திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By bala
Last Updated : சனி, 27 மே 2017 (16:36 IST)

பிருந்தாவனம் -விமர்சனம்

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக படத்தில் தோன்றும் அருள்நிதி, அறிமுக காட்சியில் மெக்கானிக் ஷாப் விலாசம் கேட்டு வந்த ஒருவரிடம் தனது முக பாவனைகள், கைஜாடைகள் மூலம் வழி சொல்லும் 'அழகு' படம் முழுவதும் தொடர்கிறது.


 

தான் பணிபுரியும் சலூனில் நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சிகள் மட்டும்தான் தொலைக்காட்சியில் ஓட வேண்டும் என்றளவுக்கு நடிகர் விவேக்கின் தீவிர ரசிகராக அருள்நிதி தோன்றுகிறார். பெரும்பாலும் வசனங்கள் பேச முடியாது, முக பாவனைகள் மற்றும் பாடி லாங்வேஜ்தான் பேச வேண்டும் என்ற சவாலை ஏற்று தன்னால் முடிந்தளவு அருள்நிதி சிறப்பாக செய்திருக்கிறார்.

படம் முழுக்க நடிகராகவே வலம் வருகிறார் விவேக். ஊட்டிக்கு தனது சொந்த பணியின் முன்னிட்டு வந்த அவர், தற்செயலாக அருள்நிதியை சந்திக்கிறார். அருள்நிதி தனது ரசிகர் என்பதும், அவர் ஒரு வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளி என்றறிந்து அவரது நண்பராகி விடுகிறார். அருள்நிதிக்கும், மற்றவர்களுக்கும் திரையில் விட்டுக்கொடுத்து இயல்பாக ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற வகையில் விவேக்கின் பங்கு சிறப்பாக இருந்தது.

அருள்நிதி மற்றும் விவேக்கின் பங்களிப்பை விவரித்து விட்டு, தான்யாவின் அழகையும், நடிப்பையும் சொல்லாமல் விட்டால் எப்படி? தான்யாவின் அழகு நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும். ஓரிரு காட்சிகளை தவிர்த்து, படம் முழுக்க மாடர்ன் டிரஸ்ஸில் பளிச்சென்ற புன்னகையுடன் படத்தில் வலம் வருகிறார் தான்யா. அருள்நிதி, விவேக் என சகல கதாப்பாத்திரங்களையும் தனது அதிகார தொனியில் அவர் மிரட்டுவதும் அழகு.


படத்தின் வசனம் பல இடங்களில் ரசிக்கும்படியாக இருந்தது. விவேக் என்றில்லாமல், அனைத்து கதாப்பாத்திரங்களும் தங்களால் முடிந்த அளவு நகைச்சுவையாக நடித்திருக்கிறார்கள். ''அவர் எவ்வளவு குண்டா இருந்தான் தெரியுமா? இரண்டு நாள் ஆச்சு, அவன் படம் டவுன்லோட் ஆக'' போனற நகைச்சுவைகள் இயல்பாகவும், சிரிக்கும்படியாகவும் அமைந்துள்ளன. அழுத்தமான கதாபாத்திரமாக பிரமாதப்படுத்தியுள்ளார், எம்.எஸ். பாஸ்கர். தனது குடும்பத்தை இழந்து வாழும் நிலையை விவரிக்கும் காட்சியிலும், அருள்நிதிக்காக மற்றவர்களிடம் வாதாடும் போதும் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு இயல்பு.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், ஓகே ரகம். விவேகானந்தனின் கேமரா ஊட்டியின் அழகை நன்றாக படம்பிடித்துள்ளது.




அருள்நிதி, தான் பணிபுரியும் சலூனில் விடுப்பு எடுத்து விவேக்கின் கார் டிரைவராகி விட, விவேக், அருள்நிதி மற்றும் அவர் நண்பர் ஆகிய மூவரும் ஊட்டியை சுற்றுகின்றனர். ஒரு கட்டத்தில் தான்யாவும் இவர்களின் நட்பு வட்டத்தில் இணைய தான்யாவுக்கு அருள்நிதியின் மேல் உள்ள ஈர்ப்பை அறிந்து இருவரையும் சேர்த்து வைக்க தன்னாலான முயற்சிகளை விவேக் மேற்கொள்கிறார்.ராதாமோகனின் 'மொழி' திரைப்படத்தில் காதலை முதல்முறையாக உணரும் நாயகன் மற்றும் நாயகிக்கு பல்பு எரியும், மணியடிக்கும். இதே போல், இத்திரைப்படத்தில் தான்யா மற்றும் அருள்நிதி இருவரும் முதல்முறையாக காதலை உணரும் போது வானில் ஏரளமான பறவைகள் சிறகடித்து பறக்கின்றன. இதுதான் ராதா மோகன் முத்திரை போலும்.

படம் முழுவதும் வசனமே பேசாமல், தனது ரியாக்‌ஷன்கள் மூலம் புரிய வைக்கும் அருள்நிதி, தான்யாவின் காதலை தான் ஏற்க மறுக்கும் காரணத்தை முதல் முறையாக வாய் பேசும் போது விளக்குகிறார். தான்யாவின் காதலை அருள்நிதி ஏற்றாரா, தான்யாவின் தந்தையான தலைவாசல் விஜய், தனது மகளுக்காக விட்டுக்கொடுத்தாரா என்பதை யூகிப்பது தமிழ் ரசிகனுக்கும், ராதா மோகன் திரைப்படங்களை பார்த்தவர்களுக்கும் சிரமமில்லை.

விவேக் ஊட்டியில் தங்கியிருப்பதற்கு, ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக அவர் நண்பர் டிராக்கை திணித்திருப்பதாக தோன்றுவதை தவிர்த்திருக்கலாம். மேலும், தனக்கு கிடைக்க வேண்டிய அனுதாபம் கிடைக்காமல் போய் விடும் என்பதற்காக தனக்கு வாய் பேச வரும் என்ற உண்மையை பல ஆண்டுகளாக அருள்நிதி மறைத்துவிட்டார் என்பது கொஞ்சமும் ஒட்டாத லாஜிக்.

வழக்கமான ராதாமோகன் படம்தான். சேஸிங் இல்லை, குத்தாட்டம் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள், துன்பங்கள் வரும். ஆனால், அவை எல்லாம் நாளடைவில் சரியாகி, வாழ்க்கை பூத்துக் குலுங்கும் பிருந்தவனமாகி விடும் என்று சொல்கிறது ராதா மோகனின் பிருந்தவனம்.