அவசரகாலச் சட்டம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்
இலங்கையில் ஏன் திடீரென அவசரகால சட்டம் கொண்டு வரப்பட்டது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா?, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஏதேனும் தகவல் கிடைத்துள்ளதா?, என்பதை ஆளும் தரப்பு தெளிவூட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பதிலளித்தார்.
அவசரகால சட்டம் தேவையற்ற விதத்தில் எண்ணத்தில் கொண்டு வரவில்லை என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டிற்கு முன்பாக ஏற்பட்ட பாரிய அமைதியின்மை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டது. அத்துடன், அதனை தொடர்ந்து நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டமையினால், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் பாதுகாப்பு சபை கூடி ஆராய்ந்து, அவசரகால சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் தினேஷ் குணவர்தன, சபைக்கு அறிவித்தார்.