புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (13:32 IST)

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக். 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் தொடர்பான கொலை, கொள்ளை வழக்கு அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
வழக்கில் கூடுதல் விசாரணை செய்ய கால அவகாசம் தேவை என அரசுத் தரப்பு கோரிக்கை வைத்ததையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஸ்டேட் மேலாளர், தடயவியல் நிபுணர் ராஜ்குமார், மின்வாரிய அதிகாரி ஆகியோர் இன்றைய விசாரணைக்கு ஆஜராகவில்லை.
 
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், திமுக அரசு பதவியேற்ற பிறகு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்படி கூடுதல் விசாரணை நடத்தக்கூடாது என ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
 
இதனால், கடந்த முறை இந்த வழக்குநீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி, விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
கூடுதல் விசாரணை நடத்தலாமா என்பது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு அனுமதி அளித்தது. இந்த நிலையில்தான் இந்த வழக்கு இன்று மீண்டும் நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொடநாடு எஸ்டேட் மேலாளர், தடயவியல் நிபுணர் ராஜ்குமார், மின்வாரிய அதிகாரி ஆகியோர் இன்று ஆஜராக வேண்டுமெனகூறப்பட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை.
 
இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சஞ்சய் பாசு முன்பாகத் துவங்கியது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டு எதிரிகள் ஆஜராகவில்லை என்பது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார். பிறகு, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் இந்தவழக்கில் கூடுதலாக விசாரணை நடத்த வேண்டுமென்பதால் வழக்கை நீண்ட காலம் ஒத்திவைக்க வேண்டுமென்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 
இதற்கிடையில், இந்த வழக்கில் வி.கே. சசிகலா, எடப்பாடி கே. பழனிச்சாமி, சஜீவன் ஆகியரை விசாரிக்க வேண்டுமெனக் கோரி தாக்கல்செய்யப்பட்ட வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக சயான் தரப்பு வழக்கறிஞர் விஜயன் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.