1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (10:52 IST)

இந்தியாவுடனான ‘திருமண’ உறவை 'லவ் ஜிஹாத்' ஆக நேபாள ஆட்சியாளர்கள் பார்க்கிறார்களா?

நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லை பலவீனமாக இருந்தாலும் எல்லையின் இருபுறமும் வாழும் மக்களுக்கு இடையிலான உறவு வலுவாக இருந்து வந்துள்ளது. ஆனால் உறவுகளின் தளம் இப்போது பலவீனமடைந்து வருகிறது.
 
அதற்கான காரணங்களைத் தேடி நேபாளம் மற்றும் பிகார் எல்லையில் உள்ள பகுதிகளுக்கு நான் சென்றேன்.
 
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவுகளின் மையமாக இருந்த பிர்கஞ்ச், ரக்செளல் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது.
 
பிர்கஞ்ச் மற்றும் ரக்செளலுக்கு பதிலாக டெல்லி மற்றும் காத்மாண்டுக்கு உறவு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
 
பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களின் சைக்கிள்களில் தொங்கும் சாக்குப் பைகள் எல்லையில் கடுமையாகச் சோதனை செய்யப்படுகின்றன.
இந்த காய்கறி பைகளில் பாதுகாப்புப் படையினர் அஃபின் இருக்கிறதா என்று தேடுகின்றனர். சைக்கிளில் பயணிக்கும் இரு தரப்பு தொழிலாளர்களும் தங்கள் சொந்தப் பகுதிகளில் அந்நியர்கள் போலத் தெரியத் தொடங்கியுள்ளனர்.
 
ஆனால் இதையெல்லாம் மீறி காதல் மலர்கிறது. கட்டுப்பாடுகள் காரணமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் மீது தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் காதல் திருமணங்கள் எப்போதுமே கட்டுப்பாடுகளுக்கு எதிரானது.
 
நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான திருமண உறவு சாதாரணமாக நடக்கும் ஒன்று. ஆனால் அது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
 
இது ஜனக மன்னரின் மகள் சீதை மற்றும் அயோத்தியின் இளவரசர் ராமரின் திருமணத்துடன் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. சீதை மற்றும் ராமரின் திருமணம் வரலாற்றில் குறைவாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அது மக்கள் மனதில் பிரபலமாக உள்ளது.
 
லேகா திவ்யேஸ்வரி அதாவது குவாலியர் அரச குடும்பத்தின் மகாராஜா ஜிவாஜிராவ் சிந்தியாவின் மனைவி விஜயராஜேசிந்தியா; ஜம்மு காஷ்மீர் அரசர் ஹரி சிங்கின் மகன் கரண் சிங்கின் மனைவி யசோராஜ்ய லட்சுமி; மாதவராவ் சிந்தியாவின் மனைவி. இவர்கள் அனைவருக்கும் நேபாளத்துடன் தொடர்பு உள்ளது. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள காதல் உறவு கடவுளிடமிருந்து மன்னர்-மகாராஜா மற்றும் பின்னர் தொழிலாளி-விவசாயிகள் வரை செல்கிறது.
 
திருமணத்திற்குப் பிறகு இந்தியாவில் இருந்து நேபாளத்தில் குடியேறிய மகள்கள்
மதுபனியின் சீதா தேவி யாதவ் 15 வயதாக இருந்தபோது அவரது தந்தை, நேபாளத்தின் சிர்ஹாவில் அவரை திருமணம் செய்து கொடுத்தார். அப்போது சீதா யாதவ் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
சீதா யாதவின் கணவர் சந்திரகாந்த் யாதவ் நேபாளி காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவர் 2000வது ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
 
நேபாளத்தில் சிர்ஹாவில் வசிக்கும் சீதா யாதவுக்கு தற்போது 66 வயது.
 
கணவரின் கொலைக்குப் பிறகு, சீதா யாதவ் தானே நேபாள அரசியலுக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு நேபாள அமைச்சராகவும் ஆனார். நேபாள காங்கிரஸில் ஒரு பெரிய தலைவராகவும் அவர் அறியப்பட்டார்.
 
அவரை நேபாளத்தில் திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்தது ஏன் என்று சீதா யாதவிடம் கேட்டேன்.
 
"முன்பு இந்தியாவும் நேபாளமும் வேறு என்ற உணர்வு இருக்கவில்லை. எனது பெற்றோர் வீட்டிலிருந்து எனது மாமியார் வீட்டிற்கு ஆறு கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. என் தந்தைக்கு வீடும் பையனும் பிடித்திருந்தது. எனவே அவர் திருமணம் செய்ய முடிவு செய்தார். யாரை திருமணம் செய்துகொள்ளவேண்டும், எங்கு செய்து கொள்ளவேண்டும் என்று அந்தக் காலத்தில் பெண்களிடம் யார் கேட்டார்கள் என்று சீதா யாதவ் பதில் அளித்தார்.
 
"இப்போது இந்தியாவிலும் நேபாளத்திலும் அதுபோல இல்லை. இப்போது இந்திய மக்கள் தங்கள் மகளை நேபாளத்தில் திருமணம் செய்து கொடுக்க விரும்புவதில்லை. குடியுரிமை பற்றிய பிரச்னை நிலவுகிறது. மாப்பிள்ளை ஊர்வலம் வரும்போது எல்லையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இங்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை வழங்கும் விதிமுறை கொண்டு வரப்பட உள்ளது. ஆனால் இந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார், அவளும் தாயாகிவிட்டாள் என்றால் அவளுடைய நிலைமை என்ன ஆகும் என்று சீதா யாதவ் குறிப்பிட்டார்.
 
எல்லை தாண்டிய காதல்: நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான ‘திருமண’ உறவில் மாற்றம் ஏற்பட்டது ஏன்?
செல்லும் பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமை பெற்று வந்தனர். இருப்பினும் சந்ததியினருக்கான குடியுரிமையைவிட இதில் குறைவான உரிமைகளே உள்ளன. ஆனால் நேபாளத்தின் புதிய குடியுரிமை மசோதாவின் பிரிவு 5 (1) இன் படி, நேபாள ஆண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாட்டுப் பெண், ஏழு ஆண்டுகள் நேபாளத்தில் தொடர்ந்து வாழ்ந்த பிறகுதான் குடியுரிமை பெறுவார். இந்த ஏழு ஆண்டு காலம் கூலிங் பீரியட் என்று அழைக்கப்படுகிறது. ஆயினும் இந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
 
இந்தியாவில்கூட நேபாள சிறுமிகளுக்கு ஏழு ஆண்டுகள் கூலிங் பீரியடுக்கு பிறகுதான் குடியுரிமை கிடைக்கிறது என்று நேபாளம் கூறுகிறது. ஆனால் நேபாள பெண்கள் திருமணமாகி இந்தியா வந்தால், திருமண உறவின் அடிப்படையில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, ஆதார் அட்டையும் வழங்கப்படுகிறது.
 
கூலிங் பீரியட் கொண்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்திய பெண்கள் பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்கிறார் சீதா யாதவ்.
 
"நேபாளத்தில் எதையும் செய்ய குடியுரிமை தேவை. இந்தியாவில் ஆதார் அட்டையுடன் எல்லாம் நடப்பது போல இங்கு நடக்காது. நேபாள அரசியலில் நான் ஒரு கட்டத்தை அடைந்தேன். ஆனால் குடியுரிமைச் சட்டம் காரணமாக என்னால் எந்த மாகாணத்திற்கும் முதலமைச்சராக முடியாது. அதிபராக முடியாது. பிரதமராக முடியாது. சில நேரங்களில் இரண்டாம் தர குடியுரிமை கொடுக்கப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
 
"எனது தாய்நாட்டில் அதாவது இந்தியாவில் பலர் என் மீது பாகுபாடு காட்டப்பட்டதாக உணர்கிறார்கள். ஆனால் அந்த மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். சோனியா காந்தியை இந்தியாவில் பிரதமராக அனுமதித்திருந்தால், அது நேபாளத்தில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தியிருக்கும்," என்று அவர் கூறினார்.
 
'சோனியா காந்தியை பிரதமர் ஆவதற்கு அனுமதிக்காத இந்திய மக்கள், நீங்கள் நேபாளத்தின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்' என்று நேபாள நாடாளுமன்றத்தில்கூட மலையகத் தலைவர்கள் கிண்டலாகச் சொல்கிறார்கள். ஆர்பாட்டம் செய்து சோனியா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். நேபாளத்தில் உள்ள அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் நேரடித் தாக்கம் நேபாளத்தில் ஏற்பட்டது. நேபாளம் வந்த இந்தியப் பெண்கள் இந்த உயரத்தை அடைந்துவிட்டனர் என்று மக்கள் சான்றுகளைக் கொடுக்கத் தொடங்கினர். ஆனால் நேபாளப் பெண்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு எவ்வளவு தூரத்தை எட்டினார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது."
 
இந்தியாவிலிருந்து மாப்பிள்ளை ஊர்வலம் நேபாளத்தை எவ்வாறு அடைகிறது?
நேபாளத்தின் தராய் பகுதியில் இந்தியாவுடன் திருமண உறவை வைத்துக்கொண்டிருக்காத வீடு எதுவும் இருக்காது.
 
நேபாள எல்லையில் உள்ள இந்தியாவின் எல்லை நகரங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டின் மகிழ்ச்சியோ அல்லது சோகமோ, நேபாளத்தின் ஏதாவது ஒரு வீட்டில் நிச்சயமாக உணரப்படும்.
பிர்கஞ்ச் நேபாளத்தின் மும்பை என்று அழைக்கப்படுகிறது. நேபாளத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் 65 சதவிதத்திற்கும் அதிகமானவை பிர்கஞ்ச் நில துறைமுகங்கள் மூலம் நடைபெறுகின்றன.
 
பிர்கஞ்ச் சீர்குலைந்தால், நேபாளம் முழுவதும் ஸ்தம்பித்துவிடும். பிர்கஞ்ச் நேபாளத்தின் தெற்கு எல்லை நகரம்.
 
இது பிகாரில் உள்ள ரக்சௌலுக்கு அருகில் உள்ளது. பிர்கஞ்ச் மற்றும் ரக்சௌலை ஒரு வாயில்தான் பிரிக்கிறது.
 
இரு நாடுகளுக்கு இடையேயான நடமாட்டத்தை இந்த வாயிலின் பாதுகாப்பு படையினர் மற்றும் சுங்க அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
 
மாலை ஏழு மணி. பிகாரில் உள்ள மோதிஹாரியில் இருந்து ஒரு மாப்பிள்ளை ஊர்வலம் இந்த வாயிலில் நின்றது.
 
முன்புறம் மணமகனின் கார். பின்புறம் மாப்பிள்ளை வீட்டார் பயணிக்கும் பேருந்து.
 
24 வயதான மணமகன் தீபக் காரில் அமர்ந்துள்ளார். அவரது தந்தை ராஜு பிரசாத், நேபாள சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
 
மாப்பிள்ளை வீட்டார் அந்த வாயிலுக்கு வந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது.
 
நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் உள்ள பாரியார்பூருக்கு இந்த ஊர்வலம் செல்கிறது.
 
எல்லையில் இப்போது நிர்வாகத்துறையின் தலையீடு அதிகரித்திருப்பதைப் பார்த்து ராஜு பிரசாத் சற்று எரிச்சலுடன் இருக்கிறார்.
 
"இப்போது விஷயங்கள் மிகவும் சிக்கலாகி வருகின்றன. நேபாளத்திற்குச் செல்வதற்கு நாம் செய்யவேண்டிய அளவிற்கு நேபாளிகள் இந்தியாவுக்கு வருவதற்குச் செய்ய வேண்டியதில்லை. இந்தியா மற்றும் நேபாளம், இரண்டு அரசுகளுக்கும் இவை வெவ்வேறு நாடுகளாக இருக்கலாம். ஆனால் எல்லையில் வாழும் மக்கள் இரு நாட்டு அரசுகள் போல நினைப்பதில்லை," என்று அவர் கூறினார்.
 
வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ளப் போவது போலத் தெரிகிறதா என்று மாப்பிள்ளை தீபக்கிடம் கேட்டேன்.
 
"வெளிநாட்டில் இருப்பது போல எப்படித் தோன்றும்? என் வீட்டில் இதற்கு முன்னும் நேபாளத்தில் பல திருமணங்கள் நடந்துள்ளன. என் மாமாக்களுக்கும் நேபாளத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்தியாவும் நேபாளமும் ஒன்றுதான். எல்லோரும் போஜ்புரியும் இந்தியும் பேசுகிறார்கள்," என்று அவர் பதில் அளித்தார்.
 
எல்லையில் தீவிர கண்காணிப்பு
நேபாளத்தில் உள்ள பிர்கஞ்சிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிர்சியா கிராமத்தில் வசிப்பவர் நீரஜ் படேல்.
 
பிகாரின் ரக்சௌலில் இருந்து அவரது மருமகள் நிர்மலா படேலின் மாப்பிள்ளை ஊர்வலம் வரவுள்ளது.
 
திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் நீரஜ். இதற்காக சிறியவை, பெரியவை என ஒவ்வொரு பொருளையும் வாங்கி வருகிறார்.
 
அதிகம் கடன் வாங்காமல் இருப்பதற்காகப் பொருட்களை நியாயமான விலையில் பெறவேண்டும் என்பதே நீரஜின் முயற்சி. அதனால்தான் இந்தியாவில் இருந்து பொருட்களைக் கொண்டு வர அவர் முயற்சி செய்கிறார்.
 
நீரஜ் ரக்சௌலில் இருந்து அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வரச் சென்றிருந்தார். ஆனால் நேபாள சுங்க அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி, விதிகளின்படி எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
 
விதியின் கீழ் கொண்டு வருவது என்றால் சுங்க வரி தொகையைச் செலுத்த வேண்டும். நீரஜ் இதைச் செய்தால் வரிக்குப் பிறகு பொருட்களின் விலை நேபாளத்தில் கிடைக்கும் விலைக்குச் சமமாக இருக்கும்.
இந்தியாவில் இருந்து பொருட்களைக் கொண்டு வரவில்லை என்றால் மொத்த திருமணத்தில் குறைந்தது ஒன்றரை லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்கிறார் நீரஜ்.
 
"எங்களுக்கு இந்தியாவுடன்தான் எல்லா உறவுகளும் உள்ளன. நாங்கள் அவ்வப்போது பயணம் செய்து வருகிறோம். நாங்கள் கடத்தல்காரர்கள் அல்ல. வீட்டில் திருமணம் இருக்கிறது. பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியுங்கள் என்று நேபாள பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. திருமண அழைப்பிதழையும் காட்டினோம். ஆனாலும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அனுமதி வழங்க முடியாது எனக் கூறுகின்றனர். இந்தத் திருமண அழைப்பிதழை நாங்கள் கடத்தல் செய்ய அச்சடிக்கவில்லை. நாங்கள் ஏழைகள். கல்யாணத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் கஷ்டப்பட்டு சேமிக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
பல பிரச்னைகள் இருப்பதால் தற்போது இந்தியாவில் திருமணம் செய்வதை மக்கள் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர் என்றும் நீரஜ் கூறினார்.
 
நேபாள சுங்க அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'இந்தியாவில் இருந்து எல்லாவற்றையும் கொண்டு வர விலக்கு அளித்தால், நேபாளம் எப்படிச் செயல்படும்' என்று பதில் கேள்வி கேட்டனர்.
 
இங்குள்ள பொருளாதாரம், வரி மற்றும் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் மூலம் இயங்குகிறது. எனவே பல விஷயங்களை விருப்பமில்லாமல் செய்ய வேண்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
நேபாளம் நிலம் சூழ்ந்த நாடு. இது மூன்று பக்கங்களில் இருந்து இந்தியாவாலும் வடக்கில் திபெத் அதாவது சீனாவாலும் சூழப்பட்டுள்ளது.
 
சீனாவுடன் எல்லை இருந்தாலும், உயரமான மலைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் இருப்பதால் அந்த நாட்டுடன் தொடர்பு எளிதானதல்ல. அதனால்தான் நேபாளம் இந்தியாவை அதிகம் சார்ந்துள்ளது.
 
நேபாளம் தனது மொத்த வர்த்தகத்தில் 65% க்கும் அதிகமாக இந்தியாவுடன் செய்கிறது.
 
நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே சுமார் 1800 கிலோமீட்டர் நீள எல்லை உள்ளது. இதில் 1250 கி.மீட்டருக்கு நில எல்லை உள்ளது.
 
திருமணங்களின் எண்ணிக்கை குறைகிறது
நேபாளத்தில் இந்தியாவில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் எத்தனை திருமணங்கள் நடக்கின்றன என்ற தரவுகளைச் சேகரிக்க எந்த அமைப்பும் இல்லை.
 
ஆனால் திருமணத்தின் அடிப்படையில் நேபாளத்தில் அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமையைப் பெறுபவர்களிடமிருந்து ஏறக்குறைய ஒரு கணிப்பைச் செய்ய முடிகிறது.
 
பாவேஷ் ஜா நேபாளத்தின் சிர்ஹா மாவட்ட அலுவலகத்தில், செக்‌ஷன் அதிகாரியாக உள்ளார்.
 
திருமண உறவின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமையை வழங்கும் பணியை அவர் செய்கிறார்.
 
2017ஆம் ஆண்டு முதல் நேபாளத்தின் எல்லா மாவட்ட அலுவலகங்களின் தரவுகளும் கணினிமயமாக்கப்பட்டதாக பாவேஷ் ஜா கூறுகிறார்.
 
அதனால்தான் 2017க்குப் பிறகு புள்ளிவிவரங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. நேபாளத்தின் சிர்ஹா மாவட்டத்தில் 2017 ஏப்ரல் முதல் இப்போது வரை 3913 இந்தியப் பெண்கள் திருமணத்தின் அடிப்படையில் குடியுரிமை பெற்றுள்ளனர்.
 
கடந்த ஆறு ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது திருமண எண்ணிக்கை நிலையாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இது அதிகரித்திருக்க வேண்டும் என்று பாவேஷ் ஜா கூறுகிறார்.
 
நிலையானதாகத் தெரிந்தாலும், தற்போது திருமணங்கள் வேகமாகக் குறைந்து வருகின்றன என்பதுதான் உண்மை என்கிறார் பாவேஷ்.
 
2017 ஏப்ரல் முதல் தற்போது வரை, சிர்ஹா மாவட்டத்தில் திருமண உறவின் அடிப்படையில் பெறப்பட்ட குடியுரிமை
 
நேபாளத்தின் சிர்ஹா அல்லது பிர்கஞ்ச், மைதிலி மற்றும் போஜ்புரி பகுதிகளில் மக்கள்தொகை அதிகரித்த விகிதத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவுடனான திருமணங்கள் குறைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் மற்ற வயதினருடன் ஒப்பிடும்போது இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆண்டுதோறும் திருமணங்கள் அதிகரித்திருக்க வேண்டும். 2021 ஏப்ரல் முதல், 2022 ஏப்ரல் வரையிலான எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் 2020ஆம் ஆண்டில் கோவிட் காரணமாக ஊரடங்கு இருந்ததால் மிகக் குறைவான திருமணங்களே நடந்தன," என்று பாவேஷ் ஜா கூறுகிறார்.
 
"இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த ஆண்டு இவ்வளவு திருமணங்கள் நடந்தன என்று நாம் கூற முடியாது. சான்றாக, சிர்ஹாவில், ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை திருமண உறவின் அடிப்படையில் 960 பேர் குடியுரிமை பெற்றனர். குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்தக் காலக்கட்டத்தில்தான் திருமணம் நடந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்களின் திருமணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட நடந்திருக்கலாம். இத்தனை நாட்களுக்குப் பிறகு குடியுரிமை பெற்றிருக்கலாம்."
 
அதேபோல தனுஷா மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமண உறவுகளின் அடிப்படையில் பெறப்பட்ட குடியுரிமையின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் அதில் தெளிவான சரிவு ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
 
தனுஷாவின் மாவட்ட நிர்வாக அலுவல தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமண உறவின் அடிப்படையில் இந்தியப் பெண்கள் பெற்ற குடியுரிமை பின்வருமாறு:
 
1479 - ஜூலை 2017 முதல் ஜூலை 2018 வரை
1086 - ஜூலை 2018 முதல் ஜூலை 2019 வரை
801 - ஜூலை 2019 முதல் ஜூலை 2020 வரை
889- ஜூலை 2020 முதல் ஜூலை 2021 வரை
1120 - ஜூலை 2021 முதல் ஜூலை 2022 வரை
டென்மார்க்கில் நேபாள தூதராக விஜயகாந்த் கர்ணா இருந்துள்ளார்.
 
அவர் காத்மாண்டுவில் 'சமூக உள்ளடக்கம் மற்றும் கூட்டாட்சி மையம்' (CEISF) என்ற பெயரில் ஒரு சிந்தனைக் குழுவை நடத்தி வருகிறார்.
 
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லை தாண்டிய உறவுகள் குறித்த ஆய்வுக் கட்டுரையை கடந்த ஆண்டு CEISF வெளியிட்டது.
 
இந்த ஆராய்ச்சியில், எல்லை தாண்டிய திருமணங்கள் பற்றிய ஓர் அத்தியாயத்தையும் அவர் வைத்திருந்தார்.
 
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான திருமணங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக CEISF தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.
 
"திருமணங்கள் குறைந்து வருகின்றன. நாங்களும் அதைத் தனிப்பட்ட முறையிலும் உணர்கிறோம். என் தந்தைக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர். என் அம்மா உட்பட எல்லா சித்திகளும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எனது இரு சகோதரர்களும் இந்தியாவில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அடுத்த தலைமுறையினர் நேபாளத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். என் அம்மா பிகாரில் உள்ள தர்பங்காவை சேர்ந்தவர். திருமணமான 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு நேபாள குடியுரிமை கிடைத்தது. முன்பு குடியுரிமை இல்லாவிட்டாலும் வாக்களிக்கும் உரிமை இருந்தது. ஆனால் நேபாள தேசியவாதத்தின் புதிய வடிவத்தில் அது ரத்து செய்யப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.
 
இந்தியாவிலும் நேபாளத்திலும் உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு இடையிலான திருமணங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக அவர் கூறினார். ஓபிசி, தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினருக்கு இடையே திருமணங்கள் இன்னும் நடைபெற்று வருகின்றன. ஆனால் முன்பைவிடக் குறைவாகவே உள்ளன.
 
"நேபாளத்தின் சமவெளியில் பல பகுதிகளில் உள்ள சாதிகளில் மக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஆண்- பெண் தேடி உ.பி-பிகார் செல்கிறார்கள். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இடையே திருமண உறவு அதிகம் காணப்படுகிறது," என்கிறார் விஜயகாந்த் கர்ணா.
 
"பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தபட்டவர்கள் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் வேலை செய்கிறார்கள். அங்கு வேலை செய்வதால் அவர்களிடம் நல்ல பணம் இருக்கிறது. இந்தியாவில் தங்கள் பெண்களுக்காக மாப்பிள்ளை தேடும் தந்தைகள் இப்போது இந்த இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்," என்று 'நேபாளம்-இந்தியா, தற்காலச் சூழலில் எல்லை தாண்டிய உறவுகள்', என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையில் CEISF குறிப்பிட்டுள்ளது.
 
"உபி-பிகாரில் இருந்து இந்தியாவின் பிற பெரிய நகரங்களுக்கு உயர் சாதியினரின் விரைவான இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தை ஒட்டியுள்ள பிகார் மற்றும் உ.பி.யின் எல்லைப் பகுதிகளிலிருந்து உயர் சாதியினர் வெளியேறுவதால் நேபாளத்தில் திருமணங்கள் குறைந்து வருகின்றன," என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
 
"முன்பு நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லையில் இருந்த உறவு இப்போது டெல்லி மற்றும் காத்மாண்டுவில் இருந்து இயங்குகிறது. முன்னதாக இந்திய-நேபாள உறவுகள் ரக்செளல் மற்றும் பிர்கஞ்ச், சேத்தா, கோரக்பூர் மற்றும் பஹ்ராவா, ஃபர்பிஸ்கஞ்ச் மற்றும் விராட்நகர் ஆகியவற்றுடன் இருந்தன. இந்த உறவு தற்போது டெல்லிக்கு மாறியுள்ளது. 1950களை பார்த்தால் எல்லை என்பது இல்லாதது போலவே தோன்றும். மக்கள் வந்து போவதை யாரும் கேட்கக்கூட மாட்டார்கள். இங்கிருந்து நெற்பயிர்களைக் கொண்டு சென்று அங்கிருந்து சில பொருட்களை வாங்குவார்கள். பிர்கஞ்சில் உரம் இல்லை. எனவே ரக்சௌலில் இருந்து சைக்கிள் மூலம் கொண்டு வருவார்கள். இப்போது அந்த உறவு சந்தைக்குப் போய்விட்டது. எல்லையில் அரசின் இருப்பு அதிகரித்ததால், இயற்கை உறவுகள் பலவீனமடைந்தன," என்று விஜயகாந்த் கர்ணா குறிப்பிட்டார்.
 
அரசு கண்காணிப்பு அதிகரிக்கப் பல காரணங்கள் உள்ளன. நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் 'மக்கள் போர்' தொடங்கியபோது, எல்லா இடங்களிலும் அடையாள அட்டையைச் சரிபார்க்கும் நிலைமை உருவானது.
 
விமானப் பயணத்தில் பாஸ்போர்ட் கேட்கப்பட்டது. கலாசார உறவுகள், திருமணம் மற்றும் மதத்துடன் தொடர்புடையதாக இருந்தன. ஆனால் இப்போது அது பொருளாதார செழிப்புடன் தொடர்புடையதாகிவிட்டது.
 
"நேபாளத்தின் பாதுகாப்புக் கண்ணோட்டமும் மாறத் தொடங்கியது. நேபாள ஆட்சியாளர்கள், தராய் பகுதியில் வாழும் மக்கள் மற்றும் இந்தியாவையும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கத் தொடங்கினர். தராய் மக்களுக்குக் குடியுரிமைப் பிரச்னை மிகப் பெரிய அளவில் இருந்தது. குடியுரிமை சட்டத்தில் நேபாளி தெரியாதவர்களுக்கு குடியுரிமை கிடைக்காது என்ற ஒரு விதி முன்பு உருவாக்கப்பட்டது. தராய் பகுதியில் நேபாளி மொழி தெரிந்தவர்கள் மிகக் குறைவு. தராய் மக்கள் போஜ்புரி, மைதிலி, அவதி மற்றும் இந்தி பேசுவார்கள்," என்று விஜய்காந்த் கர்ணா தெரிவித்தார்.
 
மூன்று வகையான குடியுரிமை
நேபாளத்தின் பிரதிநிதிகள் சபைக்கு மாதேஸில் உள்ள சப்தாரி-2 தொகுதியில் இருந்து சி.கே.ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
ராவத், ஜன்மத் கட்சியின் தலைவர். நேபாளத்தின் தற்போதைய பிரசண்டா அரசில் ஓர் அங்கமாக உள்ளார்.
 
அரசமைப்பில் மூன்று வகையான குடியுரிமை முறை உள்ளது என்று ராவத் கூறுகிறார்.
 
"ஒன்று வம்சாவளி குடியுரிமை. இரண்டாவது பிறப்பு குடியுரிமை. மூன்றாவது திருமண உறவின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமை. அரசமைப்பு மூன்று வகையான குடிமக்களையும் பாகுபடுத்துகிறது. இவை அனைத்தும் மாதேசிகளை அச்சுறுத்தலாகக் கருதி செய்யப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் ஒரு இந்தியப் பெண் திருமணமாகி நேபாளத்திற்கு வருகிறார் என்றால், அவர் குடியுரிமைக்காக போராட வேண்டும். எல்லா குடிமக்களும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அரசமைப்பிலேயே பாரபட்சமான விதிமுறைகள் உள்ளன்," என்றார் அவர்.
 
சிகே ராவத் பிகாரில் உள்ள பூர்னியாவில் திருமணம் செய்து கொண்டார்.
 
"எல்லையில் கடுமையான கெடுபிடி நிலவுகிறது. ஒரு பெண் தனது தாய் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்றால் அவருக்கு இந்திய ரூபாய் வேண்டும். ஆனால் அவருக்கு அது கிடைப்பதில்லை. எல்லையில் மக்கள் மிகவும் இழிவான முறையில் பேசுகிறார்கள். வாகனப் போக்குவரத்தை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்தியாவுடனான எல்லை உறவு மாறி வருகிறது. நேபாளத்தின் பாதுகாப்புப் படைகள் இந்தியாவில் இருந்து பொருட்களைக் கொண்டு வர அனுமதிப்பதில்லை. இப்போது மக்கள் இந்தியாவில் திருமணம் செய்ய விரும்புவதில்லை. இந்தியாவில் திருமணம் செய்துகொண்டால் இங்குள்ள அதிகார வர்க்கம் அவரின் அடையாளத்தை இந்தியாவுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறது," என்று ராவத் கூறினார்.
 
இந்திய பெண்களுக்கு இரண்டாம் தர குடியுரிமை
நேபாளத்தில் திருமணம் செய்து கொள்ளும் இந்தியப் பெண்கள் அரசமைப்பில் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்று நேபாளத்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவாலியிடம் கேட்டோம்.
 
"ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த அரசமைப்பு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த எந்தப் பெண்ணும் நேபாளத்தில் பிரதமர் அல்லது அதிபராக வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்