மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் முன்பு கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது.
தொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக மாஸ்க் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன.
’’நோய்த்தொற்று பரவும் ஆபத்து உள்ள இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் துணி மாஸ்கை அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது’’ என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா வைரஸுக்கான தொழில்நுட்ப நிபுணர் டாக்டர் மரியா வென் கேர்கோவி.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ மாஸ்க்கை அணிய வேண்டும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வைரஸ் பரவத்தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டதட்ட 4 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
’’மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’’ என்கிறார் மரியா.
அதே சமயம், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதை மாஸ்க் குறைக்கும் என்றும், மாஸ்க் அணிவதால் முழு பாதுகாப்புடன் இருப்பதாக மக்கள் உணர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘’மாஸ்க் மட்டுமே கோவிட் 19 வைரஸிடம் இருந்து உங்களை பாதுகாக்காது’’ என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ்.