புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (23:55 IST)

இலங்கையில் சர்ச்சையாகும் பசுவதை தடைச் சட்டம் - என்ன நடக்கிறது?

இலங்கையில் சர்ச்சை தோற்றுவிக்கும் பசுவதைத் தடைச் சட்டம்பட
இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன
.

மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சியிலுள்ள எந்தவொரு உறுப்பினரும், இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் என்ற ரீதியிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

இலங்கையில் மாடறுப்பு நடவடிக்கைகளை தடை செய்யுமாறு சுதந்திரத்திற்கு பின்னரான காலம் முதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த கோரிக்கைகளை இன்று வரை நிறைவேற்ற முடியவில்லை என பலரும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டுக்கு அண்மித்த ஆசனங்கள் இருக்கின்றமையினால், இந்த யோசனையை விரைவில் நிறைவேற்ற முடியும் என அரசாங்கம் கூறுகிறது.

உள்நாட்டு மாட்டிறைச்சி தேவையை பூர்த்தி செய்வதற்காக, மாட்டிறைச்சிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு
இலங்கையில் பசுவதைத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட எதிர்பார்த்துள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவிக்கிறது.

முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் எம்.எவ்.எம்.ரஸ்மின் பிபிசி தமிழுக்கு இதனைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு மனிதர்களும் என்ன உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவரவர் உரிமை எனவும், அதில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு தனிநபர்களோ தலையீடு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார்.

மாடறுப்பு தடை என்பது ஒரு சமூகத்தின் மத உரிமையில் கைவைப்பது மாத்திரமன்றி, இலங்கை நாட்டுக்கும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கும் விடயம் என்பதை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

மாடு வளர்க்கும் விவசாயிகளில்; பெரும்பாலானோர்; பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்களாகவே இருக்கிறார்கள் என கூறிய அவர், மாடு வளர்ப்பில் சிறு அளவிலான சிறுபான்மையினரே ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாடு வளர்ப்பில் ஈடுபடும் ஒருவர் மாடு பால் தரும் நிலையில் இருக்கும் வரையிலேயே அதனை பயன்படுத்துவார்கள் என தெரிவித்த எம்.எவ்.எம்.ரஸ்மின், பால் தராத முதிய வயதை அடையும் போது அதனை இறைச்சிக்காக விற்றுவிடுவார்கள் எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் மாடறுப்புக்கு தடை கொண்டுவரப்பட்டால் மாடு வளர்க்கும் அப்பாவி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திப்பதுடன், உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என எம்.எவ்.எம்.ரஸ்மின் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், இந்த சட்டம் கொண்டு வரப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் எம்.எவ்.எம்.ரஸ்மின் குறிப்பிட்டார்.


இலங்கையில் பசுவதைத் தடுப்பு சட்டத்தை கொண்டு வர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானத்தை தான் உள்ளிட்ட சைவ மக்கள் அனைவரும் வரவேற்பதாக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவிக்கின்றார்.

இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன்
படக்குறிப்பு,
இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன்

இலங்கையில் பசுவதைத் தடுப்பு சட்டத்தை அமல்படுத்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறித்து சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பசுவதைத் தடுப்பு சட்டம் தொடர்பிலான தகவல் வெளியானதை அடுத்து, இலங்கை வாழ் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து போராட்டங்கள் நடத்திய தாம், மாட்டிறைச்சி வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாட்டிறைச்சி வர்த்தக நிலையங்களுக்கான ஏலம் விற்பனைகளையும் தடுக்க சிவசேனை அமைப்பு கடந்த காலங்களில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில், இலங்கையில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துமாறு தாம் பிரதமரிடம் கோரியதாகவும், அதற்கு பிரதமர் சாதகமான பதிலொன்றை வழங்கியுள்ளதாகவும் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவிக்கின்றார்.