வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 19 ஜூன் 2021 (00:44 IST)

இலங்கை மாகாண சபை தேர்தலுக்கு ஆதரவாக கருத்து கூறிய இந்திய ஹைகமிஷன்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் தரவேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் (ஹைகமிஷனர்) கூறியதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த தகவலை பிபிசி தமிழிடம் கூறினார்.
 
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே-வுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் விவரங்களை அவர் வெளியிட்டார்.
 
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
 
இந்த சந்திப்பின்போது, மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தர வேண்டுமென, இந்திய உயர் ஸ்தானிகர் வலியுறுத்தியதாக அச்சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கூறினார்.
 
மேலும், இது வழக்கமான ஒரு சந்திப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
"மாகாண சபைத் தேர்தல்கள் தள்ளிப் போகும் பட்சத்தில், சிறிது சிறிதாக மாகாண சபை முறைமை இல்லாமல் போய்விடும்" என்றும் இதன்போது, இந்தியத் தூதுவர் சுட்டிக்காட்டியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்.
 
மாகாண சபைகளின் கீழ் இயங்கி வந்த பல பாடசாலைகள், மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு அவை தேசிய பாடசாலைகள் ஆக்கப்படுவதும், வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சியும், மாகாண சபையின் அதிகாரங்களை சிறிது சிறிதாக இல்லாமல் ஆக்கும் செயல்முறை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
 
இந்திய உயர் ஸ்தானிகர் வலியுறுத்தல்
 
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவும் என இதன்போது உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே உறுதியளித்ததாகவும் அவர் கூறினார். குறிப்பாக காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை இந்தியா தொடர்ந்தும் வழங்கும் எனவும் உயர் ஸ்தானிகர் கூறியதாகவும் சித்தார்த்தன் தெரிவித்தார்.
 
இதன்போது, "மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யும்" என, சித்தார்த்தனிடம் பிபிசி தமிழ் வினவியது.
 
அதற்கு அவர் பதிலளிக்கையில்; "மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு நாடாளுமன்றத்தில் எங்களால் பேச முடியும். மேலும் ஆட்சியாளர்களை நேரில் சந்திக்கும் போதும் அதனைக் கூற முடியும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை ஆட்சியாளர்கள் தட்டிக் கழித்து வருகின்றனர்" என்றார்.
 
இதே வேளை 'வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது' என், நேற்றைய சந்திப்பு பற்றி, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
'13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்தார்' எனவும் அந்த ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாகாண சபை முறைமை
 
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு இலங்கையின் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.
 
இதனையடுத்து நாட்டில் 8 மாகாண சபைகள் 2008ஆம் ஆண்டு வரையில் செயற்பட்டு வந்தன. வடக்கு - கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு ஒரு மாகாண சபையாக இயங்கி வந்தது.
 
ஆனால் 2008ஆம் ஆண்டு வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டதை அடுத்து, கிழக்கு மாகாண சபை தனியாக இயங்கத் தொடங்கியது.
 
இந்த நிலையில், நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளினதும் ஆட்சிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அவை அனைத்தும் தற்போது கலைக்கப்பட்ட நிலையில் உள்ளன.
 
தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கிற கிழக்கு மாகாண சபை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும், வடக்கு மாகாண சபை 2018 அக்டோபர் மாதமும் கலைந்தபோதும், இதுவரையில் அந்த சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.