1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (21:44 IST)

ராஜஸ்தானில் கைக்குழுந்தையுடன் பணியாற்றும் ஆட்டோ ஓட்டுநர் - குடும்ப வன்முறையை எதிர்கொண்டது எப்படி?

auto
வலிமையான பெண்கள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் வலிமிகுந்த கதை ஒன்று இருக்கிறது என்பார்கள். அந்த வகையில், கைக்குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் ஹேம்லதாவின் வலிமை கதை இது.
 
ராஜஸ்தான் மநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஹேம்லதா. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், 2012ஆம் ஆண்டு வரை குடும்பத்தலைவியாக மட்டுமே இருந்து வந்துள்ளார்.
 
பின்னர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு தன் ஒன்றைரை வயது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அதற்கு முன்பு பலமுறை அவர் இப்படி வீட்டுக்கு வந்தபோது குழந்தைகளின் வாழ்க்கையை காரணம் காட்டி அவரை மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால், 2012ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் தனித்து வாழ முடிவு செய்துள்ளார்.
 
 
இந்தியாவில் கருத்தடையின் சுமையை பெண்களே சுமப்பது ஏன்?
 
இது குறித்து கூறிய அவர், "தாய், தந்தை பிரிந்து வாழ்வது என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று நினைக்கிறார்கள். அதனால் என்னை ஒவ்வோர் முறையும் கணவர் வீட்டுக்கு திருப்பி அனுப்புவர். ஆனால், அன்று ஒருநாள் என்னை மாடியிலிருந்து தள்ளிவிட்டார் என் கணவர். இதில் எனக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது," என்கிறார் ஹேம்லதா.
 
 
அதன்பின்னர்தான் தனித்துவாழ முடிவெடுத்த ஹேம்லதா, தன் வாழ்வாதாரத்துக்காக ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ளார். முன்பே இவரிடம் கனரக வாகனங்களை இயக்குவதற்கான உரிமமும் இருந்தது. அது புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு வங்கிக்கடன் பெற உதவியாக இருந்தது என்றும் தெரிவிக்கிறார் இவர்.
 
தற்போது ஜெய்ப்பூரின் முதல்பெண் ஆட்டோ ஓட்டுநர் இவர் என்று கருதப்படுகிறார்.
 
ஜெய்பூரில் சுமார் 40000 பேர் ஆட்டோ ஓட்டுகின்றனர். அதில் இவரும் ஒருவர். ஆனால், இன்னும் இவரை ஒரு ஆட்டோ ஒட்டுநராக பிற ஆண் ஆட்டோ ஒட்டுநர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் ஹேம்லதா.
 
அவர்கள் என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை. என் ஆட்டோ கண்ணாடிகளை உடைப்பார்கள். அதுமட்டுமன்றி, சிலர் இவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் அவர் புகார் தெரிவிக்கிறார்.
 
ஒரு பெண்ணாக இந்த தொழிலை செய்ய வேண்டியதில்லை என்றும் வீட்டிலேயே இருக்க அவர் வலியுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், அதையும் கடந்து தொடர்ந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். ஏனெனில் தன் கதக் கலைஞர் என்ற அடையாளத்தை அவர் விட்டுக்கொடுத்து விட்டார்.
 
 
பாரம்பரிய நடனக்கலைகளில் ஒன்றான 'கதக்'கில் பட்டம் பெற்றுள்ள இவர் ஏராளமான பரிசுகளையும் வென்றுள்ளார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு எல்லாம் மாறி தற்போது தனக்கு ஆட்டோ ஓட்டுநர் என்பதே அடையாளம் என்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
இது குறித்து பேசிய ஹேம்லதாவின் மகன், "என் அம்மா ஆட்டோ ஓட்டி என்னை வளர்ப்பது பெருமையாக இருக்கிறது" என்று கூறினார். மேலும், பள்ளி முடிந்து தான் வந்ததும் அம்மாவும் தானும் பரஸ்பரம் இன்று என்ன நடந்தது என்று பரிமாறிக்கொள்வோம்" என்றும் தெரிவிக்கிறார்.
 
தன் பிரச்னைகளை சமாளித்துக்கொண்டே ஒரு ஆட்டோ ஓட்டுநராக மாறிய ஹேம்லதா, 2020ஆம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். அந்த ஆண்டில்தான் கொரோனா பேரிடரும் வந்தது.
 
"கையில் பணம் இருந்தால்தான் சமூகம், உறவினர்களிடையே மரியாதை இருக்கும் என்பதை நான் புரிந்துகொண்ட சமயம் அது"
 
நிறைமாத கர்ப்பிணியாக பிரசவ வலியுடன் ஆட்டோ ஓட்டுவதும் பிரசவம் முடிந்த கையுடன் வீட்டுக்கு வரும்போதும் கூட தானே ஆட்டோ ஓட்ட வேண்டிய சூழல் இருந்ததாகவும், தன் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைவு கூர்கிறார் ஹேம்லதா.
 
"2021ஆம் ஆண்டு, கொரோனா சமயத்தில், நான் கருவுற்றிருந்தேன். அந்தச் சமயத்தில் பிரசவ வலியுடன் நானே ஆட்டோ ஓட்டியபடி மருத்துவமனைக்கு சென்றேன். என் கணவர் என்னுடன் இருந்தார். ஆனால் அவருக்கு ஆட்டோ ஓட்டத் தெரியாது. எனவே, பிறந்த குழந்தையுடன் அவர் பின்னே அமர்ந்து வர, நான் ஆட்டோ ஓட்டியபடி மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம். என்னைப் பார்க்கவும் யாரும் வரவில்லை" என்கிறார் அவர்.
 
இந்த இன்னல்களுக்கு மத்தியில் தான் அடையாளத்தை பெற்றுள்ளதாக உணர்கிறார் ஹேலதா. குறிப்பாக, தான் ஒரு நாட்டியக்கலைஞர் என்றாலும், தான் கற்ற 'கதக்' கலை தனக்கு தராத அடையாத்தை, இந்த ஆட்டோ பெற்றுத்தந்துள்ளது. எனவே, ஆட்டோ ஓட்டுநராக தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார் ஹேம்லதா.
 
2012ஆம் ஆண்டில் இவருக்கு நடந்த குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.