வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (19:10 IST)

பஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி

பஹாமாஸ் தீவுகளில் இதுவரை டோரியன் புயலால் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


 
பஹாமஸ் பிரதமர், ஹுபெர்ட் மின்னிஸ் புயலின் தாக்கம் அதிகம் இருந்த வட கிழக்கு தீவான அபாகோவில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளார்.
 
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கூற்றுப்படி, சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்திருக்கும் என கருதப்படுகிறது.


 
டோரியன் புயல் அட்லாண்டிக் கடலில் ஏற்படும் இரண்டாவது தீவிர புயலாகவும், பயங்கர புயலாகவும் இருக்கும் என பிரதமர் மின்னிஸ் கூறியுள்ளார்.
 
மக்கள் பீதியில் உயரமான பகுதிகளை நோக்கி செல்கின்றனர். வீதிகளில் தண்ணீர் தேங்கி, மரங்கள் ஆங்காங்கே சரிந்து கிடக்கின்றன. இவையனைத்தும் அந்த பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரிகிறது.
 
பஹாமஸ் வரலாற்றில் மிகக் கடுமையான புயலாக உருவெடுத்துள்ள டோரியன் புயல் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதிக்கு மிக அருகில் நகர உள்ளது என வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.
 
முதலில் 5 ஆம் நிலை புயலாக பஹாமஸை தாக்கிய இந்த சூறாவளி தற்போது வலுவிழுந்து 4 ஆம் நிலை புயலாக ஒரு மணிநேரத்திற்கு 240 கிலோமிட்டர் வேகத்தில் வீசுகிறது என அமெரிக்க தேசிய சூறாவளி மையம் கூறியுள்ளது.
 
ஆனாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு டோரியன் கடுமையாகத்தான் இருக்கும் எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
 
புயலின் பாதை சிறிது திசை திரும்பினால் அது ஃப்ளோரிடாவின் கிழக்கு கடற்கரையை தாக்கக்கூடும் என என்ஹெச்சி கூறியுள்ளது. ஃப்ளோரிடா கடற்கரையை அச்சுறுத்தும் வகையிலாக அடுத்த இரண்டு நாளில் புயல் தாக்ககூடும் என அஞ்சப்படுகிறது.


 
அமெரிக்க மாகாணங்களான ஃப்ளோரிடா, ஜார்ஜியா, வட மற்றும் தென் கரோலினா ஆகியவை அவசர நிலை பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
க்ராண்ட் பஹாமாசில் நிலைக்கொண்டுள்ள டோரியன் புயல் அபாகோ தீவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது.
 
பலத்த காற்றும் பெரும் வெள்ளமும் பஹாமஸின் வடக்கு பகுதியில் இருக்கும் தீவுகளில் ஏற்பட்டது. கிராண்ட் பஹாமாசில் சுமார் 50,000 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இது ஃப்ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
 
இப்போது இந்தப் புயல் மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால் இது வடக்கு நோக்கியோ அல்லது வட மேற்கு நோக்கியோ நகர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பாதையை கணிப்பது கடினமாக உள்ளது. இந்த டோரியன் புயல் மேலும் நிலச்சரிவை ஏற்படுத்துமா எனபது சரிவரத் தெரியவில்லை.