புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (15:15 IST)

தோற்றும் வென்றான் – இந்திய ரசிகர்களை கொள்ளையடித்த வில்லியம்சன்

நேற்றைய உலக கோப்பை ஆட்டத்தில் தோற்றாலும் தனது அபாரமான ஆட்டத்தாலும், தலைமையாலும் உலகமெல்லாம் ரசிகர்களை உருவாக்கியுள்ளார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். முக்கியமாக இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 241 ரன்கள் எடுத்தது. அதை முறியடிக்க இறங்கிய இங்கிலாந்தும் 241 ரன்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது. மீண்டும் சூப்பர் ஓவர் மூலம் ஆளுக்கு ஒரு ஓவர் தரப்பட்டது. அதிலும் இரண்டு அணியும் 15 ரன்கள் எடுக்க மீண்டும் டை ஆனது. இதனால் ரன் ரேட்டிங் மற்றும் அன்றைய ஆட்டத்தில் அதிக பவுண்டரிகள் எடுத்த எண்ணிக்கையை கணக்கிட்டு இங்கிலாந்துக்கு உலக கோப்பை வழங்கப்பட்டது.

இங்கிலாந்து இந்த முறை வெற்றிபெறும் என்று எதிர்பார்த்தாலும் இவ்வளவு சொற்பமாக அதிர்ஷ்டத்தில் வெற்றி பெறும் என யாரும் நினைக்கவில்லை. இந்தியா அரையிறுதி வரை வந்து நியூஸிலாந்திடம் தோல்வியை தழுவிய போது ரசிகர்கள் வருத்தப்பட்டாலும், உடனே மனதை மாற்றி கொண்டு நியூஸிலாந்து உலக கோப்பை வெல்ல வேண்டும் என விரும்பினார்கள். காரணம் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.

இத்தனை நாள் நடைபெற்ற ஒரு ஆட்டத்திலும் எதிரணியை கேவலமாக பேசியதும் இல்லை. தன்னை பெரிய ஆளாக நினைத்து கொண்டதும் இல்லை. ஒவ்வொரு ஆட்டத்தின்போதும், வெற்றியின்போது, தோல்வியின்போதும் மாறாத புன்னகையோடு கேப்டனாய் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றார் வில்லியம்சன். இந்தியா தன்னிடம் தோற்றபோது கூட “இது இந்திய ரசிகர்களுக்கு எவ்வளவு வேதனையை தரும் என்பது எனக்கு தெரியும். ஆனால் போட்டிகளில் இது சகஜம்தான். எனவே இறுதி போட்டிக்கு இந்திய ரசிகர்களும் எங்களோடு இணைந்து எங்களை உற்சாகப்படுத்த வேண்டும்” என்றார். “தோனி நியூஸிலாந்துகாரராய் இருந்திருந்தால் எங்கள் அணியில் சேர்த்து கொண்டிருந்திருப்போன்” என அவர் பேசியது மற்ற நாட்டின் சிறந்த வீரர்களையும் அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம். இப்படி வில்லியம்சனின் நிறைய விஷயங்கள் இந்திய ரசிகர்களை ஈர்க்கவே இறுதி போட்டியில் வில்லியம்சனுக்காக நியூஸிலாந்து வெற்றி பெற வேண்டும் என விரும்பினர். அதிர்ஷ்ட வசமாக இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் இந்த உலக கோப்பை தொடரின் மேன் ஆஃப் தி சீரிஸ் கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது.

தற்போது சமூக வலைதளங்களில் #Williamson என்ற ஹேஷ்டேகுகள் மூலம் வில்லியம்சன் பற்றிய தங்களது எண்ணங்களை பகிர்ந்து அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்திய ரசிகர்கள் வெளிநாட்டு வீரர்களை தூக்கி வைத்து கொண்டாடுவது மிக அபூர்வம். முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் வாக்ஸ், தென் ஆப்ரிக்க வேகபந்து வீச்சாளர் ட் வில்லியர்ஸ் போன்ற வெகு சிலரே இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். அந்த பட்டியலில் இப்போது வில்லியம்சனுக்கும் இடம் கிடைத்துள்ளது.