திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: புதன், 20 மே 2020 (22:40 IST)

கொரோனா வைரஸ்: மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி - சிங்கப்பூரில் நிலவரம் என்ன?

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31 பேருக்கு வைரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இதுவரை 81.4 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

கடந்த 9 தினங்களாக புது நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 50க்கும் குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே ஜூன் 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்றும், இதற்குரிய செலவை மலேசிய அரசு ஏற்காது என்றும் மூத்த அலைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
 
தனிமைப்படுத்தப்படும் மலேசியர் அல்லாத ஒரு நபர், நாள் ஒன்றுக்கு 150 மலேசிய ரிங்கிட் (ஒரு ரிங்கிட் = 17.5 இந்திய ரூபாய்) செலுத்த வேண்டும் என்றும், மலேசியர்கள் இதில் 50 விழுக்காடு செலுத்தினால் போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நிபந்தனைகளுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் போது திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் விளம்பரங்களுக்கான படப்பிடிப்பை நடத்த மலேசிய அரசு அனுமதி அளித்துள்ளது.

படப்பிடிப்பை நடத்த நான்கு மாதங்களுக்கு முன்பே அது தொடர்பான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், ஒரே சமயத்தில் படப்பிடிப்பில் 20 நபர்களுக்கும் மேல் பணியாற்றக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று புதிதாக 570 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய நோயாளிகளில் இருவர் மட்டுமே சிங்கப்பூரர்கள் என்றும், பெரும்பாலானோர் தங்குவிடுதியில் உள்ள அந்நியத் தொழிலாளர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தேதியில் உலகிலேயே மிக அதிகமான விகிதத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளைச் செய்துள்ள நாடாக சிங்கப்பூர் உள்ளது.
 
 முன்பு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது தினந்தோறும் 8 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1.91 லட்சம் பேருக்கு 2.81 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இத்தகவலை சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மாக் தெரிவித்ததாக சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு மில்லியன் மக்களில் 49 ஆயிரம் பேருக்கு என்ற விகிதத்தில் இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் வரும் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.