வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2016 (18:18 IST)

தமிழர் உருவாக்கிய மலேயா தமிழ் நூலகம் படிப்படியாக மூடப்படுகிறதா?

தமிழர் உருவாக்கிய மலேயா தமிழ் நூலகம் படிப்படியாக மூடப்படுகிறதா?

மலேயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகத்திற்குள் இனி அந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்கிற புதிய விதி அங்கே சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
 

 
சர்ச்சைக்குரிய இந்த புதிய விதி இந்த நூலகத்தின் பயன்பாட்டை பல்கலைக்கழகத்தில் படிக்காத மற்றைய தமிழ் மாணவர்கள் மத்தியில் வெகுவாக குறைக்கும் என்றும் படிப்படியாக இந்த நூலகம் மூடப்படும் சாத்தியத்தை அதிகப்படுத்தும் என்றும் மலாயா தமிழ் உயர்கல்வி ஆய்வு மாணவர்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது.
 
மலாயா தமிழ் மாணவர்களுக்காகவென, அந்நாட்டுத் தமிழர்களிடம் நிதி வசூலித்து உருவாக்கப்பட்ட இந்த ஆய்வு நூலகம் படிப்படியாக பொதுப்பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும் போக்கு கவலையளிப்பதாக கூறுகிறார் மலேசியாவின் வல்லினம் இதழ் ஆசிரியர் நவீன் மனோகரன்.
 

 
மலேசியாவில் அரசாங்கப் பல்கலைக்கழக நூலகங்களை அரசின் மற்ற கல்வி நிலைய மாணவர்கள் தடையின்றி உபயோகித்துக்கொள்ளலாம். தற்போதைய இந்த நடைமுறைக்கு மாறாக, ஏற்கனவே மிகவும் குறைவானவர்களால் உபயோகிக்கப்பட்டுவரும் ஒரு உயர்கல்வி நிலையத்தின் தமிழ் நூலகத்திற்கு மட்டும் இப்படியானதொரு தடை விதிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாகக் கூறுகிறார் மனோகரன்.
 
மலேசியாவில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் தமிழ்க்கல்விச் சூழலை இது பாதிக்கும் என்றும், ஏற்கனவே, தமிழ் மாணவர்கள் மத்தியில் தமிழ் புத்தக வாசிப்பு குறைந்துவருவதாக பரவலான கவலைக்கு மத்தியில் வாசிக்க நூலகம் தேடி வருபவர்களையும் இப்படியான தேவையற்ற தடைகள் இளம் தலைமுறை தமிழ் மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தைக் கெடுக்கும் என்றும் அவர் அஞ்சுகிறார்.
 
தமிழுக்காக மலேயா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட துறையில் இந்த குறிப்பிட்ட தமிழ் நூலகத்தை அமைப்பதற்கு மறைந்த தமிழறிஞ்சர் கோ.சாரங்கபாணி மிகப்பெரிய நிதி திரட்டும் இயக்கத்தை நடத்தி அதன் மூலம் திரட்டப்பட்ட பொதுமக்களின் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் நூலகத்தை இந்த புதிய கட்டுப்பாடு அந்நியப்படுத்திவிடும் என்றும் கூறினார் நவீன் மனோகரன்.
 
மலாயாவிலேயே அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலாயா பல்கலைக்கழக நூலகம் உருவான வரலாறு, அதன் முக்கியத்துவம் மற்றும் அது சந்திக்கும் சவால்கள் குறித்து நவீன் மனோகரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

வீடியோ இங்கே: