1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 16 மே 2014 (06:58 IST)

கதிர்காமம் ஆலய உற்சவ தேதிகளில் மாற்றம்

இலங்கையில் ஊவா மாகாணத்திலுள்ள கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றம் மற்றும் தீர்த்த உற்சவம் தொடர்பாக சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் நிர்வாகத்தினால் இந்துக்களின் பஞ்சாங்கம் மீறப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
 
இந்துக்களின் வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி சிங்களவர்களினாலும் வழிபாட்டுக்குரிய தலமாக விளங்கும் கதிர்காமம் முருகன் ஆலயம் பௌத்த சிங்களவர்களினால் றூகுனு தேவாலயம் என தற்போது அழைக்கப்படுகின்றது. இலங்கையில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலமாக இந்துக்களால் கருதப்படும் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் ஆகம விதிகளுக்கு புறம்பான வழிபாட்டு முறைகளே பின்பற்றப்பட்டு வருவதாக நீண்டநாட்களாக இலங்கையில் இருக்கும் இந்து அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.
 
இந்த பின்னணியில் இந்த ஆண்டு வருடாந்த கொடியேற்றம் மற்றும் தீர்த்த உற்சவத்திற்கான முன்னோடியாக இன்று வியாழக்கிழமை கன்னிக்கால் நாட்டப்பட்டுள்ளது. அதன்படி ஜுன் 18ம் தேதி கொடியேற்றமும் 45ஆம் நாள் ஜுலை 17ஆம் தேதி நீர் வெட்டு உற்சவமும் நடைபெறும் என ஆலயத்தின் தலைமை நிர்வாகி சுசீந்திர ராஜபக்ஸவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்துக்களால் தீர்த்த உற்சவம் என கூறப்படுவதே ஆலய நிர்வாகத்தினால் காலப்போக்கில் நீர் வெட்டு என மாற்றப்பட்டுள்ளது.
 
ஆடி அமாவசை தினமான ஜுலை 26ஆம் தேதி கொடியேற்றமும் ஆடி பெளர்ணமி தினமான ஆகஸ்ட் 10ஆம் தேதி தீர்த்தம் என இந்துக்களின் பஞ்சாங்கம் கூறுகின்றது.
 
ஆனால் கதிர்காம ஆலய நிர்வாகமோ கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பஞ்சாங்கத்தை மீறும் வகையில் வருடாந்த உற்சவத்தை உரிய தினத்திற்கு முன்னதாக நடந்துவதாக இந்து அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
 
தான் அறிந்தவரை தனது மூதாதையர் காலம் தொடக்கம் ஆடி அமாவசையில் கொடியேற்றம் நடைபெற்று ஆடிப் பெளர்ணமி தினத்திலே கதிர்காம தீர்த்தம் நடைபெற்று வந்ததாக கதிர்காமம் பாதயாத்திரை குழுவின் தலைவரான வேல்சாமி எனப்படும் எஸ். மகேஸ்வரன் கூறுகின்றார்.
 
சென்ற ஆண்டு வருடாந்த கொடியேற்றத்தையும் தீர்த்தத்தையும் ஓரு மாதத்திற்கு பின் போட்ட ஆலய நிர்வாகம் இந்த ஆண்டு ஒரு மாதம் முன் போட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் அவர் இதற்கான காரணங்களை கூட தங்களால் அறிய முடிவில்லை என்கின்றார்.
 
ஏற்கனவே இம்மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்கப்படவிருந்த தங்களது 54 நாள் பாதயாத்திரையை புதிய தேதி மாற்றம் காரணமாக சில நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளதாகவும் வேல்சாமி எனப்படும் எஸ். மகேஸ்வரன் குறிப்பிடுகின்றார்.
 
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கதிர்காமம் ஆலய நிர்வாகம் இந்துக்களின் பஞ்சாங்கத்தை மீறி இப்படி செயற்படுவது தமக்கு வேதனையையும் கவலையையும் தோற்றுவித்திருப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரம் பிபிசி தமிழோசயிடம் தெரிவித்தார்.