1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (07:56 IST)

காதல், நெருக்கத்தை கண்டறிய உதவும் 'போலி டேட்டிங் ஒத்திகை' வாய்ப்புகள்

அகன்ஷா* தனது காதலருக்கு எதிராக அமர்ந்திருந்ததால் உள்ளுக்குள் பதற்றமாக உணர்ந்தார். 26 வயதான அவர், தனக்கு எதிரே அமர்ந்திருக்கும் காதலரை கண்கொண்டு பார்ப்பதை தவிர்த்தார். அப்போது, எதிரில் இருந்த நபர் தனது தலையை மெல்ல குனிந்து, பதற்றமாக இருப்பதில் தவறில்லை என்று அகன்ஷாவிடம் கூறுகிறார். மேசைக்கு அடியில் கைகளைப் பற்றிக்கொண்டு ஆழமாக மூச்சு விடுவதன் மூலம் பதற்றத்தை குறைக்கலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
 
அகன்ஷாவுக்கு எதிரில் அமர்ந்திருப்பவர் உண்மையிலேயே அவரின் காதலர் அல்ல. அகன்ஷாவுடன் டேட்டிங் சென்று, அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று கவனித்து அதற்கு ஏற்ப அறிவுரைகள் வழங்குவதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட நபர்.
டேட்டிங், உறவு மற்றும் நெருக்கம் தொடர்பான பயிற்சிகளை வழங்கும் ஆன்லைன் தளமான இன்டிமேசி கியூரேட்டரால் வழங்கப்படும் டேட்டிங் பயிற்சியை மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நாடியதாக அகன்ஷா தெரிவித்தார்.
 
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் புதிது புதிதாக முளைத்து வரும் டேட்டிங் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளில் ஒன்றுதான் இன்டிமேசி கியூரேட்டர்.
 
இந்தியாவில் உறவுகள் உருவாகும் மற்றும் உணரப்படும் விதத்தில் மாற்றம் உள்ளதை இந்த செயலிகள் காட்டுகின்றன. பெரும்பான்மையான இந்தியர்கள் தற்போதும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைத் தேர்ந்தெடுத்தாலும், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு பெரும்பாலும் தடைசெய்யப்பட்ட விஷயமாக இருந்தாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டேட்டிங் செய்வதற்கும் காதலில் விழுவதற்கும் புதிய வழிகளைக் கற்பிக்கின்றன.
 
இவற்றின் பயனர்கள் - பெரும்பாலும் பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் மற்றும் உலகளாவிய போக்குகளைப் பின்பற்றுபவர்கள்- அவர்களின் வயது மற்றும் தேடுதல் என்பது வேறுபடும். அகன்ஷாவைப் போன்ற சிலர், டேட்டிங் செய்வதில் தங்களுக்கு உள்ள தடைகளை அகற்ற விரும்புகிறார்கள். மற்றவர்கள் உறவுகளைச் சுற்றியுள்ள விதிகள் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.
இன்டிமேசி கியூரேட்டர் செயலியில் டேட்டிங் பயிற்சிக்கு கட்டணமாக சுமார் ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இந்த பேக்கேஜை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு பல்வேறு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை டேட்டிங் பயிற்றுநர்கள் வழங்குகின்றனர்.
 
பயனர்கள் ஏன் டேட்டிங் செய்ய விரும்புகிறார்கள் மற்றும் வருங்கால இணையர் தொடர்பாக என்ன தேடுகிறார்கள் என்பது உள்ளிட்ட கேள்விகளை அவர்கள் ஆராய்கின்றனர். பின்னர், அவர்களுக்கென பிரத்யேகமாக டேட்டிங் நபர் நியமிக்கப்படுகிறார். இவர் டேட்டிங் பயிற்சிகளை வழங்குவார்.
 
"டேட்டிங்கில் எப்படி சௌகரியமாக இருப்பது என்பதற்கு இந்த அனுபவம் உதவியது" என்கிறார் அகன்ஷா.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை புதுமைபாலினத்தவராக அடையாளப்படுத்திக் கொண்ட அகன்ஷா, இது விடுதலை உணர்வாக கருதப்பட்டாலும், டேட்டிங் விஷயத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தியது என்று கூறுகிறார்.
 
பெண்களுடன் டேட்டிங் செய்வது அவருக்கு கடினமாக இருந்தது. திருநங்கை அல்லாதவர்கள், வேற்று பாலினத்தவர்களுக்கான பல டேட்டிங் வழிகாட்டிகளை அவர் கண்டபோதும், புதுமைபாலினத்தவருக்கான டேட்டிங் வழிகாட்டுதல்களை கண்டுபிடிப்பது அவருக்கு கடினமாக இருந்தது.
 
அகன்ஷா டேட்டிங் சென்றபோது, யார் கதவை திறப்பது, மற்றவருக்காக நாற்காலியை யார் வெளியே இழுப்பது போன்ற கேள்விகளால் குழப்பமடைந்தார்.
 
"ஒரு பெண்ணாக, எனக்குத் தெரிவிக்கப்படும் வாழ்த்துகள் சில சமயங்களில் என்னை எப்படிப் புறக்கணிக்கச் செய்தன என்பதை நான் அறிவேன். ஆனால் நான் பிறரால் வெறுக்கப்படும் நபராக கருதப்பட விரும்பவில்லை. அதே சமயம் எனது ஆர்வத்தையும் வெளிப்படுத்த விரும்பினேன்" என்று அவர் கூறுகிறார்.
 
டேட்டிங் பயிற்சியாளரான சிம்ரன் மங்காரம், "ஆகன்ஷா போன்ற Gen Zers (1990களின் இறுதியில் இருந்து 2010ன் முற்பகுதியில் பிறந்தவர்கள்) பாலியல், டேட்டிங் மற்றும் உறவுகளுக்கான அணுகுமுறையை கருத்துகள் அல்லது கோட்பாடுகளை பின்பற்றாது அனுபவத்தின் அடிப்படையில் கையாளும் திறன் பெற்றவர்கள்," என்கிறார்.
 
"வாழ்க்கை துணையை கண்டுபிடிப்பது அல்லது ஒருதார மணம் கொண்ட உறவுகளில் நுழைவது போன்ற நீண்டகாலமாக ஆவலுடன் தேடப்படும் டேட்டிங்கைப் பின்பற்றுவதை விட, அவர்களின் தேவைகள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளின் அடிப்படையில் அவர்கள் டேட்டிங் பார்ட்னரை தேர்வு செய்கிறார்கள்," என்றும் சிம்ரன் கூறுகிறார்.
 
ஒருவர் பலருடன் தொடர்பில் இருப்பது அதிகரித்து வரும் நிலையில், Gen Zer தலைமுறையின் டேட்டிங் போக்குகளில், முறையானதாக கருதப்படாத காதல் அல்லது பாலியல் உறவு ஏன் அதிகம் விரும்பப்படுவதாக உள்ளது என்பதை இது ஓரளவு விளக்குகிறது.
 
இன்டிமேசி கியூரேட்டரின் நிறுவனர் ஐலி செகெட்டி, அந்நிறுவனத்தின் டேட்டிங் பயிற்சி வழங்கும் 5 நபர்களில் ஒருவராகவும் உள்ளார். பெண்களுடனான அகன்ஷாவின் டேட்டிங் உறவு சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவருடன் மூன்றுமுறை (கலைக் கூடம், நடைபயணம் மற்றும் டின்னர்) ஐலி செகட்டி டேட்டிங் சென்றுள்ளார்.
 
இந்த டேட்டிங்கின்போது, அகன்ஷாவின் உடல்மொழி எப்படி உள்ளது என்று கருத்து கூறுவது, பதற்றத்தை எப்படி நிர்வகிப்பது மற்றும் எப்படி அழகுபடுத்திக் கொள்வது என ஆலோசனை வழங்குவது ஆகியவற்றில் செகெட்டி ஈடுபட்டார்.
 
"ஒரு நபரிடம் அவர் மீது கைகளை போடலாமா அல்லது முத்தம் கொடுக்கலாமா என்று கேட்பது கடினமானது. ஆனால், இந்த சூழல்களை எதிர்கொள்ள டேட்டிங் பயிற்சிகள் எனக்கு உதவின " என்று அகன்ஷா தெரிவித்தார். இதற்கு பின்னர் பல்வேறு டேட்டிங்களை வெற்றிக்கரமாக எதிர்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.
 
அகன்ஷா போன்ற சிலர், வேகமாக மாறிவரும் டேட்டிங் முறையை உற்சாகம் நிறைந்ததாகவும் உள்ளடக்கியதாகவும் கருதினாலும், அது மற்றவர்களுக்கு கண்ணிவெடியாக இருக்கலாம். குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு டேட்டிங்கிற்கு திரும்புபவர்கள் அல்லது பழமைவாதமாக வளர்க்கப்பட்டவர்கள் ஆகியோர் வேறுபட்ட கருத்துகள் மற்றும் உறவுமுறை எண்ணங்கள் உள்ள நபர்களுடன் டேட்டிங் செய்வது என்பது கடினமாக இருக்கலாம்.
 
மும்பையைச் சேர்ந்த 40 வயதாகும் ராஜீவ்* கடைசியாக 2012ஆம் ஆண்டில் டேட்டிங் சென்றார். ஓராண்டுக்கு முன்பாக மீண்டும் டேட்டிங்கில் ஈடுபடலாம் என்று அவர் முயன்றபோது, Dry Dating (மது இல்லா டேட்டிங்) மற்றும் ghosting(எவ்வித தகவலும் கூறாமல் உறவை துண்டிப்பது) போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதது போன்ற பலவற்றை எதிர்கொண்டார்.
 
எப்போதுமே பெண்களுடன் தொடர்புகொள்வது என்பது கடினமானதாகவே இருந்தது என்று ராஜீவ் கூறுறார்.
 
குழந்தைப் பருவ அதிர்ச்சி சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்கொண்ட அவருக்கு மக்களை நம்புவதும் டேட்டிங்கில் தன்னை பற்றி பேசுவதும் கடினமானதாகவே இருந்தது. டேட்டிங் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அவருடைய அசௌகரியத்தை அதிகப்படுத்தி அவர் தோல்வி அடைந்துவிட்டதாகவே உணர வைத்தது.
 
ஆனால், தனது டேட்டிங் பயிற்சியின் உதவியுடன், பெண்களிடம் எப்படி வெளியே போகலாம், ஊர் சுற்றலாம் என்று கேட்பது மற்றும் ஒருமித்த உடல் நெருக்கம் குறித்த பயிற்சிகளை கற்றுகொண்டார். அவரின் கடினமான கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதற்கும், அவரது உணர்ச்சிகளைக் கண்டறிந்து செயலாக்குவதற்கும், அவற்றைப் பாதுகாப்பான வழியில் வெளிப்படுத்துவதற்கு சிறந்த வழியைக் கண்டறியவும் டேட்டிங் பயிற்சியாளர் உதவினார்.
 
காதலைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் நிராகரிப்பும் அடங்கும் என்பதால், ராஜீவ் தனது துணையை நிராகரிக்கவும் துணையால் நிராகரிக்கப்படுவதை எதிர்கொள்ளவும் கற்பிக்கப்பட்டார். அவரும் அவருடைய டேட்டிங் பயிற்சியாளரும் இதுபோன்ற காட்சியில் நடித்தனர். அப்போது, `உங்கள் மீது எவ்வித காதல் உணர்வும் ஏற்படவில்லை` என ராஜீவிடம் அவரது டேட்டிங் பயிற்சியாளர் தொலைபேசியில் கூறினார்.
 
டேட்டிங்கில் மிகவும் மோசமான பகுதி என்பது நிராகரிப்புதான் என்று ராஜீவ் கூறுகிறார்.
 
"ஆனால், எனக்கு சரிப்பட்டு வராத செயல்களை முடிவுக்கு கொண்டுவருவதும், மற்றவர்களும் இதேபோன்று நினைக்கும்போது அவர்களின் முடிவை மதிப்பதும் சரியானது என்பதை நான் கற்றுக்கொண்டேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
தனது பணியின் நோக்கம், மக்கள் அடுத்தவர்களின் இதயத்திற்குள் நுழைவதற்கு உதவுவது அல்ல, மாறாக தங்கள் இதயத்திற்குள் தாங்களே பயணிக்க உதவுவது என்று செகெட்டி கூறுகிறார்.
 
"இந்த டேட்டிங் பயிற்சியின் முக்கிய அம்சம், டேட்டிங்கில் புலமைப் பெற்றவராக உங்களை மாற்ற உதவுவதற்கு அல்ல. இது உங்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. அதனால் உங்களை வெளிப்படுத்துவதில் நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள்" என்று அவர் கூறுகிறார்.
 
"எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த வகையான நெருக்கத்திற்கும் மென் உணர்வுகள் அவசியம்."
 
* சில நபர்களின் வேண்டுகோள் காரணமாக அவர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.