1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (14:44 IST)

முட்டை தினம்: நாட்டுக் கோழி முட்டையில் சத்து அதிகமா?

Boiled eggs
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, நாட்டு மாட்டு பால், நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றுக்கு அதிக கவனம் கிடைக்கத்தொடங்கியது. விலை அதிகமாக இருந்தாலும், லெகான் கோழி முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் சத்து அதிகம் என்ற எண்ணத்தில் அவற்றை வாங்குவதாக சிலர் சொல்கிறார்கள்.

உண்மையில் நாட்டு கோழி முட்டையில் சத்து அதிகமாக உள்ளதா, அவை ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன? இரண்டு முட்டைகளிலும் உள்ள சத்துகளில் என்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை விரிவாக பேசுகிறது இந்த கட்டுரை.

லெகான் கோழி முட்டை மற்றும் நாட்டுகோழி முட்டை இரண்டிலும் என்ன விதமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன என ஓசூரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியின் தலைவர் எஸ் டி செல்வத்திடம் கேட்டோம்.

''ஒரு முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், மாவுசத்து, கனிமசத்துகள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து ரீதியாக பார்த்தால் இரண்டு வகை முட்டையிலும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. லெகான் முட்டையை விட நாட்டுகோழி முட்டையில் ஒரு சதவீதம் கொழுப்பு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனால் அதுவும் கோழி வளரும் இடங்களை பொறுத்து வேறுபடும், எல்லா இடங்களிலும் கிடைக்கும் நாட்டுகோழி முட்டைகளிலும் கொழுப்புசத்து அதிகம் என்று சொல்லமுடியாது,'' என்கிறார்.

''லெகான் கோழிமுட்டை 50 முதல் 55 கிராம் வரை எடை கொண்டது. நாட்டு கோழி முட்டை 40 கிராம் வரை இருக்கும். லெக்கான் கோழிமுட்டை வெள்ளை நிறத்திலும், நாட்டுகோழி முட்டை பழுப்பு நிறத்திலும் இருப்பதற்கு அந்த கோழிகளின் உடலில் சுரக்கும் ஒருவித நிறமிதான் காரணம். நாட்டுகோழி முட்டையில் ஒருவித நறுமணம் இருக்கும், அது லெகான் முட்டையில் இருக்காது. வேறு வித்தியாசங்கள் இருப்பதாக ஆய்வுகள் எதிலும் நிரூபணம் ஆகவில்லை,''என்கிறார்.
Eggs

மேலும், ''ஒரு மனிதனுக்கு ஒரு நாளுக்கு தேவையான புரதசத்து 50 கிராம். அதில் 50 சதவீதம் ஒரு முட்டையில் கிடைத்துவிடும் என்பதால்தான் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், உடல் நலிவுற்றவர்கள் மற்றும் மூத்தக் குடிமக்கள் தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அது இரண்டு வகை முட்டைகளிலும் கிடைக்கும். அதில் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை என்பதால், எந்த முட்டை எடுத்துக்கொண்டாலும் ஒரே விதமான சத்துகள்தான் கிடைக்கும்,''என்கிறார்.

லெகான் கோழி முட்டையிட ஊசி செலுத்தப்படுகிறதா?

பொதுவான சந்தேங்களில் ஒன்று லெகான் கோழிக்கு ஹார்மோன் ஊசி போடுவதால் அதிக முட்டைகளை இடுகிறதா என்பது. அது உண்மையா என பேராசிரியர் செல்வம் விளக்குகிறார்.

''முட்டை இடுவது என்பது ஒரு கோழிக்கு இயற்கையான ஒரு செயல். எந்த வகையான கோழியாக இருந்தாலும், அது முட்டையிடுவதற்கு சேவல் தேவை இல்லை. நாட்டு கோழியாக இருந்தாலும், லெகான் கோழியாக இருந்தாலும்,16 வாரம் ஆன நிலையில், ஒரு கோழி முட்டை இடும். அதனால், ஹார்மோன் ஊசி போடுவதால் பண்ணை கோழிகள் அதிக முட்டைகள் போடுவதாக கூறுவது தவறு. லெகான் கோழி இனம் அதிக முட்டை இடும் கோழி இனமாக இருப்பதால், அதனை பண்ணைகளில் அதிகமாக வளர்க்கிறார்கள்,''என்கிறார்.

'ஒரு வேளை, உங்களுக்கு கோழி இடும் முட்டைகள் மீண்டும் குஞ்சாக வேண்டும் என்ற தேவை இருந்தால், சேவல் தேவை. அதாவது சேவலோடு சேர்ந்த பின் ஒரு கோழி முட்டையிட்டால், அது கருவுள்ள முட்டையாக இருக்கும். சேவல் இல்லாமல் கோழி போடும் முட்டை குஞ்சாகாது. ஆனால் ஒரே கோழி சேவலோடு சேர்ந்த பிறகு இடும் முட்டை, சேவல் இல்லாமல் இடும் முட்டை என எந்த முட்டையை நீங்கள் சாப்பிட்டாலும் அதில் வித்தியாசம் இல்லை,'' என்கிறார்.

''ஒரு முட்டை கருவாக வேண்டும் என்றால்தான் ஹார்மோன் சுரக்கவேண்டும். முட்டை வெறும் முட்டையாகவே விற்பனைக்கு கொண்டுசெல்ல ஹார்மோன் ஊசி போடத்தேவையில்லை. ஒருவேளை அது போன்ற ஊசி செலுத்துவதாக இருந்தால், குறைந்தபட்சம் ரூ.300-ரூ.400 ஒரு ஊசிக்கு செலவாகும், அந்த செலவு, தீனிக்கு ஒரு கிலோவுக்கு ரூ.37வரை ஆகும். இத்தனை செலவுகளை செய்து, முட்டையை ரூ.5க்கு விற்றால் அதில் லாபம் கிடைக்காது. அதில் முதலீட்டிற்கு மோசமாகும் என்பதால், ஹார்மோன் ஊசி செலுத்தி முட்டை இட வைக்கிறார்கள் என்பது தவறான புரிதல்,'' என்கிறார் செல்வன்.

நாட்டுக்கோழி முட்டை உயிருள்ளது, லெகான் முட்டை உயிரில்லாத முட்டை என்பது சரியா?

''முட்டைகளில் மூன்றுவிதம் உள்ளன. லெகான் கோழி முட்டை, நாட்டு கோழி முட்டை, இனக்கலப்பு செய்யப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழி முட்டை. லெகான் கோழி ஒரு ஆண்டில் சுமார் 340 முட்டைகள் வரை இடும், வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டு கோழி சுமார் 70 முதல் 80 முட்டைகள் வரை இடும். தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழி ஆண்டுக்கு 140 முட்டைகள் வரை இடும். இவை மூன்றுக்கும் அளிக்கப்படும் தீனி என்பது வித்தியாசமாக இருக்கும். மற்றபடி உயிருள்ள முட்டை, உயிரற்ற முட்டை என வித்தியாசம் இல்லை,''என்கிறார் செல்வன்.
Eggs

''லெகான் கோழி பண்ணைகளில் வளர்க்கப்படுவதால், அவற்றுக்கு கடலை புண்ணாக்கு, சோயா புண்ணாக்கு, நெல் மற்றும் கோதுமை உமி, மக்காச்சோளம் மற்றும் வைட்டமின், பி காம்ப்லெக்ஸ் மருந்துகள் தரப்படும். மருத்துவர்களால் சான்று அளிக்கப்பட்ட மருந்துகள்தான் தரப்படும். நாட்டு கோழிகள் கிராமங்களில் தாமாக உணவை தேடி உண்ணும் என்பதால், தாவரங்கள், புழுக்கள், வீட்டில் வைக்கப்படும் தானியங்கள், சாதம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளும். தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழிகளுக்கு தீனி வைப்பவர்கள், தங்களால் தீனிக்கு எவ்வளவு செலவு செய்யமுடியுமோ அதற்கு ஏற்றவாறு இயற்கை பொருட்களை அளிப்பார்கள். ஆனால் மூன்று கோழிகளில் எந்த கோழியின் முட்டையிலும் தனிச் சிறப்பான ஊட்டச்சத்து அடங்கியுள்ளது என்று கூறமுடியாது,'' என்கிறார் செல்வன்.

நாட்டு கோழி முட்டைகள் வணிக ரீதியாக தயாரிக்கப்படுகின்றவா?

லெகான் முட்டையை போலவே நாட்டுக்கோழி முட்டைகளும் அதிக அளவில் கிடைக்கின்றவா என்றும் சந்தையில் கிடைக்கும் முட்டையில் கலப்படம் உள்ளதா என்று பேராசிரியர் செல்வத்திடம் கேட்டோம்.

''நாட்டு கோழி முட்டைகள் என்றால் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டு ரக கோழிகள் இடும் முட்டை. ஆனால் இன்று பரவலாக சந்தைகளில் கிடைக்கும் முட்டைகள் அனைத்தும் நாட்டு கோழி முட்டையா என்று உறுதியாகக் கூறமுடியாது. பலரும் நாட்டுக் கோழி முட்டை சாப்பிடவேண்டும் என்று முடிவுசெய்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு முட்டை உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் அதன் விலையும் அதிகமாக உள்ளது. கலப்பு இன நாட்டுக்கோழி முட்டைகளை உற்பத்தி செய்துதான் பலரும் விற்கிறார்கள்,''என்கிறார்.

மேலும், ஒரு சிலர், லெகான் கோழி முட்டையை காபி டிகாஷனில் வைத்து, பழுப்பு நிறம் ஏற்றுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதனால், நாம் கடைகளில் வாங்கும் முட்டைகள் உண்மையான நாட்டு கோழி முட்டைகளா என்று சொல்லமுடியாது. கிராமங்களில் இன்றளவில் வீடுகளில் முட்டைகளை விற்கிறார்கள். அவை ஓரளவு நம்பகமாக இருக்கலாம்,'' என்கிறார் அவர்.

முட்டை தயாரிப்பு பற்றி பேசுகையில், ''உலக அளவில், முட்டை தயாரிப்பில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய அளவில், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகியவைதான் முட்டை தயாரிப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் சராசரியாக ஓர் ஆண்டுக்கு சுமார் 103 பில்லியன் (10,300கோடி) முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில், 88 சதவீதம் லெகான் முட்டை, 11 சதவீதம் நாட்டுக்கோழி முட்டை மற்றும் ஒரு சதவீதம் வாத்து முட்டைகள் அடங்கும்,''என்கிறார் அவர்.

இந்திய அளவிலும், நாட்டுக் கோழி முட்டைகளின் கிடைக்கக்கூடிய தன்மை என்பது குறைவுதான் என்பதால், உங்களுக்குத் தெரிந்த இடத்தில் கிடைத்தால் அதை எடுத்துக்கொள்ளலாம், இல்லையெனில், அதிக பணம் கொடுத்துதான் நாட்டுக் கோழி முட்டை வாங்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என விளக்குகிறார் அவர்.

முட்டையை எப்படி சாப்பிட்டால் முழு சத்து கிடைக்கும்?

''பொதுவாக, முட்டை வாங்கியவுடன் அதிகபட்சமாக ஒரு வாரத்தில் சாப்பிடவேண்டும். இல்லையெனில், அதன் உயிர்சத்துக்கள் குறையதொடங்கும், பின்னர் கெட்டுபோகும் என்பதால், எந்த முட்டையாக இருந்தாலும் அவ்வப்போது வாங்கி பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதிலும், வேக வைத்து சாப்பிட்டால்தான் அதன் முழுசத்தும் நமக்கு கிடைக்கும்.

நாட்டுக் கோழி முட்டையில் கூட, நீங்கள் ஆம்லெட், வறுவல் என விதவிதமாக சாப்பிட்டால், அதன் முழுசத்தும் கிடைக்காது. நான்றாக வேகவைத்து உடனே சாப்பிடுவது சாலச்சிறந்தது,''என்கிறார் செல்வன்.

முட்டை வியாபாரிகள் சொல்வது என்ன?

நாமக்கல் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியிடம் முட்டை விற்பனையில் நாட்டு கோழி முட்டைக்கான இடம் பற்றி கேட்டோம்.

''நாட்டுகோழி வளர்ப்பவர்கள் முட்டைகளை முன்பு போல சந்தைகளுக்கு பெரும்பாலும் கொண்டுவருவதில்லை. நாட்டு கோழி முட்டைகளை விற்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. கலப்பு இன நாட்டுகோழி முட்டைகளும் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால், நாட்டு கோழியைவிட லெகான் முட்டையின் எடை அதிகம். இருந்தபோதும் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால், நாட்டுகோழி முட்டையை ரூ.8 முதல் 10 வரை விலை வைத்து விற்கிறார்கள். லெகான் முட்டையை ரூ.5க்கு வாங்குவது அதிக விலை என்று மக்கள் கருதுகிறார்கள். அதனால், நாட்டுகோழி முட்டைக்கு என தனியாக ஒரு சந்தை உருவாகியுள்ளது,''என்கிறார் சுப்பிரமணி.

''மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலரும், இரண்டு முட்டைக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை என சொல்லிவிட்டார்கள். ஆனால், பரவலாக மக்களிடம் நாட்டுகோழி முட்டைதான் சிறந்தது என்ற எண்ணம் இருப்பதால், ஒரு சிலர், அதை வியாபாரமாக செய்ய தொடங்கிவிட்டார்கள்,''என்கிறார்.

நாட்டு கோழி முட்டைகளுக்கு அதிகரிக்கும் தட்டுப்பாடு

நாட்டு கோழி முட்டை வியாபாரத்தால் தான் லாபகரமாக தொழில் செய்வதாக கூறுகிறார் சென்னையை சேர்ந்த செந்தமிழ் செல்வி.

''நாங்கள் மளிகை கடை நடத்திவந்தோம். ஆனால் நாட்டு கோழி முட்டைக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால், அதற்கென தனி கடை தொடங்கிவிட்டோம். லெகான் முட்டையோடு, நாட்டு கோழி முட்டையை ஏஜென்ட் மூலமாக வாங்கி விற்கிறோம், எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. ஒரு நாளில் சுமார் 250 நாட்டு கோழி முட்டைகள் விற்கிறோம். லெகான் முட்டை சுமார் 300 விற்கிறோம். நாட்டு கோழி முட்டைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரு சிலர், நாட்டு கோழி முட்டை விலை அதிகம் என்பதால் அதை குழந்தைகளுக்கும், லெகான் முட்டையை பெரியவர்களுக்கும் வாங்கிக்கொள்கிறார்கள்,'' என்கிறார் செந்தமிழ் செல்வி.