புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (19:20 IST)

பென் ஸ்டோக்ஸ்: ‘மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்’ - வேதனைகளை சாதனைகளாக மாற்றிய கதை

இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். 'மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் பென் ஸ்டோக்ஸ், அவரது பங்களிப்பு அளப்பரியது' என்று இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த பாராட்டுகளை பரவலாக காணமுடிகிறது.

பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதும், பல போட்டிகளில் அவர் இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார் என்பதும் பலரும் அறிந்த ஒன்றுதான் .

ஆனால், கடந்த காலங்களில் ஏராளமான காயங்களையும், தோல்வி பழிகளையும் சுமந்துள்ள பென் ஸ்டோக்ஸ்க்குதான் தெரியும் இந்த வெற்றி எத்தனை இனிமையானது என்று காலத்தை சற்று பின்னோக்கி பார்த்தால் பென் ஸ்டோக்ஸ் சுமந்துவந்த வலி என்ன என்று புரியும்.

2016-ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் கடைசி ஓவரில் மேற்கிந்திய அணி வெற்றி பெற 19 ரன்கள் தேவைப்பட்டது.

கண்டிப்பாக வென்றுவிடலாம் என்று இங்கிலாந்து ரசிகர்கள் நம்பிகையுடன் காத்திருந்தனர். பென் ஸ்டோக்ஸை பந்துவீச இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பணித்தார்.

முதல் 4 பந்துகளிலும் வரிசையாக சிக்ஸர்களை மேற்கிந்திய பேட்ஸ்மேன் பிராத்வெயிட் பறக்கவிட இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

அதிர்ச்சியடைந்த பென் ஸ்டோக்ஸ் மைதானத்தில் வெகுநேரமாக நிலைகுலைந்து அமர்ந்திருந்த காட்சி இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.

அக்காலகட்டத்தில் சமூகவலைதளங்களில் பென் ஸ்டோக்ஸ் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதிக அளவு கேலி கிண்டல்களுக்கு அவர் ஆளானார்.

இது போன்ற ஒரு தர்மசங்கடமான நிலையை அண்மையில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ் சந்திக்க நேரிட்டது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த 2016 டி20 உலகக்கோப்பை போட்டி இறுதியாட்டத்திலும் இதுபோன்ற தர்மசங்கடமான நிலையை ஸ்டோக்ஸ் சந்திக்க வேண்டியதாக இருந்தது.

2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்பூரில் நடந்த லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸிடம் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே தந்தார்.

ஸ்டோக்ஸின் முதல் பந்தும், கடைசி பந்தும் சிக்ஸராக விளாசப்பட்டன. அதன் காரணமாக போட்டியில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் ஒரு நோ பால், ஒரு வைடு என ஸ்டோக்ஸ் பந்துவீச்சு மோசமாக அமைந்தது.

டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் பென் ஸ்டோக்ஸ் காயப்பட்டதற்கு காரணம் பிராத்வெயிட் என்றால் ஐபிஎல் போட்டியில் நியூசிலந்தின் மிட்சல் சாண்ட்னெர் காரணமாக இருந்தார்.

'பென் ஸ்டோக்ஸா? அவரால் முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாது. வெற்றியை காவு கொடுத்துவிடுவார். சாதாரண போட்டிகளில் சிறப்பாக விளையாடிவிட்டு முக்கிய தருணங்களில் கோட்டைவிட்டுவிடுவார்' என்று அவர் குறித்து பலர் சமூகவலைதளங்களில் எள்ளிநகையாடினர்.

ஒரு வெற்றி எல்லா காயங்களையும் மாற்றும். தொடர்ந்து போராடினால் காலம் இன்னொரு வாய்ப்பை அளிக்கும் என்று நம்பினார் பென் ஸ்டோக்ஸ். அந்த நம்பிக்கை நினைவான நாள் ஜுலை 14, 2019.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த தேசம் என்று கூறப்படும் இங்கிலாந்து இதுவரை ஒரு உலகக்கோப்பையைகூட வென்றதில்லை. 1975இல் இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக்கோப்பை முதல் 2015 வரை நடந்த 11 உலகக்கோப்பை தொடர்களில் 3 முறை இறுதியாட்டத்தில் விளையாடியுள்ள இங்கிலாந்தின் தனது முதல் உலகக்கோப்பை கனவை நனவாக்க பென் ஸ்டோக்ஸ் பெரும் காரணமாக இருந்தார்.

யார் இந்த பென் ஸ்டோக்ஸ்?

28 வயதான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் பிறந்தவரல்ல. நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச்சில் பிறந்த அவர் தனது 12-வது வயதில் குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறினார்.

ஸ்டோக்ஸின் தந்தை நியூசிலாந்து ரக்பி அணிக்காகவும், ஸ்டோக்ஸின் தாய் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடியுள்ள சூழலில், இங்கிலாந்தில் நடக்கும் முதல்தர போட்டிகளால் விளையாட ஸ்டோக்ஸுக்கு வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 2011-ஆம் ஆண்டு முதல்முறையாக இங்கிலாந்து தேசிய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.

2011-இல் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவருக்கு 2013-யில்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

பின்வரிசையில் இறங்கி அதிரடியாக பேட்டிங் செய்வது, தனது மிதவேகப்பந்துவீச்சால் முக்கிய விக்கெட்டுகளை எடுப்பது என்று தொடக்கத்திலேயே ஸ்டோக்ஸ் கவனம் பெற்றார்.
ஃபிளின்டாப்புக்கு பிறகு இங்கிலாந்துக்கு கிடைத்த ஆல்ரவுண்டர் என்று ஸ்டோக்ஸ் கொண்டாடப்பட்டார். குறிப்பாக இதே நியூசிலாந்து அணிக்கு எதிராக 2015-இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 85 பந்துகளில் சதமடித்து கிரிக்கெட் உலகை திரும்பிப்பார்க்க வைத்தார்.

அதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 163 பந்துகளில் பென் ஸ்டோக்ஸ் எடுத்த இரட்டைசதம்தான் இன்றளவும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த அதிவேக இரட்டைசதம்.

உலக அளவில் இது இரண்டாவது அதிவேக இரட்டை சதமாக இன்றளவும் உள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் இங்கிலாந்து அணிக்காக செய்த சிறந்த பங்களிப்பு ஐபிஎல் போட்டிகளில் மிக அதிக விலையில் ஏலம் எடுக்க காரணமாக அமைந்தது.

2017 ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிக்காக அவர் ரூபாய் 14.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டி20 போட்டிகளிலும் அவர் முத்திரை பதிக்க துவங்கினார்.

பென் ஸ்டோக்ஸை சுற்றிய சர்ச்சைகள்

2017-இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த ஒரு போட்டிக்கு பிறகு ஓர் இரவுவிடுதியில் இரண்டு பேரை தாக்கியதாக பென் ஸ்டோக்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

2014-ஆம் ஆண்டு தொடர்ந்து குறைந்த ரன்களில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து வந்தது அவருக்கு நெருக்கடியை தந்தது. கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார்.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி தோல்விக்கு பிறகு இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமானவர் என்று ஸ்டோக்ஸ் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

காத்திருந்து சாதித்த பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் வெற்றி இலக்கான 242 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அந்த நேரத்தில் விக்கெட்டுகளை காப்பாற்ற வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்ததால் தனது வழக்கமான அதிரடி ஆட்டபாணியை விட்டுவிட்டு நிதானமான ஸ்டோக்ஸ் விளையாடினார்.

மறுமுனையில் பட்லர் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையில், இறுதிவரை நின்று அணிக்கு வெற்றிதேடித்தர வேண்டும் என்று பொறுமையுடன் ஸ்டோக்ஸ் விளையாடினார்.

அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்த போதிலும் கடைசி ஓவர் வரை விளையாடிய அவர் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் சேர்த்தார்.

உலகக்கோப்பை இறுதியாட்டம் 'டை' ஆனவுடன் சூப்பர்ஓவர் முறையில் போட்டி தீர்மானிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

சூப்பர் ஓவரை சந்திக்க பேர்ஸ்டோ அல்லது ஜேசன் ராய் களமிறங்குவர் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராவண்ணம் பட்லருடன் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.

காயம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் அவரால் அதிரடியாக விளையாட முடியுமா, விரைவாக ஓடி ரன்கள் எடுக்கமுடியுமா என்ற கேள்விகளை புறந்தள்ளி சூப்பர் ஓவரில் இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க அவர் உதவினார்.

கடும் களைப்பையும், காயத்தையும் மீறி முதல் பந்தில் அவர் விரைவாக ஓடி 3 ரன்கள் எடுத்தது ரசிகர்களின் பலத்த கரகோஷத்தை பெற்றது.

இங்கிலாந்தின் 44 ஆண்டுகால உலகக்கோப்பை கனவு நிறைவேறியது. பென் ஸ்டோக்ஸின் பேட்டிங் பங்களிப்பு குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன், ''இது ஒரு மிகச் சிறந்த ஆட்டம். அணிக்காக இக்கட்டான தருணத்தில் ஸ்டோக்ஸ் விளையாடியது தன்னலமில்லாத ஆகச்சிறந்த ஆட்டம். அவரது பேட்டிங்கை பார்க்கும்போது அவர் மனிதசக்திக்கு அப்பாற்பட்டவர் என்று தோன்றுகிறது'' என்றார்.

'ஒரு நல்ல வீரருக்கும், மிகச் சிறந்த வீரருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. நல்ல வீரர் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக பங்களிப்பார். ஆனால், ஒரு மிகச் சிறந்த வீரர் மிக முக்கிய போட்டியில் முக்கிய தருணத்தை தேர்ந்தெடுப்பார்' என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர் ஒருமுறை கூறியிருந்தார்.

அந்த கூற்றை ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் மெய்பித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.