1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified புதன், 23 நவம்பர் 2022 (14:30 IST)

"இலங்கையில் அனுமதியின்றி போராடினால் ராணுவம் வரும்" - எச்சரிக்கும் ஜனாதிபதி ரணில்

இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.
 
அவ்வாறு போராட்டங்களை நடத்த முயற்சிக்கும் பட்சத்தில், ராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 
இன்றைய நிகழ்வில் ஆற்றியஉரையின் முக்கிய தகவல்களே இங்கே வழங்குகிறோம். நாட்டில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டு, போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்.
 
உரிய தரப்பிடம் அனுமதியை பெற்று, வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் போராட்டங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
எனினும், அனுமதியின்றி போராட்டங்களை நடத்தினால், ராணுவத்தை ஈடுபடுத்தி, அவசரகால சட்டத்தை அமல்படுத்தியேனும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரநடவடிக்கைஎடுக்கப்படும்.
 
போராட்டங்கள் நடந்த முந்தைய காலங்களில் தீ வைப்பு சம்பவங்கள் பதிவான நிலையில், அதை தூண்டி விட்ட ஊடகம் எது என்பது குறித்து ஆராய்வதற்கு  ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க கூறினார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில், தானும் சாட்சியமளித்ததை இன்றைய உரையின்போது ஜனாதிபதி ரணில் நினைவுகூர்ந்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கும் ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 
நாடாளுமன்றம் கலைக்கப்படாது
தேர்தல் நடத்துவதற்காக நாடாளுமன்றத்தை ஒருபோதும் கலைக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
 
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. அவை தீர்க்கப்பட்டதன் பிறகே நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்று அவர் கூறினார். நாட்டிலுள்ள பலருக்கு தேர்தல் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பில் வெறுப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு செல்லும் போது, தெரிந்த முகங்களையே மீண்டும் மீண்டும் காண முடிகின்றது எனக் கூறிய அவர், புதிய முகங்களை காண முடியவில்லை என தெரிவித்தார். தேர்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் விருப்பு வாக்கு முறைமை காணப்படும் வரை நாட்டில் மோசடிகள் இருக்கும் எனவும் அவர் கூறினார். இந்த இடத்தில் காணப்படுகின்ற நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்கட்சிகள் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் அழைப்பு விடுத்தார்.
 
இனப் பிரச்சினைக்கு தீர்வு
 
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண, அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார். வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்ததை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் சகல கட்சிகளையும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ரணில் விக்ரசிங்க குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் பெயரைக் குறிப்பிட்டு, இது தொடர்பிலான அனுமதியை அவர் கோரினார். பிரதான எதிர்கட்சி சார்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அதிகார பகிர்வுக்கு தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தயார் என்று அவர் குறிப்பிட்டார். முதலில் சிங்களவர்களே அதிகார பகிர்வை கோரியதாகவும், தானும் அதற்கு இணக்கம் எனவும் அவர் இதன்போது கூறினார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை விழித்து, அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு தயாரா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மனோ கணேசன், அதிகார பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் முன்னணி இணக்கம் என்பதனாலேயே, தாம் ஐக்கிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
 
அனைத்துக்கட்சி கூட்டம் எப்போது?
வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்தவுடன், அனைத்து கட்சி கூட்டமொன்றை கூட்டுவீர்களானால், தாம் பேச்சுவார்த்தைக்கு தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பிற்கு பின்னர், விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்வதாக பதிலளித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கும் இணக்கம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்ததை அடுத்து, டிசம்பர் மாதம் 11ம் தேதிக்கு பின்னர் அதிகார பகிர்வு தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.