வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By bala
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (18:44 IST)

சிவகாசியில் வெடிக்குமா டெல்லி பட்டாசுத் தடை?

இந்தியத் தலைநகர் டெல்லியிலும் தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் நவம்பர் 1ஆம் தேதி வரை பட்டாசுகளை விற்பனைசெய்ய உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையின் காரணமாக, தமிழகத்தில் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர்.


 

கடந்த ஆண்டு தீபாவளி முடிவடைந்த பிறகு, டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் மாசுபாடு ஏற்பட்டது. அதனைத் தடுக்கும் வகையிலேயே இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையடுத்து கடந்த ஆண்டு ஏற்பட்ட மாசுபாட்டின் காரணமாக, டெல்லியில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டன.

கடந்த இருபதாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் புகைமண்டலம் தலைநகர் பகுதியைச் சூழ்ந்தது. தீபாவளியையொட்டி பட்டாசுகளை வெடித்ததாலும் பஞ்சாப் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் பயிர்கள் எரிக்கப்பட்டதாலும் கட்டுமானப் பணிகளாலும் இந்த புகைமூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிக்குள் பட்டாசுகளை விற்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்தது. ஆனால், தாங்கள் பெருமளவில் பட்டாசுகளை வாங்கிவைத்திருப்பதால் தடையை நீக்க வேண்டும் என பட்டாசு விற்பவர்கள் கோரியதால் இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியன்று அந்தத் தடையை விலக்கியது நீதிமன்றம்.

இந்த நிலையில்தான், பட்டாசுகளை விற்பதற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டுமென பட்டாசு விற்பனை தடை வழக்கைத் தொடர்ந்திருந்த மூன்று குழந்தைகள் மீண்டும் கோரினர். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ஏ.கே. சிக்ரி, செப்டம்பர் மாதம் அளித்த பட்டாசு விற்பனை தொடர்பான அனுமதியை, நவம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறி தீர்ப்பளித்துள்ளார்.

அதுவரை, டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடருமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், பட்டாசுகளை வெடிக்கவோ, தேசிய தலைநகரப் பகுதிக்கு வெளியில் அவற்றை விற்கவோ தடையில்லையென்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


 


ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை இந்தத் தடை உத்தரவு அவர்களது கவலைகளைத் தொடரச் செய்துள்ளது. "பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக ஏற்கனவே எங்களது உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. வழக்கமாக சுமார் 4000 கோடி ரூபாய்க்கு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு 2,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் உற்பத்தியே நடந்தது" என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன்.


"டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் பட்டாசு விற்பனையில் மிக முக்கியமான பங்கு வகித்து வந்தது. இங்கு உற்பத்தியாகும் பட்டாசுகளில் 20 சதவீதம் வரை அங்குதான் விற்பனையாகும். ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் நீதிமன்றம் தடை விதித்தவுடனேயே நாங்கள் அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எங்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டோம். அதனால், தற்போதைய தடை பெரிய பாதிப்பை எங்களுக்கு உடனடியாக ஏற்படுத்தாது. ஆனால், ஏற்கனவே உற்பத்தி குறைக்கப்பட்டுவிட்டதால் இந்த முறை பலருக்கு வேலை கொடுக்க முடியவில்லை" என்கிறார் மாரியப்பன். ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தத் தடையை வரவேற்றுள்ளனர்.



 


பிபிசியிடம் இதுகுறித்துப் பேசிய டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பிரியா பிள்ளை, "இந்தத் தடை வரவேற்கத்தக்கது. வெடிப்பதற்கு தடை இல்லையென்றாலும் முதல்கட்டமாக விற்பதற்கு தடை விதித்திருப்பது சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. இது டெல்லியின் சுற்றுச்சூழலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.

டெல்லியில் பட்டாசுகளால் மட்டும்தான் மாசுபாடு ஏற்படுகிறது என்பதை ஏற்க முடியாது என்கிறார் மாரியப்பன். "எத்தனையோ ஆண்டுகளாக பட்டாசுகளை அங்கு வெடித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஏற்படாத மாசு கடந்த ஆண்டு ஏற்பட்டது எப்படி?" என்று கேள்வியெழுப்பும் மாரியப்பன், உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடை அங்குள்ள சிறு பட்டாசு வியாபாரிகளைக் கடுமையாக பாதிக்கும் என்கிறார். கடந்த செப்டம்பர் துவக்கத்தில் பட்டாசு விற்பதற்கு இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதும் பல சிறு வியாபாரிகள், அக்கம்பக்கத்து மாநிலங்களில் இருந்து பட்டாசுகளை விற்பனைக்காக வாங்கி வைத்தனர். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் தடை அவர்களை நிலைகுலையச் செய்யும் என்கிறார் மாரியப்பன்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடையை முன்வைத்து பிற மாநிலங்களும் தடை விதிக்க ஆரம்பித்தால், பட்டாசு உற்பத்தியே முழுவதுமாக நசிந்துவிடும் என்கிறார் அவர். "ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்தவுடன் டெல்லி முழுக்க புகைமண்டலம் பல நாட்களுக்கு சூழ்ந்திருப்பதை நாம் பார்க்க முடியும். இதனால், அதனை ஒட்டிய நாட்களில் பலரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்" என்கிறார் பிரியா பிள்ளை. சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு, அதற்கான அச்சுத் தொழில், அட்டைப்பெட்டி செய்யும் தொழில் என சுமார் 3 லட்சம் பேர் நேரடியாகவும் 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் இந்தத் துறையைச் சார்ந்துள்ளனர்.