காவி ஆடையில் கவர்ச்சி: சர்ச்சையாகும் தீபிகா, ஷாருக்கின் பதான் படம்!
2018 ஆம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்குப் பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம் பெறும் பேஷரம் ரங் எனும் பாடல் டிசம்பர் 12 அன்று வெளியானது.
பாடல் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த சூழலில், அதன் காணொளியில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையால் புதிய சர்ச்சை வெடித்தது. இப்பாடலில் காவி நிற பிகினி உடையை அணிந்து அவர் தோன்றுவது ஒரு குறிப்பிட்ட சாராரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பாடல் வெளியான பிறகு அரசியல் களத்திலிருந்து முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பினார் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா.
இப்பாடல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாடலில் அணிந்திருக்கும் உடைகள் ஆட்சேபனைக்குரியவை. இந்தப் பாடலைப் படமாக்கியதன் பின்னணியில் மாசுபட்ட மனங்கள் இருப்பது புலனாகிறது. அவர்கள் பாடலின் காட்சிகளை சரிசெய்ய வேண்டும், உடைகளை சரிசெய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை மத்திய பிரதேசத்தில் வெளியிட அனுமதி வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்பது சிந்திக்க வேண்டிய கேள்வி" என்றார். இவரின் இந்த பேச்சைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் பதான் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனக்கூறி ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின.
தீபிகா படுகோனின் காவி நிற உடையில் தொடங்கிய சமூக ஊடக விமர்சனங்களில் இடம் பெற்ற பல பதிவுகள் அவர் மீதும் படக்குழுவினர் மீதுமான தனிப்பட்ட தாக்குதலாகவும் பரிணமித்தன.
குறிப்பாக கத்தாரில் நடந்த ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதியாட்டத்தில் தீபிகா படுகோன் உலக கோப்பையை அறிமுகம் செய்துவைத்த பின்னர், இந்த தனிப்பட்ட விமர்சனங்கள் அதிகளவில் தீபிகாவைக் குறிவைத்தன.
திரையில் அவர் அணிந்திருந்த உடையையும் கத்தாரில் அவர் அணிந்திருந்த உடையையும் ஒப்பிட்டு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கருத்தைத் தொடர்ந்து மகாராஷ்ட்ராவின் பாஜக எம்எல்ஏ ராம் கதம், பதான் இந்தத்துவாவை அவமதிப்பதாகவும், அதனை தங்களது மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பாஜக தலைவர்களும் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் இப்பாடலுக்கு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதேநேரம், பாஜக தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை பொறுப்பாளர் அமித் மாளவியா, காவி வண்ணம் குறித்த ட்வீட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அதற்கு பதிலளித்த திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரிஜு தத்தா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காவி உடையுடன் 1998 மிஸ் ஃபெமினா போட்டியில் கலந்து கொண்டதாகக் கூறி ஒரு காணொளியைப் பதிவு செய்தார்.
இதற்கு பதிலளித்த பாஜக பெண் எம்.பி லாக்கெட் சாட்டர்ஜி, "இது போன்ற பெண் வெறுப்பாளரை டிஎம்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமித்ததற்காக மமதா பானர்ஜியை நினைத்து வெட்கமாக இருக்கிறது.
பெண்கள் மீதும் அவர்களின் விருப்பம் மீதும் அவருக்கு மரியாதை இல்லை. வெற்றிகரமான பெண்களையும் அவர்களின் உயர்வையும் அவர்கள் வெறுக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு அவரைப் போன்ற ஆண்களே காரணம்" என்று கடுமையாகச் சாடினார்.
இப்படியாக தினந்தினம் இப்பாடல் ஏற்படுத்தும் விவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இவ்விவகாரத்தில் படத்திற்கு எதிராக ஒரு தரப்பினரும் படத்திற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை அன்று நாடாளுமன்றத்திலும் இவ்விவகாரம் எதிரொலித்தது.
மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது பேசிய பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி,"ஒரு நடிகை காவி உடை அணிவதாலோ அல்லது ஷாரூக் கான் நடிப்பதனாலோ சனாதன தர்மம் அல்லது இஸ்லாம் ஆகியவை அழிந்துவிடும் அளவுக்கு அவை பலவீனமானவை இல்லை. ஆனால் ஒரு புதிய பிரசங்கத்தைத் தொடங்கி, வண்ணத்தின் பெயர்களால் தேசத்தைப் பிரிப்பது நிச்சயமாக நமது ஒற்றுமைக்கு சவால் விடும். ஒரு படத்தை வெளியிடுவது அல்லது தடை செய்வது என்பதைப் பற்றி தணிக்கை குழு முடிவு செய்யட்டும்" என்றார்.
அதேபோல கால்பந்து உலகக்கோப்பைக்குப் பிறகு இவ்விவகாரத்தைக் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ், தீபிகாவை நினைத்துப் பெருமைப்படுவதாகவும், பேஷரம் ரங் பாடலை தடை செய்யச் சொன்னவர்கள் உலகக்கோப்பையையும் தடை செய்யச் சொல்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த சர்ச்சை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் இப்பாடலுக்கு எதிராக காவல்துறையிலும் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தீபிகாவின் உடையால் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கொதிப்படைந்துள்ள சூழலில், இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பு ஒன்றும் வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் உலமா வாரியம் இப்படம் குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, படத்தைத் திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்றும் கோரியுள்ளது.
'பதான்கள்' மிகவும் மதிக்கப்படும் சமூகம் என்றும், இத்திரைப்படம் இஸ்லாத்தை அவமதிப்பதாகவும் அந்த வாரியத்தின் தலைவர் கூறினார்.
இப்படி முதல் பாடலில் இடம்பெற்ற ஆடை குறித்தும், தீபிகாவின் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்தும், படத்தின் பெயர் குறித்தும் பல சாரார் தொடர்ந்து விமர்சித்துவரும் சூழலில், இப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிடுவதற்கான பணிகளில் மும்முரமாகியுள்ளது படக்குழு.
இந்த வாரத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.