ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 29 மே 2021 (11:53 IST)

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கென நடத்தை நெறிமுறைகள் உள்ளனவா?

பாலியல் வன் கொடுமைக்கு ஆளானவர் நடந்துகொள்வதற்கென்று தனி நெறிமுறைகள் உண்டா?
 
தன்னுடன் பணியாற்றும் ஒரு பெண் ஊழியரைப் பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கிய ஒரு மனிதனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை, பாதிக்கப்பட்ட பெண்ணின் நடந்து கொண்ட முறையைக் காரணம் காட்டி ஒரு நீதிபதி தள்ளுபடி செய்ததை அடுத்து இந்தியாவில் பலர் எழுப்பும் கேள்வி இது தான்.
 
நீதிபதி க்ஷமா ஜோஷி, பாலியல் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அந்த இளம் பெண் "புன்னகையுடனும் மகிழ்ச்சியாகவும், சாதாரணமாகவும், நல்ல மனநிலையில் இருந்ததாகவும்" கூறித் தீர்ப்பெழுதியுள்ளார்.
 
"அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்பட்ட உடனேயே எடுக்கப்பட்ட இந்தப் படங்களில், அவர் எந்த வகையிலும் அதிர்ச்சிக்கோ அச்சத்துக்கோ ஆளானதாகத் தெரியவில்லை" என்று அந்த நீதிபதி தனது 527 பக்கத் தீர்ப்பில் எழுதினயுள்ளார்.
 
தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் மூத்த ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்த கோவா அரசாங்கம், வியாழக்கிழமையன்று முன்கூட்டிய விசாரணை கோரியது. "இது எங்கள் பெண்களுக்காக" என்று குறிப்பிட்டுள்ள அரசு, அவர் விடுவிக்கப்பட்ட உத்தரவு "சட்டப்படி தவறானது" மற்றும் "நீடிக்க முடியாதது" என்றும் கூறியுள்ளது. இதை ஒப்புக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை ஜூன் 2 ஆம் தேதி விசாரிப்பதாகக் கூறினார்.
 
'ஒழுக்கம் குறித்த ஐயம்'
 
 
நவம்பர் 2013 இல் கோவாவில் நடந்த ஒரு தெஹல்கா நிகழ்ச்சியில் தேஜ்பால் தொடர்ந்து இரண்டு நாள் இரவுகளில் ஒரு லிஃப்ட்டில் தன்னைத் தாக்கியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். காவல்துறையினர் கிட்டத்தட்ட 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர். அதில், "தவறான கட்டுப்பாடு, தவறான அடைத்து வைத்தல், தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரம் அல்லது கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் ஒருவரால் செய்யப்பட்ட பாலியல் வன்புணர்வு" என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தேஜ்பால் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
 
இந்திய பத்திரிகைத் துறையின் முக்கியமான அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாக அமைந்தன. 2000 ஆம் ஆண்டில் அவர் நிறுவிய தெஹல்கா பத்திரிகை இந்தியப் பத்திரிகைத் துறையில் பல மிகப்பெரிய புலனாய்வு வழக்குகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. அவரது பதிப்பகமான இந்தியா இங்க், இலக்கியத் துறையில் பெரிய பெயர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது. அவர் புக்கர் பரிசு வென்ற அருந்ததி ராய் மற்றும் நோபல் பரிசு பெற்ற வி.எஸ். நைபால் ஆகியோரை அவரது நெருங்கிய நண்பர்களாகக் கொண்டிருந்தார்.
 
அவர் மீது குற்றம் சாட்டிய பெண் அவரது ஊழியர் மட்டுமல்ல, அவர் அவரது நண்பரின் மகள் மற்றும் அவரது மகளின் சிறந்த நண்பர். நீதிமன்றத்தில், அவர் தனக்கு ஒரு தந்தையைப் போலவே இருந்தார் என்றும் அதனால் தான் அவரை நம்பியதாகவும் கூறினார்.
 
தேஜ்பால் விடுவிக்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆரம்பத்தில் தங்களது சந்திப்புகள் இரு தரப்புச் சம்மதத்துடன் தான் நடந்தன என்று கூறியதிலிருந்து திரித்துத் திரித்து, 'தவறான கணிப்பு' என்றும் 'சூழ்நிலையைத் தவறாகப் புரிந்து கொண்டது' , "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு வழிவகுத்தது" என்று கூறினார். முன்னர் அவர் "உன் தெளிவான தயக்கத்தையும் மீறி உன்னுடன் பாலியல் தொடர்புக்கு முயற்சித்தேன்" என்று கூறியிருந்தார். அப்படிக் கூற அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதாகப் பிறகு தெரிவித்தார்.
 
நீதிமன்ற ஆவணங்களில், லிப்டில் நடந்த சம்பவங்களை "குடிபோதையில் நடந்ததாக" விவரித்தார்.
 
தேஜ்பால் விடுவிக்கப்பட்ட பின்னர், நீதிபதி, குற்றம் சாட்டியவர் மீது தனது கவனத்தைத் திருப்பினார். தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண் தனது அறையில் உடன் வசிக்கும் பெண் தோழியிடம் கூறாமல், மூன்று ஆண் சகாக்களிடம் கூறியது குறித்துக் கேள்வி எழுப்பினார் நீதிபதி. ஏன் அந்தப் பெண் தன் நண்பர்களிடம் சொல்லி அழவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் நடந்து கொள்ளும் வழக்கமான முறையில் நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
 
"அவர் கடுமையாகப் போராடியதாகக் கூறுகிறார். ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது நம்பமுடியாததாக இருக்கிறது" என்று நீதிபதி எழுதினார்.
 
இத்தீர்ப்பு கடுமையான விமர்சனத்தைக் கிளப்பியது.
 
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான அபர்ணா பட், "தேஜ்பாலின் தரப்பு, தனது வழக்கைத் தனக்குச் சாதகமாகத் தான் வைக்கும். அதைப் பரிசீலித்துப் பார்ப்பது நீதிபதியின் பொறுப்பு. ஆனால், இங்கு நீதிபதி அந்தப் பெண்ணை மிகவும் அவதூறாகப் பேசுவதாகத் தெரிகிறது. தீர்ப்பும் பாதிக்கப்பட்டவரை மேலும் நோகடிப்பதாகவே உள்ளது" என்று கூறினார்.
 
"அந்த இளம் பெண்ணைப் பற்றிச் சில இழிவான குறிப்புகளும் உள்ளன. அவருடைய உடல் மொழியைக் கொண்டு அவரின் நடத்தையைச் சந்தேகிப்பது, தான் ஏற்கெனவே பாலியல் தொடர்புகளைக் கொண்டுள்ள பல நண்பர்களுடன் அவர் அளவளாவியது குறித்துக் கேள்வி எழுப்புவது என்பவை சரியல்ல" என்கிறார் பட்.
 
"இந்த இளம் பெண்ணை வழக்கமான பாலியல் தொடர்புகள் கொண்ட ஒரு நபராகச் சித்தரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தான் இந்தத் தீர்ப்பில் வெளிப்படுகிறது" என்றும் அவர் கூறினார்.
 
மற்றொரு வழக்கறிஞர், பாயல் சாவ்லா, "இந்தத் தீர்ப்பு ஒரு பெண்ணை அவதூறு செய்வதுடன் அவரது நடத்தையையே மோசமாகச் சித்தரிப்பதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
 
"அந்தப் பெண் ஒரு பாரில் கையில் ஒரு பானத்துடன் பார்ட்டியில் கலந்து கொண்டது இந்த நீதிபதியின் கண்ணை உறுத்தியுள்ளது. பாலியல் வன்புணர்வு நடந்ததா இல்லையா என்று தெரிந்து கொள்வதை விட, அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தைத் தான் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது" என்று திருமதி சாவ்லா கூறுகிறார்.
 
நமது பெண்கள் இப்படி நடந்து கொள்வதில்லை
 
ஒரு இந்திய நீதிபதி ஒரு தவறான தீர்ப்பை வழங்கியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, கர்நாடகாவில் ஒரு நீதிபதி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாகக் கூறப்படும் நபரின் நடத்தை "தகுதியற்றது" என்று அழைத்தபோது சீற்றத்தைத் தூண்டினார்.
 
"இந்தச் செயலைச் செய்தபின் அவர் சோர்வடைந்து தூங்கிவிட்டார் என்று அவர் அளித்த விளக்கம் ஒரு இந்தியப் பெண்ணுக்குத் தகுதியற்றது" என்று நீதிபதி கூறினார், "எங்கள் பெண்கள் அழிந்துபோகும்போது அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அல்ல" என்று கூறினார்.
 
இது குறித்து, பட் இந்தியாவின் தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூன்று பெண் நீதிபதிகளுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் எழுதினார், "பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை என்று ஒன்று சட்டத்தில் இருக்கிறதா? அதை நான் அறியவில்லையா?" என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பிரபல ஓவியக் கலைஞரான @PENPENCILDRAW, அந்தத் தீர்ப்பிற்கு விடையிறுக்கும் வகையில் ஒரு சித்திரத்தை வெளியிட்டு, "பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடத்தை நெறிமுறை வகுக்கும் இந்திய நீதிபதி" என்று தலைப்பிட்டுள்ளார். அது வைரலானது குறிப்பிடத்தக்கது.
 
இதே போன்ற பிற தீர்ப்புகளும் உள்ளன. ஒரு கும்பல் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான ஒரு பெண், பீர் குடிப்பது, புகைபிடித்தல், போதைப்பொருள் எடுத்துக்கொள்வது மற்றும் ஆணுறைகளை தனது அறையில் வைத்திருப்பது போன்றவையும் விமர்சிக்கப்பட்டு, அவரை ஒரு விபச்சாரி என்றும் குறிப்பிட்டனர்.
 
இன்னொரு பெண், தான் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டிய நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து அவரது குறிப்பிடத்தக்க அசாதாரண நடத்தை மற்றும் போக்குவரத்துகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டன.
 
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்த வகையான கேள்விகளுக்கு எதிராக பலமுறை தீர்ப்பளித்துள்ளது - ஒரு பெண்ணின் பாலியல் பின் புலம் அல்லது தன்மை குறித்த அனுமானங்கள் அல்லது உண்மைகள் சம்பந்தமில்லாதவை என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன. பல குறிப்பிடத்தக்க உத்தரவுகளில், நீதிபதிகள் முன் குற்றம் நடந்ததா இல்லையா என்ற ஒரே கேள்வி தான் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் விளக்கினர்.
 
"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஏராளமாக இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரின் தன்மை குறித்து நீதிபதிகள் தொடர்ந்து குறிப்பிடுவது கவலை அளிக்கிறது" என்று திருமதி சாவ்லா கூறினார். "அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் விவரங்களுக்குச் செல்வது சரியல்ல " என்கிறார் அவர்.
 
இந்தப் புதிய வழக்கின் தீர்ப்பைப் படித்தால் இந்த வழிமுறைகள் அனைவரையும் சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த நீண்ட தீர்ப்பில், ஒரு இடத்தில், நீதிபதி ஜோஷி அந்த இளம் பெண்ணின் தாயின் நடத்தை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
"பெரும் அதிர்ச்சிக்குள்ளான தனது மகளுக்குத் தேவையான ஆதரவையும் ஆறுதலையும் அளிக்க அவருடன் செல்ல, தன் திட்டங்களை மாற்றிக்கொள்ளவும் அந்தத் தாய் தயாராக இல்லை." என்று அந்த நீதிபதி எழுதியுள்ளார்.