1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 5 ஜனவரி 2023 (14:02 IST)

வாரிசு, துணிவுக்கு ரசிகர் ஷோ கிடையாது!? – தியேட்டர்கள் அதிர்ச்சி முடிவு?

thunivu vs varisu
பொங்கலுக்கு வாரிசு, துணிவு படங்கள் வெளியாகும் நிலையில் அவற்றிற்கு ரசிகர் ஷோ கிடையாது என திரையரங்குகள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’, அஜித் நடித்துள்ள ‘துணிவு’ இரண்டு படங்களும் பொங்கலையொட்டி வெளியாகின்றன. இரண்டு படங்களின் ட்ரெய்லர்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வைரலாகியுள்ள நிலையில் தற்போது இரண்டு படங்களுமே ஜனவரி 11ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வாரிசும், துணிவும் வெளியாகின்றன. சில மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் ஒரே சமயத்தில் வாரிசு, துணிவு திரையிடப்படுகிறது. நீண்ட ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் அஜித், விஜய் படங்கள் வெளியாவதால் ரசிகர்களிடையே ரசிக யுத்தம் தொடங்கியுள்ளது. பொதுவாக விஜய், அஜித் படங்களுக்கு நள்ளிரவு 12 மணி காட்சி, அதிகாலை 4 மணி காட்சி உள்ளிட்ட ரசிகர் ஷோ திரையிடப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை இருவரது படமும் ஒரே நாளில் வெளியாவதால் விஜய், அஜித் ரசிகர்களிடையே மோதல் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வீண் சண்டை, சச்சரவுகளை தவிர்க்க வாரிசு, துணிவு படங்களுக்கு ரசிகர் ஷோ கிடையாது என சில திரையரங்குகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக காலை 8 மணிக்குதான் முதல் ஷோ திரையிடப்படும் என தெரிகிறது. அதுபோல வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளியாகும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் சில காவல்துறை பாதுகாப்பை கோர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K