வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (13:37 IST)

ஆப்கானிஸ்தான்: தாலிபன் வெற்றிக்குப் பிந்தைய நாளில் காபூல் வாழ்க்கை - நேரடி தகவல்

ஆப்கன் தாலிபன் போராளிகள் நகரின் முக்கிய சந்திப்புகளில் சோதனைச் சாவடிகளை நிறுவியுள்ளனர். வாகன போக்குவரத்தையும் சரி செய்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாலிபன்கள் தங்கள்வசமாக்கிக் கொண்ட பிறகு அந்த நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் அவர்கள் வந்து விட்டது.

நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி, அவரது அமைச்சரவையின் முக்கிய சகாக்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க படையினரால் ஆளுகையில் இருந்து அகற்றப்பட்ட தாலிபன்கள், அமெரிக்க கூட்டுப்படை விலக்கல் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆப்கன் நகரங்களை படிப்படியாக அவர்கள் கைப்பற்றத் தொடங்கினார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மாதத்துக்குள்ளாகவே அவர்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

இப்போது ஆப்கன் அரசு வீழ்ச்சியடைந்து விட்டது. ஆப்கன் தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் மறுதினம் காபூல் நகரில் வாழ்க்கை எப்படி உள்ளது? பிபிசியின் மாலிக் முடாஸ்ஸிர் தரும் களத்தகவல்களைப் பார்ப்போம்.

நகரில் எங்கு பார்த்தாலும் தாலிபன்கள் நிறைந்திருக்கிறார்கள். எல்லா சோதனைச்சாவடிகளிலும் முன்பு காவல்துறையினரும் ராணுவத்தினரும் இருந்த இடத்தில் இப்போது தாலிபன் ஆயுத போராளிகள் காணப்படுகிறார்கள்.

தலைநகரில் நேற்று இருந்தது போன்ற பதற்றம் காணப்படவில்லை.நகர சாலைகளில் வாகன போக்குவரத்தை தாலிபன்கள் கவனிக்கிறார்கள்.

சாலைகளில் வரும் வாகனங்களை நிறுத்தி அவர்கள் சோதனையிடுகிறார்கள். குறிப்பாக அவர்கள் காவல்துறை, ராணுவ வாகனங்களையோ அதில் பணியாற்றியவர்களையோ தேடுகிறார்கள். தாலிபன்கள் போர்வையில் எவரும் சூறையாடல்களிலோ கொள்ளையிலோ ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தவே இந்த சோதனைகளை நடத்துவதாக தாலிபன்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

விமான நிலையத்தில் என்ன நிலைமை?

காபூல் விமான நிலையத்தில் நிலைமை மிக, மிக மோசமாக உள்ளது. சாலைகளிலேயே குழந்தைகள், இளைஞர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என மக்கள் கூட்டம், கூட்டமாக காத்திருக்கிறார்கள்.சாலையோர புல்வெளி பகுதியிலேயே அவர்கள் இரவைக் கழித்தனர்.

அங்கு சுமார் 10 ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தாலிபன்கள் நவீன ரக ஆயுதங்களுடன் காணப்படுகிறார்கள். அங்கு வரும் மக்களை கலைக்க, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தும் சத்தத்தை கேட்க முடிகிறது.

பல சந்திப்புகளில் விமான நிலைய நுழைவாயிகளின் மீது ஏறி குதிக்க மக்கள் முற்படுகிறார்கள். அந்த வாயில்களில் மின்சார வேலி இருந்தபோதும் அதை மக்கள் பொருட்படுத்தாமல் விமான நிலைய வளாகத்துக்குள் குதிக்க ஒவ்வொருவரும் முற்படுகிறார்கள்.

காபூல் விமான நிலையத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிக்கியவர்களிடம் நாம் பேசினோம். அதில் ஒருவர் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு புறப்படும் விமானத்தில் செல்ல வந்தவர். ஆனால், அவர் நினைத்தபடி அங்கு நடக்கவில்லை. விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் அவரை விமானம் ஏற அனுமதிக்கவில்லை. மக்களில் பலரும் பயணச்சீட்டு அல்லது கடவுச்சீட்டு இல்லாமல் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். உலகின் எந்த பகுதிக்காவது செல்ல கிடைக்கும் விமானத்தில் ஏறலாம் என்று அந்த மக்களில் பலர் கருதியிருந்திருக்கிறார்கள் என்று விமான நிலையத்தில் நடந்த நிகழ்வுகளை பார்த்த பலரும் நம்மிடம் தெரிவித்தனர்.

விமான நிலைய வளாகத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவோ தண்ணீரோ கிடைக்கவில்லை. ஏராளமான பெண்கள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் பலரும் அங்கு இருக்கிறார்கள்.

நகரின் முக்கிய வர்த்தக மையத்தில் இயல்புநிலை

ஆனால், வர்த்தக நிகழ்வுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள நகரின் மையப்பகுதியில் இயல்புநிலை திரும்பியிருப்பதை பார்க்க முடிந்தது. பல இடங்களில் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், நேற்றுடன் ஒப்பிடும்போது நிலைமை அமைதியாகவே இருந்தது. நேற்று, மக்கள் சீற்றத்துடன் காணப்பட்டனர். பலரும் கோபத்துடன் வீதிகளுக்கு வந்தனர்.

வீதிகளில் வெகு சில பெண்களை மட்டுமே நான் பார்த்தேன். சிலர் தனியாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நடமாடினர். சிலர் நீல நிற புர்கா ஆடையை அணிந்திருந்தனர். சிலர் அறுவை சிகிச்சை அறைகளில் பயன்படுத்தப்படும் முக கவசங்களையும் தலை, முகத்தை மறைக்கும் ஆடையையும் அணிந்திருந்தனர். அப்படி செல்வதற்கு தாலிபன்கள் கட்டுப்பாடு ஏதும் விதிக்கவில்லை.

அச்சத்தில் பொதுமக்கள்

வீதிகளில் வழக்கமாக கேட்கப்படும் இசையின் ஓசை அறவே இல்லை. உணவு விடுதிகளில் பின்னணி இசை வழக்கமாக வாசிக்கப்படும். ஆனால் அது நிறுத்தப்பட்டு விட்டது. அங்குள்ள ஊழியர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

இருப்பினும், நகரம் இயங்குவது நின்றுவிடவில்லை. இப்போதைக்கு எல்லா இடங்களிலும் அமைதி நிலவுகிறது. பல குடியிருப்பாளர்களுடன் நான் பேசவில்லை, ஆனால் நான் பயன்படுத்தும் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர் பல தரப்பட்டுவர்களுடன் பேசியிருக்கிறார். ஆச்சரியம் தரும் வகையில் தாலிபன் போராளிகளுக்கு உள்ளூர் மக்கள் வணக்கம் சொல்வதை பார்த்தேன். "ஹலோ, உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கட்டும், வாழ்த்துகள்" - இதுபோன்ற வாழ்த்துகளை அவர்கள் தெரிவித்தனர்.

தாலிபன் போராளிகளும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது - ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்கன் போராளிகள் சிலரிடம் நான் பேசினேன். அதிபர் மாளிகைக்குள் நுழைய நாங்கள் முயன்றோம். ஆனால் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. அதற்கு தங்களுடைய தலைமையின் அனுமதி தேவை என்று அவர்கள் கூறினர். ஆனால் நான் பார்த்த வரையில் ஊடகங்களுடன் நட்பான முறையிலேயே போராளிகள் பேசினர்.

நேற்று நானும் கூட கொஞ்சம் பயந்து தான் இருந்தேன். வன்முறை போன்ற ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமோ என்று பயந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை. அது எதிர்பார்த்ததை விட மிகமிக அமைதியாக இருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் ஆளுகை கை மாறியது இத்தனை அமைதியாக நடந்திருக்கிறது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, அந்த அளவுக்கு எல்லாம் மிக அமைதியாக இருந்தது என்கிறார் முடாஸ்ஸிர்.