யுக்ரேன் மீது படையெடுத்தால்' - ரஷ்யாவுக்கு ஜோ பைடன் புதிய எச்சரிக்கை
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் 'நார்டு ஸ்ட்ரீம் 2' என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்டஸ் உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன.
ஆனால் அதை ரஷ்யா மறுக்கிறது. ராணுவ ஒத்துழைப்புக்கான மேற்குலக நாடுகளின் கூட்டணியான நேட்டோ அமைப்பில் யுக்ரேன் இணைவதை மேற்கு நாடுகள் தடை செய்ய வேண்டும் என்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோ படைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் சமீப வாரங்களாக ரஷ்ய அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இதை நேட்டோ நாடுகள் நிராகரித்துள்ளன.