செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (14:51 IST)

'வாரிசு' டிரைலர் விஜய் ரசிகர்களை ஏமாற்றியதா? 'யூட்யூப்' எண்கள் சொல்வது என்ன?

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வையை பெற்றதாகவும் அதனை விஜய் நடித்துள்ள வாரிசு படம் பெறவில்லை என்றும் கூறப்படும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களிடையே காரசார விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. 

நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் துணிவு.  மஞ்சு வாரியர், ஜான் கொக்கென், யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக டிசம்பர் 31ம் தேதி மாலையில் துணிவுப் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. வங்கிக் கொள்ளையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள துணிவு படத்தில் அஜித்தின் தோற்றம், டிரைலரில் இடம்பெற்றிருந்த வசனங்கள் ஆகியவை மிக சிறப்பாக வந்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில்,  தெலுங்கில் பிரபல இயக்குநராக உள்ள வம்சி பைடிபள்ளியுடன் நடிகர் விஜய் இணைந்துள்ள வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 4ஆம் தேதி வெளியானது. ஃபேமலி ஆடியன்ஸ்`ஐ குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கே உண்டான நகைச்சுவை, ஆக்‌ஷன், டான்ஸ், ரொமான்ஸ், பஞ்ச் டயலாக் ஆகியவையும் இடம்பெற்றுள்ளதாக டிரைலரை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். மறுபுறம், வாரிசு திரைப்படம் நேரடி தெலுங்குப் படம் போன்று இருப்பதாகவும் ஒருசில விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவின. 

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் தரப்புக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். 

டிரைலர் மோதல்

இந்நிலையில், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் ( 3 கோடி) பார்வைகளை பெற்றுள்ளதாகவும், வாரிசுப் படத்தின் டிரைலர் இதற்கு சற்றுக் குறைவான எண்ணிக்கையை பெற்றுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவத் தொடங்கின. 

இதனையடுத்து, துணிவு தொடர்பான ஹேஷ்டேக்களை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். எனினும், அதிகாரப்பூர்வ இந்த எண்ணிக்கையை ஏற்க மறுத்த விஜய் ரசிகர்கள் விளம்பரம் செய்யப்பட்டதன் மூலமாக துணிவு படத்தின் டிரைலர் அதிக பார்வையை பெற்றதாக விமர்சித்து பதிவிடத்தொடங்கினர். 

இதற்கு முன்பாக நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மட்டுமே வெளியான ஒரேநாளில் அதிக பார்வையை பெற்ற டிரைலர் என்று விஜய் ரசிகர்கள் கூறி வந்தனர். இதேபோல், பீஸ்ட் படத்தை தயாரித்திருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தங்களது டிவிட்டர் பக்கத்தில், பீஸ்ட் டிரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை பெற்றது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வையை பெற்ற படம்

பயனர் ஒருவர், தென் மாநில மொழிகளிலேயே 24 மணி நேரத்தில் அதிக பார்வையை பெற்றது துணிவு படத்தின் டிரைலர் என்று குறிப்பிட்டார். எனினும், துணிவுப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டூடியோஸ் அல்லது போனி கபூரின் பே வியூ புரொஜெட்ஸ் டிரைலரை 24 மணி நேரத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. 

அதேவேளையில், வாரிசு படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ், டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது அப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலரின் 24 மணி நேர பார்வை எண்ணிக்கை ஆகும். 

தற்போதுவரை, தமிழில் 33 மில்லியன் பார்வைகளையும் தெலுங்கில் 4 மில்லியன் பார்வைகளையும் வாரிசு படத்தின் டிரைலர் கடந்துள்ளது. துணிவுப் படத்தின் டிரைலர் தற்போதுவரை 55 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 

வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வையை பெற்ற இந்திய திரைப்படத்தின் டிரைலராக கே.ஜி.எஃப் 2 டிரைலர் உள்ளது. 

டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் கன்னடத்தில் 18 மில்லியன், தெலுங்கில் 20 மில்லியன், இந்தியில் 51 மில்லியன், தமிழில் 12 மில்லியன் மற்றும் மலையாளத்தில் 8 மில்லியன் என 109 மில்லியன் பார்வைகளை இப்படம் கடந்ததாக தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.