திங்கள், 18 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By Sasikala

யோக முத்திராசனத்தை பயன்படுத்தி தொப்பையை குறைத்திடலாம்

யோக முத்திராசனத்தை பயன்படுத்தி தொப்பையை குறைத்திடலாம்

ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. 


 

 
யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. 
 
நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. 
 
முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது.
 
குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது.
 
செய்முறை:
 
பத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், பின்புறமாக கைகளை குறுக்குவாக்கில் இரண்டு குதிங்கால்களையும் பிடித்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரையீரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். 
 
இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம்.
 
இந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது.