1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (12:05 IST)

PUBG தந்த வருமானம் என்ன? நிறுத்தப்படுமா போட்டிகள் - அடுத்தது என்ன?

பப்ஜி தடை என்ற செய்தி கேமிங் உலகை நம்பி இருப்பவர்கள் பலருக்கு ஒரு பெரும் இடியாகத்தான் அமைந்தது.

இந்தியாவில் தனது நிறுவனத்துடன் சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனம் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. இருப்பினும் பப்ஜிக்கான தடை நீக்கம் ரத்து செய்யப்படுமா என்பது தெரியவில்லை.

இ-ஸ்போர்ட்ஸ், அதாவது இணைய விளையாட்டுக்களை பல இளைஞர்கள் தங்கள் தொழிலாக ஏற்று அதில் பயணித்து அதில் பணம் பார்த்து வருகின்றனர்.

பப்ஜி தடை என்பதை தாண்டி பல அணிகள், போட்டிகள், பெரும் பரிசு தொகை என வேறொரு பெரிதும் அறியப்படாத ஓர் உலகம் உள்ளது.

இந்தியாவில் பப்ஜி புகழ்பெற்றது போல எந்த ஓர் இணைய விளையாட்டும் இதுவரை புகழ்பெறவில்லை. இந்தியாவில் இந்த விளையாட்டை கோடிக்கணகானோர் விளையாடுகின்றனர்.

இந்த பப்ஜி விளையாடுவதால் அதற்கு அடிமையாவது, உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனை என பல எதிர்கருத்துக்கள் இருந்தாலும் இதை சுற்றி ஒரு பெரிய வர்த்தகம் சுழன்றுக் கொண்டிருக்கிறது.

பப்ஜி போட்டிகள்
பப்ஜி நிறுவனம் 'ப்ளூ ஓல்' என்ற தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருந்தாலும், 'டென்சென்ட்' என்ற சீன தொழில்நுட்ப நிறுவனமே இதன் மொபைல் வடிவத்தை உருவாக்கியது.

இந்த டென்சன்ட் நிறுவனத்தால் நடத்தப்படும் போட்டிகளை தவிர்த்து பல நிறுவனங்கள் அவ்வப்போது பல போட்டிகளை ஒருங்கிணைத்து பெரிய பரிசு தொகைகளை அறிவிப்பதுண்டு.

இதற்காக இந்திய அளவிலான அணிகள், மாநில அளவிலான அணிகள் சிறு குழுக்கள் என அனைத்தும் உண்டு.

"பொதுவாக ஒரு சிறிய போட்டி என்றாலும் அதற்கான பரிசுத் தொகை என்பது ஒரு லட்சத்திலிருந்தே தொடங்கும். இம்மாதிரியான போட்டிகளை நடத்துவதற்கு இந்தியளவில் பல ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். பெரிய நிறுவனங்களால் நடத்தப்படும் போட்டிகள் என்றால் பரிசுத் தொகையும் அதிகமாக இருக்கும்," என்கிறார் `டீம் தமிழாஸ்` என்ற தமிழ்நாட்டை சேர்ந்த பப்ஜி அணியின் சிஇஒ ஞானசேகர்.

``இந்த போட்டிகளை தவிர ஒரு பப்ஜி விளையாட்டாளர் புகழ்பெற்றுவிட்டால் அவருக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும் . இந்த பப்ஜி தடை செய்தியால் சில நிறுவனங்கள் தாங்கள் ஸ்பான்சர் செய்வதை நிறுத்தப்போவதாக ஏற்கனவே தெரிவித்துவிட்டனர். மேலும் இதனால் இம்மாதிரியான போட்டிகளும் நடத்தப்படாமல் போகலாம்.`` என்கிறார் ஞானசேகர்.

இம்மாதிரியான போட்டிகள் ஆன்லைனில் ஸ்டீரிமிங் செய்யப்பட்டு பெரும் பார்வையாளர்கள் அதை காண்பதுண்டு.

இந்தியாவில் புகழ்பெற்ற பப்ஜி விளையாட்டாளர்கள் என்று சொல்பவர்களின் யூட்யூப் சேனல்களை மில்லியன் கணக்கானவர்கள் பின் தொடருகின்றனர்.

பப்ஜி தடை செய்யப்பட்டால் இதை பெரிதும் நம்பியுள்ள கேமர்களை நிச்சயம் பாதிக்கும் என்கிறார் தமிழ்நாட்டில் கேமர்கள் மத்தியில் புகழ்பெற்ற பிரபாகரன்.

இவர் பெருநிறுவனம் ஒன்றில்தான் செய்திருந்த பணியை விட்டுவிட்டு Midfail-YT என்ற சேனலை இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கியுள்ளார்.


முதலீடுகள் உண்டு
"பப்ஜி தடை செய்யப்பட்டால் மொபைல் கேமர்ஸுக்கு பெரும் அடிதான். பல கேமர்கள் இதை வருமானத்திற்காக மட்டும் செய்யாமல் இதை ஆர்வமாக விருப்பப்பட்டு செய்கிறார்கள். ஸ்டீரிமிங் செய்வதற்கான கருவிகள் என இதற்கும் முதலீடுகள் தேவை,"

"பப்ஜி தடை செய்யப்பட்டால் அடுத்தகட்டமாக எந்த விளையாட்டு பிரபலமடைகிறோதோ அதை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் பப்ஜி பெற்ற ரசிகர்களையும், அதன்மூலம் சேனல்கள் பெற்ற பின் தொடர்பாளர்களும் கிடைப்பார்களா என்பது சந்தேகமே," என்கிறார் பிரபாகரன்.

இணைய விளையாட்டாளர்களுக்கு பப்ஜியை தவிர்த்து வேறு போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது பப்ஜி அளவிற்கு பயனளிக்காது என்று கூறுகிறார் ஞானசேகர்.

மேலும் ஏற்கனவே தனக்கு தெரிந்த அணிகள் சிலரின் வருமானம் 80 சதவீத அளவிற்கு குறைந்துவிட்டதாக கூறுகிறார் இவர்.

இதனால் வரும் வருமானம் என்ன?
பிரபகரனின் யூட்யூப் சேனலை இரண்டு லட்சம் பேர் பின் தொடருகின்றனர். யூட்யூப் விளம்பரங்கள் மூலம் மாதம் 15 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் என்றாலும், போட்டிகளை நடத்துவது, அதில் கலந்துகொள்வது, பின் தொடர்பாளர்கள் நன்கொடை வழங்குவது, சேனலின் மூலம் ஏதேனும் செயலியையோ அல்லது பொருட்களையோ விளம்பரப்படுத்துவது, போட்டிகளை தொகுத்து வழங்குவது ஆகியவற்றின் மூலம் வருவாய் வரும் என்கிறார் இவர்.

PUBG யுடன் போட்டியிட வரும் அக்ஷய் குமாரின் FAU: G இன் சிறப்பு என்ன?

சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனம் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் தெரிவித்திருந்தாலும், பப்ஜி விளையாட்டின் தடையை தொடர்ந்து இந்தியாவில் ஃபவ்ஜி என்ற விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் அது ஃபவ்ஜி அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார் பிரபாகரன்.

"அதில் பப்ஜியை போன்று கிராபிக்ஸ் போன்ற அம்சங்களை கொண்டு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பப்ஜியை எதிர்பாத்து போனால் அது பப்ஜி போன்று இல்லையே என்ற வருத்தம்தான் மிஞ்சும் என்றே தோன்றுகிறது," என்கிறார் பிரபாகரன்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.