புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (23:53 IST)

பாகிஸ்தானில் இந்துக்கள் வீடு இடிப்பு: மத பிரச்சனையா? சட்ட நடவடிக்கையா?

பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாபில் உள்ள பஹவால்பூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 20-ம் தேதி இந்துக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 22 வீடுகள் உள்ளூர் அதிகாரிகளால் தரைமட்டமாக்கப்பட்டன.

விதிகளை மீறி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் வசித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், தாங்கள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமூக மக்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து சமூகத்தினர் என்பதால் அவர்கள் குறிவைக்கப்படுவதாக ஆணையம் கூறியுள்ளது.

சம்பவம் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றிருந்த மனித உரிமைகள் ஆணையத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பைசல் மெஹ்மூத்,''பஹவால்பூர் மாவட்டத்தின் யாஸ்மன் நகரில் உள்ள இந்து குடியிருப்பில் 70 வீடுகள் இருந்தன. அரசு நிலத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த வீடுகள் கட்டப்பட்டன,'' என பிபிசியிடம் கூறியுள்ளார்.


இந்த 15 ஏக்கர் நிலத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் ஏழைகள். இவர்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் வேலை செய்கிறார்கள்.

சிறுபான்மை மக்கள் நலன் திட்டத்தின் கீழ் இந்த இடத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு பல ஆண்டுகளுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு இவர்கள் மனு அனுப்பினர். ஆனால், இந்த மனு இன்னும் அரசு அலுவலகத்தில் கிடப்பில் உள்ளது.

இந்தநிலையில் இவர்கள் வீடு கட்டிக்கொள்ள 2018-ம் ஆண்டு வருவாய்த்துறை அனுமதி அளித்தது.
 
இந்துக்கள் கூறுவது என்ன?
முஹமது பூட்டா என்ற உள்ளூர்வாசி இந்த நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும், இதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறுகிறார் இந்து சமூக தலைவர் மன்ஷா ராம்.

அரசு நிலத்தை மன்ஷா ராம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இந்து சமூகத்தினருக்கு இந்த நிலத்தை விற்று பணம் சம்பாதிப்பதாகவும் கூறி உதவி ஆணையர் அலுவலகத்தில் முஹமது பூட்டா புகார் அளித்தார்.

''புல்டோசர்களை கொண்டு வந்து எங்களது வீடுகளை இடித்தார்கள். வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் வீணானது. இடிப்பதை நிறுத்துமாறு பெண்களும், குழந்தைகளும் கெஞ்சினார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை'' என்கிறார் மன்ஷா ராம்.

உள்ளூர் நீதிமன்றம் வீடுகளை இடிக்கத் தடை விதித்ததாக மன்ஷா ராம் கூறுகிறார். ஆனால், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே வீடுகள் இடிக்கப்பட்டன. தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அங்குள்ள உள்ளூர் இந்து சமூகத்தினர் தொடர்ந்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்த முஹமது பூட்டா,''நான் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றேன் என்பதே அடிப்படையில் ஆதாரமற்றது. அது அரசு நிலம். எனக்கு அங்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், அங்குள்ள முஸ்லிம் கல்லறை அருகே சில இந்துக்கள் அவமரியாதையாக நடந்துகொள்வது எனக்கு பிடிக்கவில்லை. அவர்கள் கல்லறை அருகிலேயே மது குடிக்கின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்து சமூகத்தினர் முகமது பூட்டா அந்த நிலத்தின் மீது ஆர்வம் கொண்டிருப்பதாகவும், தனது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி ஏற்கனவே மிரட்டியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் மனித உரிமைகள் ஆணையத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பைசல் மெஹ்மூத்.