க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!
ஏற்கனவே கிரீன்லாந்து மற்றும் கனடாவுடன் மோதிய அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டிரம்ப், தற்போது மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை "அமெரிக்க வளைகுடா" என பெயர் மாற்ற இருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்கும் நிலையில், க்ரீன்லாந்து நாட்டை உரிமை கொண்டாடினார். அதற்கு அந்நாடு தக்க பதிலடி கொடுத்தது.
அதேபோல், அமெரிக்காவின் இன்னொரு மாகாணமாக கனடாவை மாற்ற வேண்டும் என்று டிரம்ப் கூறியதற்கும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் அகண்ட அமெரிக்கா என்ற வரைபடத்தை வெளியிட்டு, மெக்சிகோ வளைகுடாவை "அமெரிக்கா வளைகுடா" என்று பெயர் மாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். "அமெரிக்கா வளைகுடா என்பதுதான் பொருத்தமானது" என்று அவர் கூறியிருக்கும் நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மெக்சிகோ வளைகுடா" என்ற பெயர் 17ஆம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த பெயரை மாற்றுவதாக டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது என்றும், அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் நல்ல உறவு உடன் இருக்க விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து, கனடா, மெக்சிகோ என அடுத்தடுத்து உலக நாடுகளுடன் மோதல் போக்கை, பதவி ஏற்கும் முன்பே டிரம்ப் கடைப்பிடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran