புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (13:46 IST)

ஹீரோ: சினிமா விமர்சனம்

நடிகர்கள் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், ரோபோ ஷங்கர்
இசை யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் பி.எஸ். மித்ரன்
தமிழில் நேரடியாக எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மிகக் குறைவு. படத்தின் தலைப்பும் போஸ்டர்களும் அம்மாதிரியான ஒரு எதிர்பார்ப்பை சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம் மீது உருவாக்கியிருந்தன. 'இரும்புத் திரை' படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது.
90களின் இறுதியில் சக்திமான் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து வளரும் சக்திக்கு (சிவகார்த்திகேயன்), தானும் அதுபோல ஒரு சூப்பர் ஹீரோ ஆக வேண்டுமென ஆசை. ஆனால், தந்தையின் மருத்துவச் செலவுக்காக தன்னுடைய மதிப்பெண் பட்டியலையே விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்குப் பிறகு, போலி சான்றிதழ்களை தயாரிப்பது, தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்து, கமிஷன் பெறுவது என இருந்து வருகிறார்.
 
அதே பகுதியைச் சேர்ந்த புத்திசாலி மாணவியான மதிக்கு (இவானா) ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கித்தர முயல்கிறான் சக்தி. ஆனால், மதியின் கண்டுபிடிப்பைத் திருடிக்கொண்டு, அவருக்கு இடம் இல்லை என்கிறார்கள். இதனால், மதி தற்கொலை செய்துகொள்கிறார். மதி போன்ற பல புத்திசாலி மாணவர்களைப் பராமரித்துவரும் சத்யமூர்த்தியைச் (அர்ஜுன்) சந்திக்கிறார் சக்தி. மூர்த்தி ஏன் வெளியுலகின் பார்வையிலிருந்து ஒதுங்கி வாழ்கிறார், வில்லன்களின் நோக்கம் என்ன, அவர்களை சக்தி என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக் கதை.
 
சூப்பர் ஹீரோ கதைகளில் ஆரம்பத்தில் சூப்பர் ஹீரோ உருவான விதத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, நேரடியாக சாகசங்களுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் வந்துவிடுவார்கள். ஆனால், படத்தின் பெரும்பகுதி கழிந்த பிறகும், நாயகன் அங்குமிங்கும் பரிதவிப்பதால் வழக்கமான சூப்பர் ஹீரோ படமில்லை என்பது புரிந்துவிடுகிறது.
 
மாணவர்களை வெறும் மதிப்பெண்களை மட்டும்வைத்து எடைபோடக்கூடாது; அவர்களுக்கென தனித் திறமைகள் இருக்கும் என்பதே படம் முழுக்க பல்வேறு விதங்களில் வலியுறுத்தப்படுகிறது. படத்தின் பிற்பகுதியில் மட்டும், சூப்பர் ஹீரோ அவதாரமெடுத்து எதிரிகளைத் துவம்சம் செய்கிறார். சில இடங்களில், இது ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தின் தொடர்ச்சி என்பதைப் போல வசனங்களின் மூலம் கோடிகாட்டுகிறார் இயக்குனர்.
 
சிறுவயதில் சூப்பர் ஹீரோ ஆக நினைத்த நாயகன், போலி சான்றிதழ் தயாரிக்கும் வேலைக்கு வருவதற்காக சொல்லப்படும் காரணங்கள் அவ்வளவு ஏற்கத்தக்கதாக இல்லை. மேலும், சாதாரண சின்னச்சின்னக் கண்டுபிடிப்புகளைக் கண்டு, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பயந்துபோய் கண்டுபிடிப்பாளர்களைப் பிடித்துவந்து கண்ணில் ஊசி போட்டு முடமாக்கிவிடுவதாகக் காட்டுவதும் சற்று ஓவராகப் படுகிறது.
 
படம் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் நாயகன். ஆனால், அந்த ரோலில் அவர் செய்யும் சாகசங்களும் சண்டைகளும் வழக்கமான தமிழ் சினிமா நாயகர்கள் செய்யும் சாகசங்களைவிட குறைவாகவே இருக்கிறது.
 
இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், சில காட்சிகளின் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆனால், திடீரென காணாமல்போய் விடுகிறார். அதேபோல ரோபோ சங்கரையும் சில காட்சிகளுக்குப் பிறகு காணவில்லை.
 
சிவகார்த்தியனை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்க்க விரும்பும் அவரது ரசிகர்கள் இந்தப் படத்தை ரசிக்கக்கூடும்.