையான வளர்ச்சியடைய மாட்டார்கள்.

இதை எளிதாக புரிய வைக்கிறார் டாக்டர் வித்யார்த்தி.



"தாயின் கர்ப்பத்தில் உள்ள கரு இரு பாகங்களாக முழுமையாக பிரிந்திருந்தால், அது இரட்டை குழந்தையாக வளரும்."

"இரட்டை குழந்தையாக கரு தரித்திருந்தால், கருமுட்டை பொதுவாக வளர வேண்டிய அளவுக்கு வளராமல், ஓரளவுக்கு மட்டுமே வளர்ந்திருந்தால், உடலின் சில பாகங்கள் வளரும். அதாவது, ஒரு கரு சரியாக வளர்ந்தும், மற்றொரு கரு குறிப்பிட்ட அளவும் வளர்ந்திருக்கும்."

இரு வகையான இரட்டை குழந்தைகள்

கோரக்புரில் பிறந்த குழந்தைகள் 'பேராசிடிக் ட்வின்' (Parasitic Twin) வகை குழந்தைகளுக்கு உதாரணம் என்று மேக்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர் பி.தர்மேந்திராவின் கூறுகிறார்.

"இரட்டை குழந்தைகளாக வளர வேண்டிய கரு, ஏதோ ஒரு காரணத்தால் முழுமையாக வளர்ச்சியடையவில்லை. அதோடு, ஒரு கருவின் சில பாகங்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அந்த பாகங்கள், முழுமையாக வளர்ச்சியடைந்த குழந்தையின் உடலோடு இணைந்தேயிருக்கின்றன. அதாவது, கரு முட்டை இரண்டாக பிரியும்போது, ஓரளவு பிரிந்த நிலையில் கரு பிரிதல் தடைபட்டுப்போனது. அதன்பிறகு மூலக்கருவில் இருந்த குழந்தை முழுமையாக வளர, பிரியத் தொடங்கிய கருவில் சில பாகங்கள் மட்டும் வளர்ந்துள்ளது."

இதேபோல், இணைந்த இரட்டையர்கள் (conjoined twins) கூட, அத்தகைய குழந்தைகள், முழுமையாக வளர்ந்தாலும், உடலின் சில பகுதிகள் அல்லது ஒரு பகுதி மட்டும் இணைந்திருக்கும்.

இருவகையான நிலையிலும், குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கலாம்.

குழந்தையின் உடலின் கீழ்ப்பகுதி இணைந்திருந்தால், அதை அறுவை சிகிச்சையிலிருந்து பிரித்தெடுக்கலாம்.




முதுகெலும்புடன் இணைந்திருந்தால், அதை பிரிப்பது கடினமானது. ஏனெனில் அப்படி செய்தால், குழந்தையின் பிறப்புறுப்பு இயங்காமல் போகலாம்.

சிகிச்சை என்ன?

தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே இதைப்பற்றி தெரிந்துக் கொள்ளலாம். பெற்றோர் விரும்பினால், கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம்.

கருவுற்ற நான்காவது அல்லது ஐந்தாவது மாதத்தில் சோனோகிராஃபி பரிசோதனை மூலம் குழந்தையின் நிலையை தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த விஷயத்தில் வேறொரு முறையும் பயன்படுத்தப்படலாம் என்று டாக்டர் தர்மேந்திர யோசனை கூறுகிறார்.

"தாயின் கருவில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாகியிருந்தால், அதில் ஒன்று சரியாகவும், மற்றவை சரியாகவும் வளர்ச்சியடையாமல் இருந்தால், சரியாக வளராத கருவை கலைத்துவிடலாம். இதனால் தாயிடம் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து உரிய வளர்ச்சி அடையும் குழந்தைக்கு சரியாக சென்றடையும். இதனால், சரியாக வளராத கருவுக்கு ஊட்டச்சத்து செல்லாமல், நன்றாக வளரும் குழந்தைக்கே அவை சென்று சேரும்படி செய்யலாம்."

இரட்டை குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன?

ஐ.வி.எஃப் மூலம் கருத்தரிக்கும்போது, இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன என்கிறார் டாக்டர் தர்மேந்திர.

"ஐ.வி.எஃப் மூலம் தாய் கருவடையும்போது, கருப்பையில் ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகள் செலுத்தப்படுகின்றன. இதனால், இரட்டை குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அதாவது தாயின் கருவில் எத்தனை கருமுட்டைகளோ, அந்த அளவுக்கு அதிகமான கரு தரிக்கும் சாத்தியம் ஏற்படுகிறது.''

ஐ.வி.எஃப் முறையில் ஆய்வகத்தில் சோதனைக் குழாய் மூலம் கருமுட்டையும், விந்தணுவும் ஒன்று சேர்க்கப்பட்டு, உருவாகிய கருவை தாயின் கருப்பையில் செலுத்தப்படும்.

இதுபோன்ற குழந்தைகள் அதிக அளவில் பிறப்பதற்கு ஐ.வி.எஃப் காரணம் என்றாலும், இயற்கையான முறையில் கரு தரிக்கும் பெண்களுக்கும் வழக்கமானதை விட அதிக உறுப்புகள் கொண்ட குழந்தைகள் பிறக்கும் சாத்தியங்கள் இருப்பதை மறுக்க முடியாது என்கிறார் டாக்டர் தர்மேந்திர.