செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (14:54 IST)

பெட்ரோலிய எண்ணெய் விலை வீழ்ச்சி: வாங்கவே பணம் கொடுக்கும் அமெரிக்கா

வரலாற்றில் முதல் முறையாக எதிர்மறையாக (நெகடிவ்) மாறி இருக்கிறது அமெரிக்க பெட்ரோலிய எண்ணெய் விலை.

 
அதாவது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்குவதற்கு பதிலாக , எண்ணெயை எடுத்து செல்ல வாடிக்கையாளர்களுக்கு பணம் தருகிறார்கள் அமெரிக்காவில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள்.
 
கொரோனா காரணமாக உலகமே முடக்கப்பட்டுள்ளதால் நுகர்வானது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக எண்ணெய்க்கான தேவையும் குறைந்திருக்கிறது.
 
எண்ணெயை யாரும் வாங்காததால் அவை சேமித்து வைக்க அடுத்த மாதம் முதல் இடப் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் பணத்தையும் கொடுத்து எண்ணெய்யையும் தருகிறது அமெரிக்கா.
 
எரிசக்தி துறை பங்கு வர்த்தக நிபுணர் ஸ்டீவார்ட் கிளிக்மேன், "எண்ணெய் நிறுவனங்களின் எதிர்காலம் நம்பிக்கை தருவதாக இல்லை,' என்கிறார். அமெரிக்க எண்ணெய் விலை வெஸ்ட் டெக்சாஸ் இன்டெர்மீடியேட் வகை கச்சா எண்ணெயின் விலையை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. அதன் விலை பேரல் ஒன்றுக்கு மைனஸ் 37.63 டாலராக உள்ளது.
 
எதிர்காலத்தில் இருக்கும் விலைகளின் அடிப்படையில் கச்சா எண்ணெய் இப்போது வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டெர்மீடியேட் வகை கச்சா எண்ணெயின் ஜூன் மாத விலையும் பேரல் ஒன்றுக்கு 20 டாலருக்கு அதிகமாக உள்ளது.
 
ஆனால், முடக்கநிலை நீடித்தால் ஜூன் மாத எண்ணெய் விலையும் குறையலாம் என்கிறார் கிளிக்மேன். இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (ஒபெக்) உறுப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை 10% அளவுக்கு குறைக்க ஒப்புக்கொண்டன. இதுதான் வரலாற்றிலேயே உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்ட அதிகபட்ச அளவாகும்.
 
நாட்டின் தேசிய கையிருப்புக்காக எண்ணெய் வாங்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். எனினும் அமெரிக்க எண்ணெய் கையிருப்பின் முக்கிய சேமிப்பு கூடமான குஷிங்கில் அதிகமாக இருக்கும் 50% உள்பட அமெரிக்காவின் முக்கிய சேமிப்பு கிடங்குகளில் எண்ணெய் இருப்பு கூடிக்கொண்டே போவதாக ஏ.என்.சீ வங்கி கூறுகிறது. அதனால் சேமிக்க இடம் குறைந்து வருகிறது.