புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (19:38 IST)

மகாராஷ்டிர முதல்வரானார் உத்தவ் தாக்கரே: "மதச்சார்பற்ற முறையில் ஆட்சி"

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றிலும் இருந்து தலா இரண்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். மும்பை சிவாஜி பூங்காவில் நடந்த கோலாகல விழாவில் பல மாநில அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி), காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து அமைத்துள்ள வளர்ச்சிக் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில், குறிப்பாக மும்பை நகரில், பெரும் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்த, மறைந்த பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே. குறிப்பாக, பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முதலாக அரசுப் பதவி ஒன்றை ஏற்பவரும் இவரே.

அக்டோபர் 24-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானாலும், பாஜக-வுக்கும் சிவசேனைக்கும் இடையில் நடந்த அரசியல் மோதல், பிறகு பாஜக திடீர் பதவியேற்பு, பதவி விலகல் ஆகிய பரபரப்புகளால், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைய ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது.

முதலமைச்சராகும் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் எழுதியுள்ள காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

பதவியேற்புக்கு பின்னர் இரவில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மதச்சார்பின்மைதங்களது நீண்டகாலக் கூட்டணிக் கட்சியான பாஜகவை விட்டு விலகிவந்து, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது சிவசேனை. இந்நிலையில், இந்த மூன்று கட்சிக் கூட்டணி அரசு, குறைந்தபட்ச பொதுத் திட்டம் ஒன்றை ஒப்புக்கொண்டுள்ளது.

அதில் மதச்சார்பற்ற முறையில் அரசை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நீண்டகாலம் பாஜகவின் கொள்கைக் கூட்டாளியாக இருந்த சிவசேனை பங்கேற்கும் அரசு மதச்சார்பற்ற கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், சிவசேனை கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீல், சாஹாகான் பூஜ்பால், காங்கிரஸ் கட்சியின் பாலாசாகிப் தொராட், நிதின் ராவத் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல் நாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பகால், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் திராவிட முன்னேற்ற கழக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் போன்ற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். உத்தவ் தாக்கரேயின் உறவு முறை அண்ணனும், சிவசேனையின் அரசியல் வாரிசாக முன்பு கருதப்பட்டவருமான மகாராஷ்டிர நவநிர்மான் சேனையின் தலைவர் ராஜ் தாக்கரே இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி இதில் பங்கேற்க முடியவில்லை என்று தகவல் அனுப்பியுள்ளார்.

துணை முதல்வராக அஜித் பவார்

சட்டமன்றத்தில் மொத்தம் 98 இடங்கள் வைத்துள்ள என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் கட்சிகள், சிவசேனை ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது என்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை முடிவெடுத்தன.

மறுநாள் சிவசேனை ஆட்சி அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இடைப்பட்ட ஓர் இரவில், என்.சி.பி. சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் திடீரென பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து, ஆளுநர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிசை ஆட்சியமைக்க அழைத்து, காலையிலேயே அவருக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உறுதியாக அஜித் பவார் பின்னால் செல்ல மறுத்து, சரத்பவார் உடன் நின்றனர்.

பாஜகவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது வளர்ச்சிக் கூட்டணி. புதன்கிழமை மாலைக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று பாஜக அரசுக்கு கெடு விதித்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து, தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் பதவி விலகினர்.

மீண்டும் அஜித் பவார் தனது சித்தப்பா சரத் பவாரை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இத்தனை குழப்பங்களுக்கும் காரணமாக இருந்த அஜித் பவார் துணை முதல்வராக இருப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் பிபிசி ஹிந்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், துணை முதலமைச்சராக தான் இன்று பதவியேற்க போவதில்லை என்று செய்தியாளர்களிடம் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் குறைந்தபட்ச பொதுத் திட்டம்

இந்த வளர்ச்சி கூட்டணியின் மூன்று கட்சிகளும் இணைந்து தங்களின் குறைந்தபட்ச பொது திட்டத்தை வெளியிட்டுள்ளன.

இந்த ஆவணத்தில் மத சார்பின்மையைக் குறிப்பிடும் "செக்குலர்" என்கிற சொல் ஆங்கில மொழி ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், மராத்தி மொழியில் வெளியான ஆவணத்தில் இது நேரடியாக இடம்பெறவில்லை. மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், பொது மக்களின் நலனுக்காக இந்த கூட்டணி மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கணக்கில் எடுத்து செயல்படும் என்றும், மொழி, சாதி மற்றும் மத்த்தின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படாது என்றும் சட்டமன்ற உறுப்பினர் ஏக்நாக் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட குறைந்தபட்ச பொதுத் திட்ட அம்சங்கள்

சிவசேனை சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவரான ஏக்நாக் ஷிண்டே மூன்று கட்சிகளும் ஒப்பு கொண்டுள்ள குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள்:
  • விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம்.
  • மொழி, சாதி மற்றும் மதத்தால் பாகுபாடு காட்டப்படாது.
  • இந்திய அரசியல் சாசன கொள்கைகளின்படி அரசு செயல்படும்.
  • விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், சிறுகுறு வியாபாரிகளின் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • உயர் சிறப்பு மருத்துவமனை எல்லா மாவட்டங்களிலும் அமைக்கப்படும்.
  • பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மை அளிக்கப்படும்.
  • அங்கன்வாடி மற்றும் ஆஷா சேவிக் ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படும்.