ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (19:06 IST)

எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசுமைவழி விரைவு சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், அரசு நட்ட எல்லைக் கற்களை பிடுங்கி எறிந்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை மாநில அரசு கட்டாயமாக அமல்படுத்தப் போவதாக அறிவித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது
 
இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டும், திட்டத்தினை கைவிட வலியுறுத்தியும் பல கட்டப் போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இவ்வாறு போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ஆதரவாளர்கள் மீது தடியடி தாக்குதல், கைது நடவடிக்கையும் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
 
இந்த நிலையில் எட்டுவழிச் சாலை திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தை நாடினார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று (திங்கள்கிழமை) வழங்கப்பட்டது. இதன்படி பசுமைவழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
 
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள ராமலிங்கபுரம் ,பூலாவரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் பொது மக்கள் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, கேக் வெட்டி, இனிப்புகள் ஊட்டியும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.
 
இதுகுறித்து எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும் போது, பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தாங்கள் நீதிமன்றத்தை நாடியதாகவும், நீதிமன்றம் மூலம் தங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது என்றும் இனியாவது அரசு இயற்கையையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் எந்த ஒரு காலத்திலும் எட்டு வழிச் சாலை திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறினர்.
 
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசின் தீர்ப்பு குறித்து கவிதா என்னும் விவசாயி கூறும் போது, தங்களின் போராட்டத்திற்கு நீதிபதிகள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாக, தங்களின் குடும்பத்தினரின் சார்பில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
 
மேலும் கூறுகையில், ஆயிரக்கணக்கில் காவல்துறையை கொண்டு தங்களை கட்டுப்படுத்த முயன்றது தங்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாகவும், ஆனால் தீர்ப்பு தங்களை மகிழ்ச்சியுற வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் எட்டு வழிச்சாலைக்காக போடப்பட்ட எல்லைக் கற்களை பொதுமக்கள் ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தங்களை வேதனையுற செய்த, எல்லைக்கற்கள் தங்கள் நிலத்தில் இருக்கக்கூடாது என தூக்கி வீசினர் .
 
ஆனால், இந்த அரசாணையை குறித்து எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை ரத்து தீர்ப்பு மகிழ்ச்சியை தந்தாலும், முழு மனநிறைவை அளிக்கவில்லை என தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில், பசுமைவழி விரைவு சாலை திட்டத்தினை ரத்து செய்வதாக அரசு அறிவிக்காமல் அரசாணை ரத்து என தெரிவித்துள்ளது தங்களின் மனநிலையை வருத்தமடைய செய்துள்ளதாக கூறினார். தற்போதைய தீர்ப்பின் படி பார்க்கும்போது மீண்டும் அரசு புது அரசாணையை கொண்டு வரவாய்ப்பு உள்ளது என்றும், அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் தங்களின் எதிர்ப்பு மிக அதிகமாக வலுக்கும் என தெரிவித்தார்.
 
சேலம் முதல் காஞ்சிபுரம் வரையில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பம் மட்டுமே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருக்கிறது. தாங்களும் தங்களின் உறவுகளும் சேர்த்து நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் தங்களின் கைகளில் உள்ளது என்றும் எட்டுவழி சாலை திட்டம் கொண்டுவராத, விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கே தங்களின் வாக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார். ஒருவேளை புதிய அரசாணைக்காக மேல் முறையீட்டுக்கு அரசு முறையிட்டால் தாங்கள் போராட்டம் மேலும் வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.
 
புதிய சாலை தங்களுக்கு தேவையில்லை என்றவர், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில் மேப்பாலங்கள் கட்ட அரசு முன்வரவேண்டும், அதேபோல் அரூர் வழியாக மாநில நெடுஞ்சாலை போல் இருவழியாக உள்ள அரூர் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழியாக மாற்ற அரசு முயற்சியெடுக்காமல், இயற்கையை அழிக்க முற்படும் அரசுக்கு தங்களின் ஆதரவு கண்டிப்பாய் இருக்காது என்றும் ஒற்றுமையாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வோம் என தெரிவித்தார்.