1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (10:12 IST)

உடல் முழுவதும் ஆற்றலை அளிக்கும் ஊர்த்துவ தனுராசனம் !!

Urdhva Dhanurasana
ஊர்த்துவ தனுராசனம் உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது; முதுகுவலியைப் போக்குகிறது. ஊர்த்துவ தனுராசனத்தை சக்ராசனம் என்றும் அழைப்பர்.


ஆனால், சக்ராசனத்தில் முழுமையான சக்கர வடிவில் கால்களின் அருகே கைகள் இருக்கும். ஊர்த்துவ தனுராசனத்தில் கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் இடைவெளி இருக்கும்.

சக்ராசனத்தைப் போலவே ஊர்த்துவ தனுராசனமும் எட்டு சக்கரங்களையும் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

செய்முறை: விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து பாதங்களை உங்கள் புட்டத்தின் அருகே வைக்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் இடைவெளி விடவும். கைகளை உயர்த்தி, தோள்களுக்கும் பின்னால் தரையில் வைக்கவும். விரல்கள் உங்கள் தோள்களை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும். உள்ளங்கைகளையும் பாதங்களையும் நன்றாகத் தரையில் ஊன்றி மூச்சை உள்ளிழுத்தவாறு மெதுவாக உடலை மேலே உயர்த்தவும். தலையை பின்னால் சாய்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். மெதுவாகத் தரையில் படுத்து கால்களையும் கைகளையும் நீட்டி ஆரம்ப நிலையில் படுக்கவும். குறிப்பு தீவிர முதுகுத்தண்டு கோளாறு, இடுப்பு வலி, தோள் மற்றும் மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் ஊர்த்துவ தனுராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

பலன்கள்:

ஊர்த்துவ தனுராசனம் உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது. பலன்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; முதுகெலும்பை பலப்படுத்துகிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது.

முதுகுவலியைப் போக்குகிறது. தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நலன் காக்கிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது. வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்கிறது.

இனப் பெருக்க உறுப்புகளின் பணியை மேம்படுத்துகிறது. கால்களை நீட்சியடையச் செய்கிறது. கால் தசைகளை உறுதியாக்குகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது.