ஜெயலலிதாவின் தடையை மீறும் இலங்கை படை! - மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 31 ஜனவரி 2017 (19:00 IST)
ஜெயலலிதாவினால் நிறுத்தப்பட்ட பயிற்சிகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம், இலங்கை மீது பொருளாதார தடை கொண்டுவர மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி அளிப்பதற்கு அன்றைக்கு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில், “இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது, அவர்களை தமிழ் நாட்டுக்கு வர அனுமதிப்பது போன்றவை தமிழ் மக்களின் உணர்வுகளின் மீது துளி கூட மரியாதை இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்திய அரசின் இந்த பிடிவாதமான போக்கு தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவின் எந்த பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது. அப்படி பயிற்சி பெறும் வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மீண்டும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், பயிற்சிகளை பெறுவது இலங்கை படை அதிகாரிகளின் நீண்ட மரபாகும்.

ஜெயலலிதாவினால் நிறுத்தப்பட்டுள்ள பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்துகிறோம். விரைவில் மீண்டும் இலங்கை படையினருக்கு வெலிங்டனில் பயிற்சி அளிக்கப்படும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :