புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:07 IST)

பால்கனியில் நடமாடிய ஜவாஹிரி கொல்லப்பட்டது எப்படி?

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை மிரட்டி வந்த அல் காய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை பொறுமையாகப் பதுங்கியிருந்து கொன்றிருக்கிறது சிஐஏ அமைப்பு.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிக்கும்வரை, ஜவாஹிரி பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதியிலோ அல்லது ஆப்கானிஸ்தானுக்குள்ளோ இருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. 

மிகவும் ரகசியமாக உலவிக் கொண்டிருந்த ஜவாஹிரி, அமெரிக்காவின் கண்காணிப்பில் சிக்கியது எப்படி? அவரை எப்படி குறிவைத்துக் கொன்றார்கள் என்பது பற்றி ஒரு அதிகாரி கூறியதாக சில தகவல்களை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-காய்தாவின் அனைத்து நடவடிக்கைகளையும் ஜவாஹிரி ஒருங்கிணைத்து வந்தார். 
 
"அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக ஒரு பயங்கரவாத நெட்வொர்க் பற்றி அமெரிக்காவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தகவல்கள் கிடைத்துக் கொண்டிருந்தன" என்று ராய்ட்டர் நிறுவனம் ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து, நாட்டில் அல்காய்தாவின் நடமாட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் கவனித்து வந்தனர்.

காத்திருந்த சிஐஏ

அந்த அடிப்படையில், இந்த ஆண்டு, ஜவாஹிரியின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பான வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்தனர். அதே இடத்தில் ஜவாஹிரியை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.

ஆனால் உனடியாகத் தாக்குதலைத் தொடங்கிவிடவில்லை. பல மாதங்களாகக் காத்திருந்தனர் என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஆள், அல் ஜவாஹிரிதான் என்பதை படிப்படியாக உறுதி செய்வதற்காக பல்வேறு உத்திகளை அமெரிக்க உளவு அதிகாரிகள் மேற்கொண்டனர். இறுதியில் அவர்தான் அந்த ஆள் என்பதை உறுதி செய்த பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் மூத்த அதிகாரிகளுக்கு விளக்கினர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் அதிபர் ஜோ பைடனிடம் விளக்கியதாக ராய்ட்டர் கூறுகிறது. இதன் பிறகு ஜவாஹிரியைக் கொல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

தலைக்கு 200 கோடி ரூபாய் விலை வைத்திருந்த போதும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டின் பால்கனிக்கு வருவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் கூறியிருக்கின்றனர்.

துல்லியமான திட்டம்

"ஜவாஹிரி இருந்த வீட்டின் கட்டுமானம் மற்றும் தன்மையை ஆராய்ந்து, அதில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, கட்டடத்தின் கட்டமைப்க்கு அச்சுறுத்தல் இல்லாமல், பொதுமக்கள் மற்றும் ஜவாஹிரியின் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், ஜவாஹிரியை கொல்ல முடியும்" என்பதை அதிகாரிகள் உறுதி செய்ததாக ராய்ட்டர்ஸ் குறஇப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில் துல்லியமான திட்டத்தை தேர்வு செய்வதற்கு அதிபர் ஜோ பைடன் முக்கிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியிருக்கிறார். சிஐஏ தலைவர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருக்கின்றனர். திட்டம் குறித்து அப்போது ஜோ பைடனுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டங்களின்போது, ஜவாஹிரிதான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை பைடன் கேட்டதாக ராய்ட்டர்ஸிடம் பேசிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஜவாஹிரி வசித்த வீட்டின் மாதிரி கூட்டத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதை பைடன் ஆய்வு செய்ததாகவும் ராய்ட்டஸ் கூறுகிறது.

அத்துடன் வெளிச்சம், வானிலை, வீட்டின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் என தாக்குதலின் வெற்றியைப் பாதிக்கும் பிற காரணிகள் குறித்தும் பைடன் கேட்டறிந்தார் என்று அந்த அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டம் வழக்கறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு இறுதியில் ஜவாஹிரியைக் கொல்வது விதிகளுக்கு உள்பட்டது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கோவிட் தொற்றுடன் பைடன்

கடைசியாக ஜவாஹிரியைக் கொல்வது தாலிபன்களுடனான உறவைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அது தொடர்பான அதிகாரிகளின் விளக்கத்துக்குப் பிறகு துல்லியான ஒரு வான் வழித் தாக்குதலுக்கு பைடன் அனுமதி வழங்கியிருக்கிறார். அது ஜூலை மாதம் 25-ஆம் தேதி. பைடனுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டிருந்த நேரம். 
2011-ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்ட போது துணை அதிபராக பைடன் இருந்தார். அப்போது பாகிஸ்தானுடனான உறவு எந்த அளவு பாதிக்கப்படும் என்பது குறித்து பைடன் கவலைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அமெரிக்க வீரர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை அமெரிக்க ராணுவத்தின் வீரர்கள் யாரும் ஆப்கானிஸ்தானுக்குள் நுழையவில்லை.
திட்டமிட்டபடி உள்ளூர் நேரப்பட்டி ஜூலை 30-ஆம் தேதி காலை 9.48 மணிக்கு ட்ரோனில் இருந்து ஏவப்பட்ட ஹெல்பயர் ஏவுகணை மூலம் ஜவாஹிரி கொல்லப்பட்டார் என்று அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹெல்பயர் ஏவுகணை 'வெடிக்காத' வகையைச் சேர்ந்தது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதனால் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைத் தவிர கட்டடத்தின் வேறு பகுதி எதவும் சேதமடையவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.