திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (00:17 IST)

கொரோனா ஆக்சிஜன்: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கொரோனா தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புப் பணிக்காக மட்டும் இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
அப்போது தமிழக அரசு, மத்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் ஆகியவற்றின் வாதங்களை கேட்ட நீதிபதி, "நாடு மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறது. இந்த விஷயத்தில் உள்ளூர் மக்களின் நம்பிக்கையை நாம் பெற்றாக வேண்டும். இதில் எவ்வித அரசியலும் இருக்கக் கூடாது. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலைமை தேசிய நெருக்கடி. எனவே, நாம் தேசத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
 
இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவை மட்டும் இயக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த ஆலையில் எத்தனை தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள். அதில் யார், யார் இருப்பார்கள் என்பதை நிபுணர் குழு முடிவு செய்யும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.
 
முன்னதாக, இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், "உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு: ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவை மட்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. அங்கே 35 டன் ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழ்நாட்டிற்கு மட்டுமே தர வேண்டும்," என வாதிட்டார்.
 
அப்போது நீதிபதி, "இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஆக்ஸிஜன் தேவையை மட்டும் தனித்துப் பார்க்க முடியாது. தேவைக்கு அதிகமாக இருந்தால், பிற மாநிலங்களுக்கு அளிப்பதை தமிழ்நாடு அரசு தடுக்கக்கூடாது," என கருத்து தெரிவித்தார்.
 
இதையடுத்து மத்திய அரசின் சார்பில் சொலிசிடர் ஜெனரல் வாதம், "ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் அனைத்தையும் மத்திய அரசிடமே வழங்க வேண்டும். நிலைமை தொடர்ந்து மாறி வருகிறது. மத்திய அரசுதான் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்," என குறிப்பிட்டார்.
 
=
இதையடுத்து வேதாந்தா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, "நாங்கள் ஆக்ஸிஜன் ஆலையை மட்டுமே திறக்கப்போவதாகவும் கண்காணிப்புக் குழுவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ உள்ளூர் மக்களோ இருக்கக்கூடாது; அரசு அதிகாரிகள் மட்டுமே இடம்பெற அனுமதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.
 
மேலும், "35 டன் திரவ ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், 200 டன் வரை திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இந்த பணிக்கு சுமார் 200 பேர் வரை தேவைப்படுவார்கள்," என ஹரிஷ் சால்வே கூறினார்.
 
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ''ஆணையம் நீதி வழங்குமா என்பது கேள்விக்குறிதான்''
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆவணமாக பிபிசி தமிழ் காட்சிகள் ஏற்பு
அப்போது நீதிபதி சந்திரசூட், ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க எத்தனை நாட்கள் தேவைப்படும் என கேட்டதற்கு, "கடின முயற்சியின் மூலம் 10 - 12 நாட்களில் உற்பத்தியைத் தொடங்கி விட முடியும் என நிறுவனம் நம்புகிறது," என்று ஹரீஷ் சால்வே கூறினார்.
 
இதேவேளை, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கக்கூடிய கட்சிகளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு அழைக்கவில்லை என தூத்துக்குடியில் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆஜரான காலின் கன்சால்வேஸ் வாதிட்டார்.
 
"ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஆலையைத் திறக்க விரும்பினால், அந்த நடவடிக்கையை தமிழக அரசு மூலம் செய்ய வேண்டும். வேதாந்தா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள அந்தப் பணிக்கு அனுமதிக்கக்கூடாது," காலின் கன்சால்வேஸ் கேட்டுக் கொண்டார்.
 
இதைத்தொடர்ந்து ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஜினை வழங்க தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தரவேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டபோது அது இயலாத காரியம் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
 
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மருத்துவத் தரத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிப்பதாகவும், அந்த ஆலையை கண்காணிக்க குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாவட்ட துணை ஆட்சியர், ஆக்ஸிஜன் உற்பத்தி விவரம் அறிந்த இரண்டு அரசு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 
மேலும் தனது உத்தரவில், ஆலைக்குள் பணியாளர்களை அனுப்புவதற்கு முன்பாக கண்காணிப்புக் குழுவிடம் வேதாந்தா நிறுவனம் தெரிவிக்க வேண்டும். ஆக்ஸிஜன் ஆலைக்கு எத்தனை பேர் தேவை என்பதை அந்தக் குழு முடிவு செய்யும்," என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
இதைத்தொடர்ந்து, உற்பத்தியாகும் ஆக்ஸிஜனில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மீண்டும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தபோது, தமிழ்நாட்டின் ஆக்ஸிஜன் தேவை இப்போது முழுமையாக பூர்த்தி செய்யப்படுகிறது. நிலைமை மாறினால் அப்போது நீதிமன்றத்தை மீண்டும் மாநில அரசு அணுகலாம் என நீதிபதி கூறினார்.
=
சர்ச்சையான ஆலை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 2018-ஆம் ஆண்டு மார்ச்22ல் நடந்த போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். அதன் பிறகு அந்த ஆலை விவகாரம் சர்ச்சையான நிலையில், அந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாகக் கூறி ஆலையின் செயல்பாடுகளுக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நீடித்த பல ஆண்டு சட்டப்போராட்டத்துக்கு பிறகு அந்த ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
 
கொரோனா பரவல் காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தியில் மிகையாக உள்ள மாநிலங்களிடம் இருந்து ஆக்சிஜனை வரவழைத்து தட்டுப்பாடு நிலவும் மாநிலங்களுக்கு வழங்க இந்திய விமானப்படை, ரயில்வே துறை ஆகியவற்றின் உதவி நாடப்பட்டுள்ளது.
 
இருப்பினும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை டெல்லி உள்ளிட்ட இடங்களில் அதிகரித்ததால் இந்த விவகாரத்தை அவசர வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனம், தமக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அதை திறக்க அனுமதித்தால் ஆக்சிஜன் உற்பத்தியை செய்து தேவையான மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க இயலும என்று கூறியது.
 
ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு திறக்க தீர்மானம் - முழு விவரம்
ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுங்கள்: தலைவர்கள், சூழலியல் அமைப்பு கோரிக்கை
ஸ்டெர்லைட்: விதிமுறைகளின்படி நடத்தப்பட்டதா துப்பாக்கிச் சூடு?
எனினும், அந்த நிறுவனத்தின் முயற்சிக்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. பிறகு அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை சமீபத்தில் கூட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், கொரோனா கால தேவைக்காக மட்டும் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனை திறக்க ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை நடந்தபோது, தமிழக அரசின் நிலை தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அந்த ஆலையை திறக்க நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.